Tuesday, 13 June 2023

‘திராவிடம் / திராவிடர்' என்ற சொல்லின் வழி பேசப்பட்ட மானிடத்திற்கான அரசியல்.-ஆய்வு பகுதி கீற்றிலிருந்து

 வரலாற்றுப் பொது வெளியினில் ‘திராவிடம் / திராவிடர்' என்ற சொல்லின் வழி பேசப்பட்ட மானிடத்திற்கான அரசியல்.

‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லானது இந்திய கலாச்சார - பண்பாட்டு வெளியினில் பரவலாக பண்டைய காலம்தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதனை பல்வேறு வரலாற்று, இலக்கியத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன. குறிப்பாக தமிழக கலாச்சார பொது வெளியினைப் பொருத்தமட்டில் ‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லானது கலாச்சார ரீதியிலும், பண்பாட்டு ரீதியிலும் ஒரு தனித்த இடத்தினைப் பெற்று வரலாற்று வெளியினில் பல சமயங்களில், பல இடங்களில், பல பொருட்களில் தொடர்ந்து இடை நில்லாமல் புழக்கத்தில் இருந்து வந்துள்ளதனை அறிய முடிகின்றது.
பொதுவாகவே ஒவ்வொரு சொல்லும் அது பயன்படுத்தப்படும் சூழலிற்கிணங்க அதன் அர்த்தத்தினைப் பெறுகின்றது. அந்த வகையினில் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லானது சில தளங்களில் ஒரு இனக் குழுவினையோ, மொழிக் குடும்பத்தினையோ, கலாச்சாரத்தினையோ, பண்பாட்டினையோ, நிலத்தினையோ, நாட்டினையோ, சாதியினையோ, இதிகாச - புராண கதை மாந்தர்களையோ குறிப்பதற்காக பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது / வருகின்றது. அந்தகைய சூழலில் இந்த ஆய்வுக் கட்டுரையானது ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லின் வழி பேசப்பட்ட வரலாற்று ரீதியிலான பரிணாம வளர்ச்சிகளையும், அது முன்வைத்த/வைக்கும் அரசியலினையும் பற்றி உரித்த தரவுகளுடன் விளக்க முற்படுகின்றது.
குறிச்சொற்கள்;
திராவிடம், திராவிடர், பண்டிதர் அயோத்திதாசர், பாபாசாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி, ஜவகர்லால் நேரு.
1.0.முன்னுரை:
சொற்கள் என்பது மனித உணர்வுகளையும் எண்ணங்களையும் கடத்தும் மிக முக்கிய காரணியாக அமைந்து வந்துள்ளது. சொற்கள் என்றுமே வெறும் வெற்று ஒலியாக மட்டுமே அமைவது இல்லை. ஒவ்வொரு சொல்லிற்கும், அதற்கான அர்த்தமும், தாக்கமும் இருந்தே வருகின்றது. பொதுவாகவே, ஒரு சராசரி மனிதன் பயன்படுத்தும் பல வார்த்தைகள் எந்தவித தாக்கமும் இன்றி கடந்து செல்கின்ற பொழுது சில சொற்கள் மனித நாகரீகத்தின் பரிணாம மாற்றத்தினையும், மானுடத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கைகளையும் நமக்குள் விதைத்து வந்துள்ளன என்பதை மறுக்க இயலாது. அவ்வகையில் சில சொற்கள் வரலாற்றினில் தனித்த கவனத்தினைப் பெற்றுவந்துள்ளன. சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் போன்ற சொற்கள் உலக அளவில் தனித்த மரியாதையினைப் பெற்றுள்ள பொழுது, இந்திய அளவில் குறிப்பாக தமிழக நிலப்பரப்பினில் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லானதும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கினைப் பெற்று இருக்கின்றன. அந்த வகையினில் இந்த ஆய்வுக் கட்டுரையானது ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லின் வரலாற்று ரீதியிலான பரிணாம வளர்ச்சிகளையும், அது முன்வைத்த/வைக்கும் அரசியலினையும் பற்றி உரித்த தரவுகளுடன் ஆராய முற்படுகின்றது.
1.1.‘திராவிடம் / திராவிடர்’ என்ற ஒற்றைச் சொல் தரும் பல பொருள்கள்:
‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லானது வரலாற்று வெளியில் பல சமயங்களில், பல இடங்களில், பல பொருட்களில் தொடர்ந்து இடை நில்லாமல் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. ஒரு சொல் பொதுவாகவே அது பயன்படுத்தப்படும் சூழலிற்கு இணங்க அதன் உட்பொருளினைப் பெறுகின்றது. அந்த வகையினில் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லானது சில தளங்களில் ஒரு இனக் குழுவினையோ, மொழிக் குடும்பத்தினையோ, கலாச்சாரத்தினையோ, பண்பாட்டினையோ, நிலத்தினையோ, நாட்டினையோ, சாதியினையோ, இதிகாச-புராண கதை மாந்தர்களையோ குறிப்பதற்காக பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது/வருகின்றது.
ஆச்சார்ய வஜ்ரநந்தி என்ற சமண அறிஞர் 469ல் (பொது நூற்றாண்டு) மதுரையில் ‘திராமிழ சங்கா’ என்ற நிறுவனத்தை நிறுவி தமிழ் மொழியினையும், சமண சமயக் கருத்தியலையும் இம்மண்ணில் வளர்க்க ஏற்படுத்தியதாக அறியமுடிகின்றது. தமிழ் சங்கம் என்ற கருத்தாக்கமே மேற்குறிப்பிட்ட சமண சமய சங்கத்தின் அடிப்படையிலேயே பின்னாளில் கட்டமைக்கப்பட்டது என மொழியியலாளர் ஜீயார்ஜ் ஹார்ட் அவர்கள் குறிப்பிடுகின்றார். (Hart. 1975: 9-10)
‘திராவிட’ என்ற சொல்லானதும் ஒரு குறிப்பிட்ட இன மக்களைக் குறிக்கின்றது என மோனியர் வில்லியம்ஸ் அவர்கள் தனது சமஸ்க்ருத-ஆங்கில நிகண்டினில் குறிப்பிடுகின்றார். (Williams. 1872.) பதின்மூன்றாம் நூற்றாண்டினைச் சார்ந்த ப்ராகிருத இலக்கண நூலானது ’திரமிழ’ (dramila) என்ற சொல்லினை ஒரு குறிப்பிட்ட சாதியினைப் பற்றி குறிக்கப் பயன்படுத்தியது. (Dravidian Encylopaedia. 1990: 233.) மகாபாரதம் (பாகம் 2. 27.), நாட்டிய சாத்திரம் (இருபத்தி ஏழாம் தொகுதி. 36.), மனுஸ்ரும்தி (பத்தாம் பாகம். 43.) போன்ற பார்ப்பனீய (Brahmanical) இதிகாச-இலக்கியங்கள் ஆரியர் அல்லாத மக்களை குறிக்க ‘திராவிட’ என்ற சொல்லினைப் பயன்படுத்தி வந்துள்ளதினை அறியமுடிகின்றது. இவற்றினில் மனுஸ்ரும்தியானது ‘திராவிட’ என்ற சொல்லினை ‘பண்பாட்டு அளவில் சீரழிந்த கீழான சத்திரியர்கள்’ என்ற அர்த்தம் பொருள்படும் படியான வகையினிலேயே பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். (Mani. 1975: 246.) ‘திராவிடம்’ (Tiravidam) என்ற சொல்லினைப் பற்றி அபிஞாண சிந்தாமணி குறிப்பிடும் பொழுது தமிழ் மக்களைக் குறிக்க ஆரியர் பயன்படுத்திய சொல் என்றே குறிப்பிடுகின்றது. (Mudaliyar. 1982.)
மூன்றாம் மற்றும் இரண்டாம் (பொது நூற்றாண்டிற்கு முந்தைய) நூற்றாண்டினைச் சார்ந்த இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சான்றுகளில் உள்ள ‘டமேட’ (dameda) அல்லது ‘டமேழ’ (damela) அல்லது ‘டமிழரட்ட’ (damilarattha) என்ற சொல்லாடல்களானது இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தமிழக வணிகர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது. (Pillai. 54-59.) இதுவே வரலாற்றினில் ஆரியர் அல்லாத தனித்த இனக் குழுக்களைப் பற்றி குறிக்கும் வகையினில் பயன்படுத்தப்பட்ட முதல் சொல்லாக அறிய முடிகின்றது. (Dravidian Encylopaedia. 1990: 233.) சமண இலக்கியத் தரவுகளானது தென்னிந்திய மக்களை குறிப்பதற்காக ‘திரமிழ’ என்ற சொல்லினை பயன்படுத்தியதாக ப்ராகிருத - இந்தி சொல்லகராதி மூலம் அறியமுடிகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல். 233.)
சி.பி. ப்ரெளன் அவர்களின் தெலுங்கு-ஆங்கில நிகண்டானது ‘பஞ்சதிராவிட’ என்ற சொல்லினை திராவிட, கர்நாடக, குர்ஜார, மகாராட்டிர மற்றும் தெலுங்க மக்களைக் குறிக்கப் பயன்படுத்தினர். (மேற்குறிப்பிட்ட நூல். 234.) அதேபோல், மலையாள-ஆங்கில நிகண்டானது ‘பஞ்சதிராவிட’ என்ற சொல்லினை தமிழ், கேரள, துளுவ, கர்னாடக மற்றும் ஆந்திர மக்கள் குழுவினைக் குறிக்கப் பயன்படுத்தி உள்ளதனை அறிய முடிகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல்.233.) அகிட்டிஜாதகா (Akittijataka) என்ற புத்தமத கருத்தியல் சார்ந்த இலக்கியமானது காவேரிப்பட்டினம் என்ற நிலப்பரப்பினைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிக்கவே ‘திராவிட’ என்ற சொல்லினை பயன்படுத்தியதாக அறியமுடிகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல்.) இவற்றைத் தவிர்த்து, வித்தியாசமாக ‘திராவிட’ என்ற சொல்லினை ஆந்திர, கர்நாடக, குர்ஜார, திரைலிங்க மற்றும் மகாராட்டிர நிலப்பரப்பில் உள்ள மக்கள் குழுவினை குறிப்பாக பார்ப்பனர்களைப் பற்றி குறிக்கவும் பயன்படுத்தியதனை மோனியர் வில்லியம்ஸ் தனது சொல்லகராதியினில் குறிப்பிடுகின்றார். (Williams. 1872.) கன்னட-ஆங்கில நிகண்டானதும் ‘திராவிட’ என்ற சொல்லினை தென்னிந்திய பார்ப்பனர்களைப் பற்றி குறிப்பிட பயன்படுத்தியதனை அறிய முடிகின்றது. (Dravidian Encylopaedia. 1990: 233.)
தென்னிந்திய நிலப்பரப்பினைப் பற்றி குறிப்பிடும் வகையினில் ‘டமிழரட்ட’ (damilarattha) என்ற சொல்லானது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். ‘திராவிட’ என்ற சொல்லினைப் பற்றி சமஸ்க்ருத-ஆங்கில நிகண்டானது குறிப்பிடும் பொழுது அதனை தக்காண பீடபூமியின் கிழக்கு கடற்கரை நிலப்பகுதியினுள் உள்ள நாடு என்று பொருள்படும்படி குறிப்பிடுகின்றது. அதே பொருள்படும்படியே, ‘டமிரிகே’ (damirike) என்ற கிரேக்க சொல்லும் (Schoff. 1912.), ‘லிமிரிகே’ (limirike)) என்ற இலத்தீனிய சொல்லும் (McCrindle. 1883.) குறிப்பிடுகின்றது. இலங்கையின் நான்காம் நூற்றாண்டினைச் (பொது நூற்றாண்டு) சார்ந்த பாலி மொழி பெயர்ச் சொல்லகராதியில் ‘டமிழ’ (damila) என்ற சொல்லின் அடிப்படையானது இந்திய நிலப்பரப்பின் கிழக்கு கடற்கறையினைச் சார்ந்த மக்களை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (Dravidian Encylopaedia. 1990: 233.) அதேபோல் ‘திராவிடம்’ (dravidam) அல்லது ‘திராமிடம்’ (dramidam) என்ற மலையாளச் சொல்லும், ‘திராவிடம்’ (dravidam) அல்லது ‘திராவிளம்’ (dravilam) என்ற கன்னட சொல்லும் தக்காண பீடபூமியின் கிழக்கு கடற்கரை நிலப்பகுதியினுள் உள்ள நாடு என்றே குறிப்பிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், ‘திராமிடம்’ என்ற சொல்லினை முதன் முதலாக பதினைந்தாம் நூற்றாண்டினைச் (பொது நூற்றாண்டு) சார்ந்த லிலாதிலகம் என்ற நூலினுள் பயன்படுத்தியதனையும் அறியமுடிகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல்.)
‘திராவிடமு’ (dravidamu) என்ற தெலுங்கு சொல்லானது ஆந்திர, கர்நாடக, குர்ஜார மற்றும் திராவிட மக்கள் வாழும் நிலத்தினைக் குறிக்கின்றது. மேலும், ‘திராவிடம்’ (tiravitam) என்ற சொல்லாடாலும் ஆந்திர, தமிழ் நாடு, கர்நாடக மற்றும் மராட்டிய நிலங்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. (Mudaliyar. 1982.) பத்ரபாகு என்பவரால் இயற்றப்பட்ட சமண சமய கருத்தியல் சார்ந்த பிரிஹட் கல்ப பாஸ்ய (Brihat Kalpa Bhashya) என்ற நூலானது திராவிட நாட்டினில் குளங்கள் மூலம் விவசாயம் நடைபெற்றது என்ற குறிப்பினைப் பற்றி குறிப்பிடுகிறன்து. (Dravidian Encylopaedia. 1990: 233.) பன்னிரெண்டாம் நூற்றாண்டினைச் (பொது நூற்றாண்டு) சார்ந்த ஹேமச்சந்திரனின் ஸ்தவிரவலி சரித (Sthaviravali Charita or Parisishtaparvan) என்ற நூலின் மூலம் அசோகப் பேரரசரின் பேரப்பிள்ளையான சம்ப்ரதி (Samprati) என்பவர் சமண துறவிகளை திராவிட நாடு உட்பட பல நாடுகளுக்கு சமணக் கொள்கைகளை பரப்ப அனுப்பியதாக அறிய முடிகின்றது. (Chandra. 1977: 75.)
அதுமட்டுமல்லாமல், ‘திராவிட’ என்ற சொல்லானது குறிப்பாக தமிழ் நிலப்பரப்பினைப் பற்றி குறிப்பிடவே பெரும்பாலும் பயன்படுத்தியதனையும் வரலாற்று ஆவணங்களும் இலக்கியத் தரவுகளின் மூலம் அறியமுடிகின்றது. உதாரணங்களாக செங்கடலினைச் (எரித்ரேயன் கடல்) சார்ந்த பெரிப்ளஸ் (Periplus of the Erythraean Sea) என்ற நூலானது ‘டமிரிகே’ (damirike) என்ற நிலப் பரப்பு ஆந்திர நிலத்தின் நீட்சி என்று குறிப்பிடுகிறது. (Schoff. 1912: 138.) தெலுங்கு மொழியிலும் ‘திராவிட’ என்ற சொல்லென்பது தமிழ் நாட்டினைப் பற்றி குறிப்பிடவே பயன்படுத்தபட்டு வந்துள்ளது என்பதையும் அறியமுடிகின்றது. வாகஸ்பட்யம் (Vacaspatyam) என்ற சமஸ்க்ருத நிகண்டும் ‘திராவிட’ என்ற சொல்லின் மூலம் தென்-கிழக்கு இந்திய நிலப்பகுதியினைப் பற்றியே குறிப்பிடுகின்றது. (Tarkavachaspati. 1962.)
பாலி மொழி பெயர்ச் சொல்லகராதியின் கூற்றின்படி அங்குட்டர நிகய (Anguttara Nikaya 338 and Commentary) என்ற நூலானது ‘திரமிழபாஷா’ (dramilabhasa) என்ற சொல்லின் மூலம் ஆரியர் அல்லாத மக்கள் பேசும் மொழி என்ற பொருள்படும்படி பயன்படுத்தப் பட்டுள்ளதனை அறிய முடிகின்றது. (Dravidian Encylopaedia. 1990: 233.) ப்ராக்ருதம், தமிழ் மற்றும் மலையாள நிகண்டுகள் ‘திராவிடி’ (dravidi) என்ற சொல்லினை ஒரு குறிப்பிட்ட மொழியினைக் குறிக்கவே பயன்படுத்தியதனை அறியமுடிகின்றது. (நாட்டிய சாத்திரம். XVIII.43.) ‘தமிழி’ (damili) என்ற சொல்லானது சமண மதக் கருத்தியல் நம்பிக்கையின் அடிப்படையில் பதினெட்டு எழுத்து வடிவமைப்பினுள் ஒன்றாகவும் (Mahalingam. 1974: iii.), ‘திராவிடலிபி’ (diravidalipi) என்ற சொல்லானது புத்த மதக் கருத்தியல் நம்பிக்கையின் அடிப்படையில் அறுபத்து நான்கு எழுத்து வடிவமைப்பினுள் ஒன்றாகவும் குறிப்பிடப் படுகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல். 130-134.) ‘திராவிட வேதம்’ என்ற சொல்லானது வைணவத்தின் தமிழ் வேத மரபினைப் பற்றி குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை லிலாதிலகம் என்ற முன்னர் குறிப்பிட்ட மணிப்பிரவாள மலையாள இலக்கியமானது குறிப்பிடுகின்றது. (Dravidian Encylopaedia. 1990.)
அதுமட்டுமல்லாமல், இதிகாச புராணங்களிலும் ‘திராவிட’ என்ற சொல்லானது ஒரு சில புராண கதை மாந்தர்களைப் பற்றி குறிப்பிட பயன்படுத்தியாதாகவும் அறிய முடிகிறது. குறிப்பாக, இச்சொல்லானது ஸ்ரீகிருட்டிணரின் மகனான விருஸபாஸ்வாமின் (Vrishabhasvamin) மகன்கள் மற்றும் மனுவின் மகன்களில் ஒருவரான ப்ரியவரத (Priyavrata) என்ற அரசனின் குடும்பத்தினைச் சார்ந்த மக்களின் பெயராகவும் (Mani. 1975: 246.), உக்கிர சேனரின் மனைவியினை பாலியல் வற்புணர்ச்சிக்கு உட்படுத்தி அதன் மூலம் கம்சனின் தந்தையான ஓர் கந்தர்வரின் பெயராகவும் (மேற்குறிப்பிட்ட நூல்.), ஒன்பது யோகிகளில் ஒருவர் (திரமிழன்) எனவும் இருந்து வந்துள்ளதனை அறிய முடிகின்றது. (Dravidian Encylopaedia. 1990.)
1.3.சங்ககாலத்தில் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லின் மூலம் முன்வைக்கப்படும் வாதங்கள்:
‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லானது சங்க காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதனை அறியமுடிகின்றது. உலகம் முழுவதும் ‘திராவிடம்’ என்ற சொல்லானது தமிழ் நிலத்திற்கானதாகவும் தமிழ் நிலத்தினில் வாழ்ந்த மக்களைக் குறிக்கும் பெயராகவுமே இருந்து வந்துள்ளதனை வரலாற்று-இலக்கியத் தரவுகள் அளிக்கின்றன. உலகின் புகழ் பெற்ற வரலாற்றாசிரியரான ஹெரடோடஸ் அவர்கள் ‘திராவிடர்கள்’ என்பதை அறிந்து இருந்ததை அவரது குறிப்புகளின் மூலம் அறிய முடிகின்றது. (Schoff. 1912: 213.)
கிரேக்க மொழியில் ‘திராவிடம்’ என்ற சொல்லினை பின்வருமாறு பயன்படுத்தினர், ‘Δράβιδα’. முதலாம் நூற்றாண்டினைச் சார்ந்த (பொது நூற்றாண்டு) கிரேக்க மொழிப் பயண இலக்கியமான செங்கடலினைச் சார்ந்த பெரிப்ளஸ் (Periplus of the Erythraean Sea) என்ற நூலானது பண்டைய கடல் பயண வழிகளையும், வாணிபம் தொடர்பான தரவுகளையும் முடிந்தவரை வரலாற்று பிழைகளின்றி கொடுக்கக் கூடிய ஒர் அறிய நூலாகும். அந்த நூலானது இன்றைய தமிழக நிலப்பரப்பினையும், அங்கு வாழ்ந்த மக்களினையும் குறிக்க திராவிடம்/திராவிடர் என்ற சொல்லினையே பயன்படுத்தி உள்ளது. (மேற்குறிப்பிட்ட நூல். 138.) மேலும், அந்த நூலானது ஆரியர்கள் (பார்ப்பனீயக் கருத்தியலானது) தென்னிந்தியாவில் நிலை பெற்றிருந்த திராவிட இனக்குழுவின் மீது பண்பாட்டு திணிப்பிணைச் செய்ய முற்பட்டதினையும் எடுத்தியம்புகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல்.)
கிரேக்க வார்த்தையான Oryza என்ற சொல்லும், அரேபிய வார்த்தையான al-ruzz அல்லது நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் rice, riso, riz, arroz மற்றும் இன்னும் பிற வார்த்தைகளும் தமிழ் சொல்லான அரிசி என்பதிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் பாரசீக சொல்லான virinzi அல்லது சமஸ்கிருத சொல்லான vrihi என்பவைகளில் இருந்து கிடைக்கவில்லை என்ற கருத்தினை முன்வைத்தவரான (மேற்குறிப்பிட்ட நூல். 176.) செங்கடலினைச் சார்ந்த பெரிப்ளஸ் நூலின் ஆசிரியர் அவர்கள் மேலும் குறிப்பிடுவதாவது, ‘தமிரிக’ (Damirica) என்ற சொல்லின் மூலம் சுட்டுவது தமிழர்களின் நாடு என்றும், அந்த பகுதியினை ஆண்ட முதலாம் நூற்றாண்டினைச் சார்ந்த விடுதலைப் பெற்ற தனித்த சேர - சோழ - பாண்டிய அரசுகளை திராவிடப் பேரரசு என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, அவர்கள் ஆண்ட நிலப்பிரப்பினை ‘திராவிட தேசம்’ என்ற சொல்லாடல்களைக் கொண்டும் குறிப்பிட்டுள்ளார். (மேற்குறிப்பிட்ட நூல். 197, 205.)
ஓல்ட்ஹம் எனும் அறிஞரும் பண்டைய சேர மன்னர்கள் திராவிடர்களேயாவர் என்று குறிப்பிடுகின்றார். (Oldham. 1905: 157.) சேர வாரிசுகளே (சேரபுத்திரர்) திராவிட அதிகாரத்தினை தென்னிந்தியாவில் நிலைநிறுத்தினர் (Schoff. 1912: 208.) என்றும், தென்னிந்தியாவில் இருந்த திராவிடர்கள் மிகச் சிறந்த வணிகர்களாகவும், இலங்கை போன்ற நாடுகளில் தங்களது காலனியாதிக்கத்தினை நிலைநிறுத்தி, அங்கே இருந்த சிங்கள மக்களை அடக்கி, முத்து குழிப்பில் அன்று சிறந்திருந்த இலங்கையின் வடக்கு மாகாணங்களை ஆண்டனர் என்றும் (மேற்குறிப்பிட்ட நூல்.239.) செங்கடலினைச் சார்ந்த பெரிப்ளஸ் நூல் குறிப்பிடுகின்றது. அது போலவே இரண்டாம் நூற்றாண்டினைச் சார்ந்த தொலெமி (Ptolemy) எனும் கிரேக்க அறிஞரும் திமிரிகே (Dimirike) என்று தமிழக நிலத்தினைப் பற்றி தனது நூலான, Geographike Hyphegesis--ல் குறிப்பிடுகின்றார். (McCrindle. 1883.)
1.4.இடைக்காலத்தில் ‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லின் மூலம் முன்வைக்கப்படும் வாதங்கள்:
‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லானது தமிழக வெளியினில் பார்ப்பனீயக் கருத்தியலின் எதிர்ச் சொல்லாகவே இடைக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதனை இடைக்கால வரலாற்று தரவுகளிலும், இலக்கியங்களின் வழியும் அறியமுடிகின்றது. பக்தி இலக்கிய ஆளுமைகளில் தலைசிறந்தவர்களில் ஒருவராக கருதப்படும் சைவ சமய குறவரான திருஞானசம்பந்தர் அவர்களை ‘திராவிட சிசு’ (draviďa śiśurāsvādya) என்று ஆதிசங்கரர் அவர்கள் தனது சொந்தர்ய லகரி நூலினுள் குறிப்பிடுகின்றார். (Subrahmanya Sastri and Srinivasa Ayyangar. 1937: 212-217.) இங்கே பார்ப்பன குலத்தினைச் சார்ந்த திருஞானசம்பந்தர் அவர்களை ‘திராவிட சிசு’ என அழைக்கவும், அவ்வாறு அழைத்ததன் நோக்கமும் ஆதிசங்கரர் பார்வையில் அவரை குறைத்து மதிப்பிடுவதற்காகவே என அறிய முடிகிறது.
திருஞானசம்பந்தர் அவர்கள் பார்ப்பனர் குலத்தினில் பிறந்திருந்த போதிலும், ஆரிய (பார்ப்பன) கருத்தியலினை முற்றாக ஏற்றவராக அறியமுடியவில்லை. பார்ப்பனியத்தின் ‘ஆதிக்கத் தன்மையினை’ தவிர்த்து தமிழ் மரபின் அடிப்படையிலான ‘ஆதிக்கத் தன்மையற்ற’ மரபினை வளர்த்தெடுத்து சைவ நெறியினில் இரண்டறக் கலந்து தமிழ் பண்பாட்டு சமயவெளியில் இன்றைய சைவ சித்தாந்தந்தின் அடிப்படைக் கட்டமைப்பை வடிவமைத்தவர் திருஞானசம்பந்தர் அவர்களே ஆவார். மேலும், காபாலிகத் தன்மையினை இல்வாழ்வோடு பேசவேண்டும் என்றும், தமிழ் பண்பாட்டு மரபினில் நிலைநிறுத்தி, எல்லா பொருள்களிலும் கடவுள் உள்ளார் என்றும், மக்களை பேதப்படுத்த முடியாது என்றும், கடவுளும், ஆன்மாவும் ஒன்றாக சேர்ந்து சிறப்பு பெருபவைகள் என்றும், அவைகளை பிரிக்க முடியாது என்றும் திருஞானசம்பந்தர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
மேலும், சிவனினை தமிழ் பண்பாட்டோடு இயக்கிய முறையினை அதாவது, கூத்தர் பெருமான் என்று காரைக்காலம்மையாரால் வழிபட்ட கடவுளை, சிவன் என்ற கடவுளாகவும் முருகப்பெருமானின் அடையாளத்தோடு கூடியதாகவும் தமிழ் நிலப்பரப்பினில் பரவ திருஞானசம்பந்தரே காரணமானவராவார். இத்தகைய சிறப்பினை உடையவரையே ஆதிசங்கரர் அவர்கள் ‘திராவிட சிசு’ என்று சுட்டுகின்றார். அதேபோலவே, வைணவ சமயத்தின் ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக அறியப்படும் நம்மாழ்வார் அவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர் ஆவார்.அவரால் இயற்றப்பட்ட திருவாய் மொழியினைப் பற்றி நாதமுனி அவர்கள் குறிப்பிடும்மொழுது ‘திராவிட வேதம்’ (த்ராவிட வேத) என்றே அறிமுகப்படுத்துகின்றார். (Sethu Pillai. 1971: 1.)
1.5.நவீன காலத்தில் ‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லின் வழி முன்வைக்கப்பட்ட வாதங்கள்:
உலக வரலாற்றினைப் பொருத்த வரையில் மனித சமூகத்தின் வளர்ச்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பது தனித்துவமானது ஆகும். நிலவுடமை சமூகத்தின் வீழ்ச்சியும், கொள்ளை நோயின் (Black Death) தாக்கத்தினையும் தொடர்ந்து பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் ஏற்பட்ட சமூக சீர்திருத்தங்கள், மானுட சிந்தனையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை விதைத்தன. மதம் சார்ந்த நம்பிக்கைகளைக் கடந்து மானுடத்தின் மீதான நாட்டமானது அதிகரித்தது. பிரன்சு புரட்சியாகட்டும், அதன் அடிநாத முழக்கங்களான சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் விடுதலை போன்ற கருத்தியல்களாகட்டும் மானிட இன எழுச்சியின் முக்கியத்துவத்தையும், விடுதலையினையும், தனித்த சுயமரியாதையுடன் கூடிய அடையாள மீட்பினைப் பற்றி பறைசாற்றின.
உலக வரலாற்றினில் நிகழ்ந்த இத்தகைய மாற்றங்கள் இந்திய சமூக வெளியினையும் விட்டுவைக்கவில்லை. காலனிய ஆதிக்கத்தின் கட்டுக்குள் வந்த இந்திய சமூகமானது சாதியக் கட்டுமானத்தின் மீதான அடிப்படையினைத் தகர்க்கத் தொடங்கியது. இந்திய வெளியினில் மகாத்மா ஜோதிராவ்-சாவித்ரி பாய் பூலே, பண்டிதர் அயோத்தி தாசர், பாபாசாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி போன்றோர்கள் பார்ப்பனீயக் கருத்தியலின் ஆதிக்கத்தையும் அதன் மீதான விமர்சனத்தையும் எந்த சமரசமுமின்றி முன்வைத்து அதனை எதிர்த்து போராடினர். அவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லினை பார்ப்பனீயக் கருத்தியலை எதிர்க்கக் கூடிய ஒரு கருத்தியல் ஆயுதமாகவே பயன்படுத்தியதனை பின்வரும் விவாதங்களின் மூலம் காணலாம்.
1.5.1.அம்பேத்கர் அவர்கள் சுட்டும் திராவிடம் / திராவிடர்::
திராவிடர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலினை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் வரலாற்று ரீதியில் கண்டறிந்தார். இந்தியாவினைப் பொருத்தமட்டில் இரண்டு இனக்குழுக்களே உள்ளன. அவைகள் ஆரியர் மற்றும் நாகர்கள் (Ambedkar. 1948: 59.) என்ற பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள், திராவிடரும் நாகர்களும் வேறுவேறானவர் அல்ல என்றும், இந்திய நிலப்பரப்பு முழுமையும் அவர்களே பரவி இருந்தனர் என்கிறார். (மேற்குறிப்பிட்ட நூல். 51, 55, 59.) வரலாற்றினில் ‘தாசர்கள்’ என்று கருதப்பட்டவர்களும், நாகர்களும், திராவிடர்களும் ஒருவரே என்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள். (மேற்குறிப்பிட்ட நூல்.59.) நாகர்கள் என்பது ஒரு இனத்தின், கலாச்சாரத்தின் பெயராக இருந்ததாகவும், அவர்களின் மொழியியல் அடிப்படைப் பெயரென்பது ‘திராவிடம்/திராவிடர்’ என்பதாகவுமே இருந்தது என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகின்றார். (மேற்குறிப்பிட்ட நூல்.) ‘தமிழ்’ அல்லது ‘திராவிட’ என்பது தென்னிந்தியாவினை மட்டும் சார்ந்த மொழியியல் குடும்பமாகக் கருதமுடியாது என்ற பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் அது ஆரியர் வருகைக்கு முன் இந்திய நிலப்பரப்பு முழுவதும் வேறூன்றிய மொழி என்றே குறிப்பிடுகின்றார். (மேற்குறிப்பிட்ட நூல். 58.)
‘அசுரர்கள்’ அல்லது ‘நாகர்களானவர்கள்’ திராவிட அரசுகளைச் சார்ந்தவர்கள் என்ற பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் (மேற்குறிப்பிட்ட நூல். 57.), திராவிடர் என்பவர்கள் தென்னிந்தியாவினைச் சார்ந்த ‘அசுரர்கள்’ அல்லது வடஇந்தியாவினைச் சார்ந்த நாகர்களே என்று கருதினார். (மேற்குறிப்பிட்ட ட நூல். 58.) ஓல்ட்ஹோம் என்ற அறிஞர் அவர்களும், பண்பாட்டு வெளியினில் அசுரர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் தென்னிந்தியாவினைச் சார்ந்த திராவிடர்களே என்கிறார். (Oldham. 1905: 55.)
‘அசுரர்கள்’ என்று அழைக்கப்பட்ட ‘திராவிடர்கள்’ ஆரிய மொழிக் குடும்பத்தினைத் தவிர்த்த மொழிகளையே பேசி வந்தனர். அதேவேளையில் வடஇந்திய நாகர்களோ தமிழினைத் தவிர்த்துவிட்டு சமஸ்கிருதத்தை பயன்படுத்தத் தொடங்கினர் என்று குறிப்பிடுகின்றார். இதுவே இந்தியா முழுவதும் நாகர்கள் இருந்த பொழுதும், வடஇந்தியாவினில் மட்டும் தங்களை ‘திராவிடர்கள்’ என அழைக்கப்படாததன் காரணம் என பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகின்றார். (Ambedkar. 1948: 55.)
தென்னிந்தியாவில் இருந்த நாகர்களோ, தமிழினை தன்னகத்தே கொண்டு ஆரியர்களின் மொழியான சமஸ்கிருத்தத்தை புறம்தள்ளினர் என்று பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகின்றார். (மேற்குறிப்பிட்டட நூல். 58.) அதாவது சமஸ்கிருத இலக்கிய- இலக்கணத்திற்கு மாற்றாக திராவிட மொழிக் குடும்பத்திற்கானதாகவே உள்ளது என்கின்றார். (மேற்குறிப்பிட்ட ட நூல். 55-56.) மேலும், ஆரியம் தவிர்த்த தமிழ் மற்றும் இன்னும் பிற மொழிகளையே அசுரர்கள் (திராவிடர்கள்) பேசியதாக அறியமுடிகின்றது. (மேற்குறிப்பிட்டட நூல். 58.) பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் கூற்றின்படி ‘திராவிடம்’ என்பது ஆரிய மற்றும் சமஸ்கிருத மொழிக்கு மாற்றாகவே பயன்படுத்தியதனை அறியமுடிகின்றது.
பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் போன்றே சமதர்ம கொள்கைகளில் தீவிர நாட்டம் கொண்டவரும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்களும் தனது நூலினுள் ‘திராவிடர்’ என்ற சொல்லாடலை பல இடங்களில் ஆரியப் பண்பாட்டு கலாச்சாரக் கருத்தியலுக்கு எதிராகவே பயன்படுத்தி உள்ளதை அறிய முடிகின்றது. (Nehru.1990: 72,73,84,111.)
ஜவகர்லால் நேரு அவர்களின் கூற்றின்படி, சிந்து சமவெளி நாகரீகத்தின் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள் என்பது தென்னிந்தியாவினைச் சார்ந்த திராவிட இனக் குழுவினையேச் சாரும் என்பதேயாகும். (மேற்குறிப்பிட்ட நூல். 72.) அதுமட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சிக்குப் பின், இந்தியத் துணைக் கண்டத்திற்கு புதிதாக வருகை தந்த ஆரியர்களாலே இங்கே சில அரசியல் மற்றும் பண்பாட்டு பிரச்சனைகள் எழுந்ததாக நேரு அவர்கள் வரலாற்று புரிதலுடன் குறிப்பிட்டு, அவ்வாறு புலம்பெயர்ந்த ஆரியர்களின் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளும், இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களின் திராவிடக் கலாச்சாரக் கூறுகளும், முதன் முதலாக ஒன்றினைந்தன என்கிறார். (மேற்குறிப்பிட்ட நூல். 73, 84.) புத்த சமய மரபின் ஜாதகா இலக்கியங்கள் தனது இறுதி வடிவத்தினை இந்த இரண்டுவகை இனக்கலப்பின் உச்சத்தில் இருந்த பொழுதே நடைபெற்றது என்ற ஜவகர்லால் நேரு அவர்கள் (மேற்குறிப்பிட்ட நூல். 111.), பின்னாளில் தங்களை தாங்களே உயர்வாக கருதிக் கொண்ட ஆரியர்கள், பண்பாட்டினில் சிறந்து விளங்கிய பூர்வகுடிகளான திராவிடரிடமிருந்து தங்களை தனித்து காட்டவே சாதிய கட்டமைப்பினை ஏற்படுத்தினர் என்று குறிப்பிடுகின்றார். (மேற்குறிப்பிட்ட நூல். 84.)
1.5.2.பண்டிதர் அயோத்தி தாசர் அவர்களின் வாதம்:
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தினில் வாழ்ந்த ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான பண்டிதர் அயோத்தி தாசர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் இன விடுதலைக்காக கருத்தியல் ரீதியாக போராடியவர் ஆவார். அவரின் கொள்கை முழக்கங்களை ஒரு பைசா தமிழன் போன்ற வார இதழ்களானது ஆவணப்படுத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவினைப் பெற்ற பண்டிதர் அயோத்தி தாசர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு மீட்சியினைப் பற்றியும், அவர்களின் வீழ்ச்சிக்கான காரணங்களைப் பற்றியும் தனக்கே உரிய பாணியில் வரலாற்று தரவுகளுடன் ஆணித்தரமாக முன்வைத்தார். தமிழக வெளியினில் பௌத்தத்தின் வீழ்ச்சியும், பார்ப்பனியத்தின் எழுச்சியும் ஒரு சேர நிகழ்ந்ததாகவே பண்டிதர் அயோத்தி தாசர் அவர்கள் குறிப்பிடுகின்றார். (Geetha and Rajadurai. 1998: 96.)
பார்ப்பனீயக் கருத்தியலின் வெற்றியானது தமிழ் மொழியின் வீழ்ச்சியுடன் நேரடித் தொடர்பாகவே அமைந்தது என்று பண்டிதர் அயோத்தி தாசர் அவர்கள் குறிப்பிடுகின்றார். (மேற்குறிப்பிட்ட நூல்.96.) ஒடுகப்பட்ட மக்களாக கருதப்பட்டவர்கள் இம்மண்ணின் பூர்வ குடிகளேயாவார்கள். அவ்வகையினில் அவர்களை அந்தப் பொருள்படும்படி குறிக்கவும், அவர்களை ஒருமுகப்படுத்தவும், அவர்கள் தெரிவு செய்து பயன்படுத்திய சொல் ‘ஆதிதிராவிடர்கள்’ என்பதேயாகும். அதுமட்டுமல்லாமல், அவர்களின் ஒருங்கமைந்த கூட்டமைப்பிற்கு திராவிட மகாஜன சங்கம் மற்றும் பறையர் மகாஜன சபா என்றும் பெயரிட்டு அழைக்கலாயினர். 1890-களில் தொடங்கப்பட்ட திராவிட மகாஜன சங்கமானது அரசியல் விடுதலையினைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், சமூகத்தினில் ஊன்றியுள்ள தீண்டாமையின் பல்வேறுபட்ட கூறுகளைக் களையவே அரும்பாடுபட்டது. (மேற்குறிப்பிட்ட நூல். 175.) பின்னாளில் பார்ப்பனர் அல்லாத மக்களின் உயர்விற்காக பாடுபட வந்த நீதிக்கட்சியும் ‘திராவிடர்’, ‘திராவிடம்’ என்ற கருத்தாடல்களையே பயன்படுத்தத் தொடங்கினர்.
1.5.3. தந்தை பெரியார் அவர்களின் வாதம்:
தந்தை பெரியார் அவர்கள் தன்னை ‘திராவிடன்’ என்று பிரகடனப்படுத்தி (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 332.) உரிமைகள் அற்ற எளியவர்களுக்காக போராடியவர் ஆவார். தமிழர்களின் தாழ்மைக்கு காரணம் என்ன என்று ஆக்கபூர்வமாக சிந்தித்த தந்தை பெரியார் அவர்கள், ‘திராவிடம்’, ‘திராவிடர்’ என்ற சொல்லினை ஒரு பண்பாட்டு புரட்சிக்கான கருத்தியல் ஆயுதமாக பயன்படுத்தினார். தந்தை பெரியார் அவர்கள் ‘திராவிடம்’, ‘திராவிடர்’ என்ற சொற்களின் மூலம் பார்ப்பனீயக் கருத்தியலினை ஏற்காத அல்லது புறம் தள்ளிய தமிழ் மக்களையும், அவர் தம் கலாச்சாரத்தையும், ஆரியப் பார்ப்பனீயக் கலாச்சரத்திற்கு எதிரானதாகவும், மாற்றாகவும் பயன்படுத்தியுள்ளதனை அறியமுடிகின்றது. (குடி அரசு. 17-09-1939.) அதாவது ‘திராவிடம்’, ‘திராவிடர்’ என்பதனை பிறப்பின் அடிப்படையில் மட்டும் தந்தை பெரியார் அவர்கள் ஒருபோதும் வரையறுக்காமல், சுயமரியாதை வாழ்விற்கான அடையாளக் குறியீடாகவே கையாண்டார் என்பது அவரின் எழுத்துக்களைக் காணும்பொழுது அறியமுடிகின்றது.
1.6.மொழியியல் அடிப்படையில் ‘திராவிடம்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படும் விதம்:
மொழியியல் அடிப்படையிலும் ‘திராவிடம்’ என்ற சொல்லானது தமிழின் தனித்த அடையாளத்தினைப் பற்றி குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதனை அறியமுடிகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டினைச் சார்ந்த ப்ரான்சிஸ் வொய்ட் எல்லீஸ் மற்றும் இராபர்ட் கால்ட்வெல் போன்ற இந்திய சூழலினை நன்கறிந்த ஐரோப்பியர்களும் ‘திராவிடம்’ என்ற சொல்லாடலையே சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தினைத் தவிர்க்க தெரிவு செய்து பயன்படுத்தியுள்ளனர். தமிழின் தனிச் சிறப்பினையும், தலைமைத் துவத்துனையும் நவீன உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய இராபர்ட் கால்ட்வெல் அவர்கள் தமிழ் உலகின் மூத்த மொழிகளில் முக்கியமானது என்ற வரலாற்று உண்மையினை உரித்த தரவுகளுடன் கல்வியியல் சூழலில் நிறுவினார். அவர் தமிழின் தனித்த பண்பாட்டு மொழியியல் அடையாளத்தினைப் பற்றி குறிக்க 'திராவிடம்' என்ற சொல்லாடலையே பயன்படுத்தினார். இங்கே 'திராவிடம்' என்ற சொல்லானது சமஸ்கிருத மொழிக் குடும்பத்திலிருந்து தமிழ் மொழிக் குடும்பம் முற்றிலும் மாறுபட்டது என்பதனைக் குறிக்கும் ஒரு சிறப்பு வார்த்தையாக பயன்படுத்தியதனை அறிய முடிகின்றது. (Caldwell. 1875.)
மொழிஞாயிறு என்று தமிழர் அனைவராலும் பாரட்டப்படும் ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களும் தனது நூலான திராவிடத்தாய் என்பதில், “பவளம்” என்ற சொல் “ப்ரவளம்” என்று வட மொழியில் திரிந்தது போலவே, ‘தமிழம்’ (தமிழ்) என்ற சொல்லும் ‘த்ரமிளம்’, ‘த்ரமிடம்’, ‘த்ரவிடம்’ என்றாகி, பின்னர் தமிழில் வந்து வழங்கும் போது மெய் முதலெழுத்தாக விதி இல்லாததால் ‘திரவிடம்’ என்பது ‘திராவிடம்’ என்று தமிழில் வழங்கும் என்றும், ஆகையால் தமிழினின்றே “திராவிடம்” எனும் சொல் தோன்றிற்று என்று குறிப்பிடுகிறார். (தேவநேயப் பாவாணர். 2012: 17.) மேலும், அவர், செந்தமிழும், கொடுந்தமிழும் சேர்ந்ததே தமிழாதலானும், தமிழல் - திராவிட மொழிகளெல்லாம் பழைய கொடுந் தமிழ்களே ஆதலானும், திராவிடரெல்லாம் ஒரு குலத்தாரே ஆதலானும், ஆரியக் கலப்பின்றி அவர் பேசும் சொற்களும் இவற்றிய நூல்களும் திரவிடமே யாதலானும், எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்தே முழுத்திரவிடமாகும் என்று ‘திராவிடம்’ என்ற சொல்லிற்கான பொருளினை வரையறை செய்கின்றார். (மேற்குறிப்பிட்ட நூல். 31.)
1.7. முடிவுரை:
‘சுதந்திரம்’ என்ற பொருள்படும்படி பயன்படுத்தப்படும் ஆங்கிலோ-ப்ரஞ்ச் சொல்லான, ‘லிபர்டி’ (liberty) என்பது பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே சமூகத்தினில் புலக்கத்தில் இருந்து வந்துள்ளது. ‘லிபர்டி’ என்ற சொல்லின் மூலம் என்பது இலத்தீனிய மொழியின் ‘லிபெர்டஸ்’ (libertas), ‘லிபெர்டட்’ (libertat) என்பதாகவே உள்ளது. இங்கே, ‘லிபெர்டஸ்’ என்ற சொல்லானது ரோமானியர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியதாகவும், அவர்கள் வணங்கிய பெண் கடவுள் ஒருவரின் பெயராகவுமே இருந்து வந்துள்ளது. அவ்வாறு அந்தச் சொல் மத நம்பிக்கையின் அடிப்படையினில் எழுந்த பொழுதும், தற்போதைய சமூக வெளியினில் மதச் சார்பற்ற மானுட விடுதலை மீட்பின் கருப்பொருளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.
அதேபோல், ‘சர்/சார்’ (sir) என்ற ஆங்கில வார்த்தையானது, பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆங்கில ஏகாதிபத்திய அரசினால் தங்களுக்கு விசுவாசமாக இருந்தவர்களை கௌரவிக்கும் பொருட்டு ‘Sire’ என வழங்கப்பட்ட ஒரு சொல்லாகவே அறிய முடிகின்றது. அந்தச் சொல்லே காலப்போக்கினில் மருவி வேறு பல பொருள்படும்படி, குறிப்பாக தங்களைவிட உயர்ந்த அதிகாரிகளைக் குறிக்கும் விதமாகவோ, சக மனிதர்களை மரியாதையுடன் அழைக்கும் விதமாகவோ, ஆசிரியர்களைக் குறிக்கவோ பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பொதுவாகவே, அந்த குறிப்பிட்ட சொல்லானது ஆண் பாலினைக் குறிக்கும் வகையினிலே பொதுவாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், கேரளா போன்ற இந்திய நிலப்பரப்பினில் பெண் உயர் அதிகாரிகளையும் கூட குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது தனிச் சிறப்பாகும். அதாவது, ஒரு சொல்லின் பொருளானது அது பயன்படுத்தப்படும் சூழலிற்கிணங்க அதன் பொருளும் உள்ளடக்கமும் மாறுபட்டு வருகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.
அந்தவகையினில் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லும் இந்திய கலாச்சார-பண்பாட்டு வெளியினில் பரவரலாக பண்டைய காலம்தொட்டு பல்வேறு பொருளினைத் தரும் வகையினில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதனை பல்வேறு வரலாற்று, இலக்கியத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன. உலக அளவினில் செல்வாக்கு பெற்ற வரலாற்று ஆசிரியரான ஹெரடோடஸ் அவர்களாகட்டும், செங்கடலினைச் சார்ந்த பெரிப்ளஸ் என்ற நூலாகட்டும், டாலமி ஆகட்டும், சனாதன இலக்கியங்களான, மகாபாரதம், போன்றவைகளாகட்டும், சமண - பௌத்த இலக்கியங்களாகட்டும், கல்வெட்டு ஆவணங்களாகட்டும், பக்தி இலக்கியங்களாகட்டும், மொழியியல் சான்றுகளாகட்டும் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லினை தமிழினை / தமிழர்களை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது என்றும், ஆரிய-பார்ப்பனீய கலாச்சாரத்திற்கு எதிரானதாகவுமே பயன்படுத்தி வந்ததனை வரலாற்று ரீதியில் தெளிவாக அறியமுடிகின்றது.
‘திராவிடம்/திராவிடர்’ என்ற ஒற்றைச் சொல் தரும் பல பொருள்கள் என்ற உபதலைப்பினில் உள்ள கருத்துகள் பெரும்பாலும் Dravidian Encylopaedia என்ற கலைக்களஞ்சியத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
குறிப்புதவி நூல்கள்:
1.ஆனைமுத்து, வே. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1-6. சென்னை: பெரியார் ஈ.வெ. இராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, 2009.
2.தேவநேயப் பாவாணர், ஞா.திராவிடத்தாய். சென்னை: பூம்புகார் பதிப்பகம், 2012.
3.பெரியார்: இன்றும் என்றும். கோவை: விடியல் பதிப்பகம், 2007.
4.Ambedkar, B.R. The Untouchables: Who Were They and Why They Became Untouchables?. New Delhi: Amrit Book Co., 1948.
5. Caldwell, Robert. A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages. London: Trubner and Co, 1875.
6. Chandra, Moti.Trade and Trade Routes in Ancient India. New Delhi: Abhinav Paublications, 1977, 75.
7. Dravidian Encylopaedia . Vol . I . Thiruvananthapuram: The International School of Dravidian Linguistics, 1990: 233.
8. Geetha, V and S.V. Rajadurai. Towards A Non-Brahmanin Millennium: From Iyothee Thass to Periyar. Calcutta: Samya, 1998.
9. Hart III, George L. The Poems of Ancient Tamil. Berkeley: University of California Press, 1975.
10. Mahalingam, T.V. Early South Indian Palaeography. Madras: University of Madras, 1974: iii.
11. Mani, Vettam. Puranic Encyclopaedia. Delhi: Motilal Banarsidass, 1975.
12. McCrindle, J.W. Trans and Ed. Ancient India As Described by Ptolemy. London: Trubner and Co, 1883.
13. Mudaliyar, Cinkaravelu A. Abitana Chintamani. Asian Educational Services, 1982.
14. Nehru, Jawaharlal. The Discovery of India. New Delhi: Jawaharlal Nehru Memorial Fund, 1990.
15. Oldham, C.F. The Sun and the Serpent: A Contribution to the History of Serpent-Worship. London: Archibald Constable and Co Ltd, 1905:157.
16. Pillai, K.K. “South India and Sri Lanka.” Journal of Royal Asiatic Society XXXV: 54-59.
17. Schoff, Wilfred H. Trans. The Periplus of the Erythraean Sea. New York: Longmans, 1912.
18. Sethu Pillai, R.P. Ed. Tiruvaymoli. Vol. I. Madras: University of Madras, 1971.
19. Subrahmanya Sastri, S and T.R. Srinivasa Ayyangar. Trans. Saundarya-Lahari (The Ocean of Beauty) of Sri Samkara-Bhagavat-Pada. Madras: The Theosophical Publishing House, 1937.
20. Tarkavachaspati, Sri Taranatha. Vacaspatyam (A Comprehensive Sanskrit Dictionary). Varanasi: Chowkhamba Sanskrit Series Office, 1962.
21. Williams, Monnier. A Sanskrit-English Dictionary. Oxford: The Clarendon Press, 1872.
- முனைவர்.ச.ஜீவானந்தம், உதவிப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, சிக்கிம் பல்கலைக்கழகம்

Monday, 12 June 2023

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறை- ம.ஜ.இ.க

 

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கம் மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையைத் தனது வழிகாட்டும் சிந்தாந்தமாக கொள்கிறது. மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும். முற்றிலும் நாத்திகவாதமும், எல்லா மதங்களுக்கும் நேர்படித்தான முறையில் பகைமையானதுமாகும்.
எல்லா மதங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு எதுவும் அல்ல; இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலகச் சக்திகள் இயல்பிற்கும் மேற்பட்ட (Super Natural) வடிவத்தை மேற்கொள்கின்றன என்பதுதான் மதத்தின் சாரம் என்று மார்க்சியம் கூறுகிறது.


மதம் பொருளாதார வாழ்க்கையிலிருந்து விலகி நின்று அதற்கு மிகவும் அயலானதாகத் தோன்றுகிறது. ஆயினும், மதக் கருத்துக்கள் தம் சொந்த விதிகளின்படி வளர்ந்தாலும், இவ்வளர்ச்சியின் போக்கும் சாரமும் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார வாழ்க்கையின் மாற்றங்களுடன் மிக நெருக்கமாகத் தொடர்புடையவை என்று மார்க்சியம் சுட்டிக்காட்டுகிறது.
சமுதாய வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் எதிர் எதிராக நின்று போராடும் வர்க்கங்களின் பொருளாதார் உறவுகள் மற்றும் நலன்களால் கோட்பாடு ரீதியாக நிர்ணயம் செய்யப்படுகின்றன என்ற உண்மை மதத்துறைக்கும் பொருந்தும்.

சுரண்டப்படும் மக்களை சுரண்டல்காரர்கள் தமது அடிமைகளாக நீடித்து வைத்திருப்பதற்கு பொருளாதார ஒடுக்குமுறையுடன் கூட அரசியல், ஆன்மீக ஒடுக்கு முறைகள் தேவைப்படுகின்றன. ஆன்மீக ஒடுக்குமுறைகளின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும்.
காட்டுமிராண்டியாய் வாழும் மனிதன் இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவல நிலை எப்படித் தேவதைகளிலும், சைத்தான்களிலும், அவதாரங்களிலும், அற்புதங்களிலும், பிறவற்றிலும் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கை உண்டாக்குகிறதோ, அதுபோல சுரண்டப்படும் வர்க்கங்கள், சுரண்டுவோருக்கு எதிரான தமது போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவலநிலையானது மறுமையில் சிறப்பான வாழ்வு உண்டென்பதில் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கை உண்டாக்குகிறது.

பிறர் உழைப்பில் உண்டு வாழ்வோர் சுகபோகமாக வாழ்வது ஏன்? ஒருவன் மேல் சாதிகாரனாகப் பிறப்பது ஏன்? அது அவன் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என மதம் காரணம் கூறுகிறது. உழைத்து உழைத்து உருக்குலைந்து போன சுரண்டப்படுவோர் இல்லாமையால் துன்புறுவது ஏன்? ஒருவர் தாழ்ந்த சாதிக்காரராக பிறப்பது ஏன்? அது அவர் செய்த பாவம் என மதம் காரணம் கூறுகிறது. இவ்வாறு ஆண்டான் அடிமை முறைக்கு மதம் நியாயம் கற்பிக்கிறது. சுரண்டப்பட்டு அடிமைப்பட்டிருப்போர் இந்தப் பிறவியில் தமது எஜமானர்களுக்கு பயன் கருதாமல் உழைத்தால் அவர்களுக்கு செத்தபின் சிவலோக பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி, இந்த வாழ்வில் அவர்களை மன ஆறுதல் கொள்ளச் செய்கிறது மதம். இந்த வாழ்வில் தமது அவல நிலையைப் போக்கவும், ஓரளவேனும் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான கோரிக்கைகளைப் பற்றிச் சிந்திக்க விடாமல் இருக்கும் படி அவர்களை ஆன்மீக போதையில் மதம் மூழ்கடித்து விடுகிறது. இதனால்தான் மதம் மக்களின் அபின் என்று மார்க்ஸ் சொன்னார். “மதம் மக்களின் அபின்” என்ற மார்க்சியத்தின் ஆய்வுரைதான் மதம் பற்றிய மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் அச்சாணியாகும்-அடிப்படையாகும் (Corner Stone).
மதமும் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வு என்றும், சுரண்டலும், வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற, ஒரு புதிய சமுதாயம் தோன்றும்போது மதமும் ஒழிந்துப்போகும் என்றும் மார்க்சியம் கூறுகிறது.
இயற்கை மற்றும் சமுதாய வளர்ச்சியை ஆளுமை புரியும் புறநிலை விதிகளின் அடிப்படையில் மார்க்சியம் மதத்தின் தோற்றம், அதன் சாரம், மற்றும் வர்க்க சமுதாயத்தில் அது ஆற்றும் பாத்திரம் ஆகியவற்றைக் குறித்து தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறது.

மேற்கு ஐரோப்பாவில் மத்திய காலத்தில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த முதலாளித்துவப் புரட்சிகர சகாப்தத்தில், மதத்தை எதிர்த்து புரட்சிகர முதலாளிகள் நிறைவேற்றிய ஜனநாயக பணிகளிலிருந்தும், அதற்குப் பின்னர் அங்கே முதலாளித்துவத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கத்தின் சோசலிசப் போராட்ட அனுபவத்திலிருந்தும், மார்க்சியம் மதம் குறித்த கோட்பாட்டு ரீதியான முடிவுகளைக் கண்டது.

மேற்கு ஐரோப்பாவில் மத்திய காலம் இறையியலுடன் மற்றெல்லா சித்தாந்த வடிவங்களும் - தத்துவஞானம், அரசியல், சட்டவியல் ஆகியவற்றை ஒட்டவைத்து அவற்றை இறையியலின் துணைப் பிரிவுகளாக ஆக்கிவிட்டது. நிலப்பிரபுத்துவத்தை கத்தோலிக்க மதச்சபை பாதுகாத்து வந்தது. நிலப்பிரபுத்துவ நிறுவனங்களை இச்சபை தெய்வீகப் பண்புடையதாக்கிப் புனிதம் பெறச் செய்தது. நிலப்பிரபுத்துவத்தை மாதிரியாகக் கொண்டு இது தனது படிநிலை அமைப்பை வகுத்திருந்தது. இந்த மதச்சபை கத்தோலிக்க உலகின் நிலங்களில் மூன்றில் ஒரு பகுதிக்குத் தானே உடமையாளனாக இருந்தது. மிக, மிகச் சக்திவாய்ந்த நிலவேந்தனாகச் செயல்பட்டது. லௌகீக நிலப்பிரபுத்துவத்தின் மீது ஒவ்வொரு நாட்டிலும் விவரமான அடிப்படையில் வெற்றிகரத் தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு அதன் புனித மத்திய நிறுவனமாகிய இந்த மதச்சபையை ஒழித்தாக வேண்டியிருந்தது. திருச்சபை நிலப்பிரபுத்துவ நிலவுடமையுடன் பல நாடுகளுக்கிடையில் உண்மையான இணைப்புச் சங்கிலியாக இருந்தது. நிலப்பிரபுத்துவ திருச்சபை நிறுவனம் நிலப்பிரபுத்துவ அரசு அமைப்புக்கு ஒரு மத ரீதியான புனிதத்தன்மையை வழங்கியது.

மேற்கு ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த முதலாளித்துவ புரட்சி சகாப்தத்தில் மதத்தை எதிர்த்துப் போராடும் பணி புரட்சிகர முதலாளித்துவத்தின் பணியாக இருந்தது. மதத்தை எதிர்த்த பணி பெருமளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தினால் நிறைவேற்றப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவ வர்க்கம் நடத்திய நீண்ட நெடும் போராட்டம் தீர்மானகரமான மூன்று பெரும் போர்களில் உச்சநிலை வந்தடைந்தது.

1. ஜெர்மனியில் நடைபெற்ற புரோட்டஸ்டண்டு மதச் சீர்திருத்தப் போக்கு எனப்படுவது முதலாவதாகும்.
2. இங்கிலாந்தில் நடந்த கால்வினிச முதலாளித்துவ எழுச்சி இரண்டாவது பெரும் போராகும்.
3. மாபெரும் பிரஞ்சு புரட்சி மூன்றாவது பெரும் போராகும்.
மேற்கூறப்பட்ட மூன்று போர்களில் முதல் இரண்டு போர்கள் மத முகமூடியணிந்து நடத்தப்பட்டவையாகும். மூன்றாவது போரான மாபெரும் பிரஞ்சுப் புரட்சி மட்டும்தான் முதலாளித்துவ வர்க்கம் மத முகமூடியை உதறித் தள்ளிவிட்டு ஒளிவுமறைவின்றி அரசியல் வழிகளில் முடிவுகட்டிய எழுச்சியாக அமைந்தது. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த இந்த முதலாளித்துவப் புரட்சியின் சகாப்தத்தில் மேற்கு நாடுகளில் பின்வரும் பணிகள் பெருமளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தால் நிறைவேற்றப்பட்டன.

மத நிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்திலிருந்து பிரிக்கப்பட்டன. மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட்டன. (இதற்குப் பின்னர் இக்கோரிக்கைகள் ஜனநாயகப் புரட்சியின் கோரிக்கைகளாகிவிட்டன.) எனினும் பிரான்சு முதலாளித்துவப் புரட்சிக்குப் பிறகு, குறிப்பாக ஏகாதிபத்தியத்தினதும், பாட்டாளி வர்க்க புரட்சி சகாப்தத்தில் முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகத்திற்காகவும், மதச் சார்பின்மைக்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் பணியை கைவிட்டுவிட்டது. ருசிய ஜனநாயகப் புரட்சி குறித்து லெனின் பின்வருமாறு சொன்னார்.

“ருசியாவில் நமது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் நிலைமைகளின் காரணமாக இந்த பணியும்கூட ஏறக்குறைய முற்றிலும் தொழிலாளி வர்க்கத்தின் தோள்களின் மேல் விழுகிறது”. மேலும் அவர் சொன்னார்; “ருசியாவில் நிலைமைகள் முற்றிலும் வேறானது. நமது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் தலைமை பாட்டாளிவர்க்கமே ஆகும். அதிகார பூர்வமான மதத்தை உள்ளிட்டு இடைக்காலத்திற்குரிய எல்லாப் பண்புகளுக்கும் (attributes) அதைப் புதுப்பிப்பதற்கோ அல்லது ஒரு புதியதை உருவாக்குவதற்கோ செய்யப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிரான போராட்டத்திற்குப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி சித்தாந்த தலைவனாக இருக்கவேண்டும்”.

எனவே ஏகாதிபத்தியத்தினதும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில், ஜனநாயகத்திற்கும் மதச் சார்பின்மைக்கான போராட்டத்தில் பின்வருவன மார்க்சிய லெனினியத்தினதும், பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தினதும் கோரிக்கைகள் ஆகிவிட்டன.

அரசைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும். மதம் அரசின் கருத்துக்குரியதாய் இருக்கக் கூடாது. மதநிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தம் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும், எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது பொதுவாய் ஒவ்வொரு சோசலிஸ்டும் இருந்து வருவதுபோல், நாத்திகராய் இருக்கவும் - பூரண உரிமை பெற்றிருக்க வேண்டும்.

குடிமக்களின் மத நம்பிக்கைகள் காரணமாக அவர்களிடையே எவ்விதமான பாகுபாடுகளுக்கும் இடமளிப்பது ஒருபோதும் அனுமதிக்கப்படலாகாது. அரசாங்கம் மதச்சபைக்கு மானியங்கள் வழங்கப்படலாகாது. மதச்சபை, சமயக்கழகங்களுக்கு அரசாங்க உதவித்தொகை எதுவும் அளிக்கப்படலாகாது. இவையாவும் அரசை சாராத நிறுவனங்களாகிவிட வேண்டும். ஒத்தமனத்தோராகிய குடிமக்களது முற்றிலும் சுதந்திரமான நிறுவனங்களாகிவிட வேண்டும்.

அரசியல் சுதந்திரத்தின் அத்தியாவசிய உள்ளடக்க கூறுகளில் ஒன்றாய் ஜனநாயகப் புரட்சி இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், 1891ஆம் ஆண்டு எர்பர்ட் திட்டத்தில், “மதம் தனிநபரது சொந்த விவகாரமாகும்” என்ற அம்சம் பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தின் அரசியல் செயல்தந்திரத்தை வகுத்தளித்தது.

மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதமாக இருப்பினும், பாட்டாளிவர்க்கம் புரட்சிகர கட்சியின் வேலைத் திட்டத்தில் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக் கூடாது என மார்க்சியம் கூறுகிறது. அவ்வாறு கூறுவதற்குக் காரணங்கள் என்ன?

கட்சியின் வேலைத்திட்டம் முற்றிலும் விஞ்ஞான வழிபட்ட முறையிலும் முற்றிலும் பொருள் முதல்வாத உலகக் கண்ணோட்டத்தின் அடிபடையிலும்தான் வகுக்கப் படுகின்றது. ஆகையால் அந்த வேலைத் திட்டத்திற்கு விளக்கம் தருவதில் மதத்தினால் ஏற்படும் அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகளின் மெய்யான வரலாறு மற்றும் அதன் பொருளாதார வேர்கள் பற்றிய விளக்கம் இன்றியமையாதபடி அடங்கியிருக்கிறது. எனவே வேலைத்திட்டத்தைப் பற்றிய பிரச்சாரம் ஒரு நாத்திகப் பிரச்சாரமாகவும், வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி செயல்படுத்துவதாகவும் அமைக்கிறது. இதனால் பாட்டாளி வர்க்கக் கட்சி நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றது எனக் கொள்ளக் கூடாது. நாத்திகப் பிரச்சாரம் செய்வது இன்றியமையாததாகும். எனினும் முதலாளித்துவவாதிகள் நாத்திகத்தைப் பற்றியும், மதத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் முறையிலிருந்து பாட்டாளி வர்க்கம் அதைப் பிரச்சாரம் செய்யும் முறை மாறுபட்டிருக்கிறது. அவர்கள் செய்வதுபோல், மதம் பற்றிய பிரச்சினையை ஒரு அரூபமான, கருத்து முதல்வாத பாணியிலும், வர்க்கப் போராட்டத்துடன் சம்பந்தம் இல்லாத ஒரு “அறிவுத்துறை” பிரச்சினையாகவும், முன்வைப்பது ஒரு தவறான பாதையாகும் என மார்க்சியம் கருதுகிறது. மேலும், உழைக்கும் மக்களை ஒடுக்கப்படுவதை அடிபடையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வெறும் பிரச்சார முறைகளைக் கொண்டே மத மூட நம்பிக்கைகளை அகற்றிவிட முடியாது.

மக்களிடம் மத நம்பிக்கைகள் நிலவுவது சமுதாயத்திலுள்ள அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளின் ஒரு விளைவும் பிரதிபலிப்புமாகும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிற்போக்குச் சக்திகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் தாமே போராடுவதின் மூலம் அவர்கள் அறிவொளி பெறாதவரை, எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும், அவர்கள் அறிவொளி பெறச் செய்துவிட முடியாது. ஆகையால், விண்ணுலகச் சொர்க்கம் குறித்து, உழைக்கும் மக்களிடையிலான கருத்து ஒற்றுமையைக் காட்டிலும், மண்ணுலகில் ஒரு சொர்க்கத்தைப் படைக்கும் பொருட்டு நடைபெறும் போராட்டத்தில் ஒற்றுமை ஓங்குவது பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். வர்க்கங்களும், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகள் நிலவும் சமுதாயம் இருக்கும் வரையில் மத நம்பிகைகளுக்கான வேர்கள் முற்றாக அகற்றப்படாது. ஆகையால்தான் தமது தப்பெண்ணங்களை இன்னமும் முற்றாக விட்டொழிக்காமல் வைத்திருக்கும் மக்களை பாட்டாளி வர்க்கக் கட்சி முன்வைக்கும் வர்க்கப் போராட்டங்களுக்குத் திரட்டுவதற்கும், அதன் மூலம் அவர்கள் அறிவொளி பெற்று மத மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கச் செய்யும் பொருட்டும் கட்சித் திட்டம் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக் கூடாது என மார்க்சியம் கூறுகிறது.

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கம் நாத்திகப் பிரச்சாரம் செய்வதை அதன் அடிப்படையான பணிக்கு - அதாவது சுரண்டல்காரர்களை எதிர்த்து சுரண்டப்படும் மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு உட்படுத்தியே செய்யவேண்டும். இதற்கு மாறாக ஒரு பிரச்சினை எழுப்பப்படலாம்.

சிந்தாந்தப் பிரச்சாரம் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்தவரும் பண்பாடு மற்றும் முன்னேற்றத்திற்குமான எதிரியை எதிர்த்த ஒரு போராட்டமாகும். இப்போராட்டத்தை எவ்வாறு வர்க்கப் போராட்டத்துக்கு உட்படுத்த முடியும்? அதாவது அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒரு திட்டவட்டமான நடைமுறை நோக்கங்களுக்காக நடத்தப்படும் ஒரு போராட்டத்துக்கு உட்படுத்த முடியும் என்று கேட்கக்கூடும். இவ்வாறு கேட்பது மார்க்சிய இயக்கவியலைப் பற்றி ஒரு சரியான புரிதலின்மையினாலேயாகும். இந்த எதிர்ப்பாளர்களை திகைக்கச் செய்யும் இந்த முரண்பாடு உண்மையான வாழ்க்கையில் உள்ள ஒரு உண்மையான முரண்பாடாகும். அதாவது இது ஒரு இயக்கவியல் முரண்பாடாகும். இது ஒரு வெற்றுப்பேச்சோ அல்லது புனையப்பட்ட ஒன்றோ அல்ல.நாத்திகப் பிரச்சாரத்துக்கும் - அதாவது உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினருக்கிடையில் உள்ள மத நம்பிக்கைகளை ஒழிப்பதற்கும் இப்பிரிவினரின் வர்க்கப் போராட்டத்தின் வெற்றிக்கும், முன்னேற்றத்திற்குமான நிலைமைகளுக்கும் இடையில் அழிக்க முடியாத ஒரு எல்லைக் கோட்டை வரைவது இப்பிரச்சினையை இயங்கியலற்ற முறையில் (அதாவது மாறாநிலைவாத கண்ணோட்டத்தில்) புரிந்துக் கொள்வதாகும். மாறக்கூடய, ஒப்புநோக்கு ரீதியலான ஒரு எல்லைக் கோட்டை (வேறுபாட்டை) அழிக்க முடியாத முற்றான ஒரு எல்லைக்கோடாக (வேறுபாடாக) மாற்றிவிடுவது ஆகும். இவ்வாறு செய்வது மெய்யாக வாழ்க்கையின் பிரிக்க முடியாதவாறு இணைந்திருக்கும் ஒன்றை பலவந்தமாகப் பிரிப்பதாகும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அரசியல், பொருளாதார, ஒடுக்குமுறைகளை எதிர்த்தோ அல்லது சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தோ உழைக்கும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் முற்போக்கான (சோசலிச) கருத்துகளைக் கொண்டிருப்பவர்களாகவும், மற்றொரு பிரிவினர் இன்னும் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகவும், பிளவுபட்டிருக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சூழ்நிலைமையில் மதவாதிகள் உழைக்கும் மக்களிடையில் இருக்கும் மதம் குறித்த கருத்து வேற்றுமைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைப் பிளவுபடுத்தி ஆட்சியாளர்களுக்கோ அல்லது சுரண்டும் வர்க்கத்தினருக்கோ சேவை செய்ய முயற்சித்து வருகின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் அரசியல் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக ஒரு போராட்டம் துவங்கிவிட்டது. அப்போது ஒரு மார்க்சிய வாதியின் கடமை என்ன? இப்போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதை எல்லாவற்றிற்கும் மேலான ஒரு கடமையாகக் கருதி, இப்போராட்டத்தில் முற்போக்கான தொழிலாளர்களையும், மதநம்பிக்கைக் கொண்ட தொழிலாளர்களையும் இரண்டாகப் பிளவுபடுத்துவதை எதிர்த்து தீவிரமாகப் போராடச் செய்வதும் அவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதற்காகப் பாடுபடுவதும் ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும்.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் நாத்திக்கப் பிரச்சாரம் செய்வது மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் உழைக்கும் மக்கள் மதவாதிகள் விரிக்கும் மாயவலைக்குள் சிக்கிக் கொள்வதற்குத்தான் பயன்படும். ஆகையால் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், இத்தகைய ஒரு சூழலில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதும், தீங்கானதும் ஆகும். இவ்வாறு சொல்வது பின்தங்கிய உழைக்கும் மக்கள் நம்மை விட்டுத் தூரமாகச் சென்றுவிடுவார்களோ என்ற ஒரு பழமைவாதச் சிந்தனையினாலோ அல்லது இதைப் போன்ற வேறு பிற்போக்கு எண்ணத்தினாலோ அல்ல. அதற்கு மாறாக மெய்யான ஒரு வர்க்கப் போராட்டதின் முன்னேற்றத்தைக் கருதியே இவ்வாறு சொல்கிறோம்.

இத்தகைய ஒரு தருணத்தில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகப் பிரச்சாரம் சாதிப்பதைவிட இந்தப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதுதான் சுரண்டுவதையும், அடிமைப் படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மதநம்பிக்கை கொண்டுள்ள உழைக்கும் மக்களை நூறு மடங்கு அதிகமாக சோசலிஸ்டுகளாகவும், நாத்திகவாதிகளாகவும் மாறச் செய்யும். இதனால்தான் நாத்திகப் பிரச்சாதத்தை உழைக்கும் மக்களின் அடிப்படையான பணிக்கு - அவர்களின் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திற்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறுகிறோம்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தினராகிய நாம் மதம் குறித்த பின்வரும் மார்க்சிய கோட்பாட்டு ரீதியான முடிவுகளை, நமது வழிகாட்டும் கோட்பாடுகளாகக் கொள்கிறோம்.

1. மதம் மக்களின் அபின்.
2. மதம் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வு என்றும், சுரண்டலும், வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற ஒரு புதிய சமுதாயம் தோன்றும் போது மதமும் ஒழிந்துபோகும்.
3. (அரசைப் பொருத்தமட்டில்) மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும். மத நிறுவனங்கள் அரசாங்கத்துடன் எந்தச் சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது.
ஒவ்வொருவரும் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும் எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது ஒவ்வொரு சோசலிஸ்டும் இருந்து வருவதுபோல் நாத்திகராய் இருக்கவும் பூரண உரிமை பெற்றிருக்க வேண்டும்.
4. அரசியல் சுதந்திரத்தின் அத்தியாவசிய உள்ளடக்கக் கூறுகளில் ஒன்றாக ஜனநாயகப் புரட்சி இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
5. இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சியின் நிலைமைகளின் காரணமாக, மதத்தை எதிர்த்தப் போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சி சித்தாந்தத் தலைவனாக இருக்க வேண்டும்.
6. சோசலிச பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல. அதன் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள் முதல்வாதமேயாகும். எனினும் ஒருவர் மதத்தில் நம்பிக்கை கொண்டவராக இருப்பினும் அவர் கட்சியின் திட்டத்தை ஏற்று அதை அமல்படுத்தும் தகுதியுடையவராக இருந்தால், அவர் கட்சியின் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் ஆவார்.
7. இயக்கவியல் பொருள்முதல்வாதமே கட்சியின் உலகக் கண்ணோட்டமாக இருப்பினும், கட்சியின் திட்டம் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக்கூடாது.
8. நாத்திகப் பிரச்சாரம் செய்வது கட்சியின் பணியாகும்.
9. நாத்திகப் பிரச்சாரத்தை கட்சியின் அடிப்படைப் பணிக்கு அதாவது வர்க்கப் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்யும் பணிக்கு - உட்படுத்தியே செய்யவேண்டும்.
மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறை மற்றும் அரசியல் செயல்தந்திரத்தை சாதி முறைக்குப் பொருத்தக்கூடாது:
இந்து மதம் சாதி மற்றும் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது சாதி முறைக்கும், தீண்டாமைக்கும் புனிதத்தன்மையை வழங்குகிறது. எனினும் இந்துமதம் ஒரு மதம் என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான சமூகவேர்களும், சாதி மற்றும் தீண்டாமை நிலைத்திருப்பதற்கான சமூக வேர்களும் வெவ்வேறானவையாகும். மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்க சமுதாயத்திற்குள் (ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறைக்குள்) மட்டுமே அடங்கியிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாத்து வரும் ஒரு மதம் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும், முதலாளித்துவ ஒழுங்கு முறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொன்டு, புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களான முதலாளிகளுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரு ஆன்மீக ஒடுக்குமுறை கருவியாக மாறிவிடமுடியும். கத்தோலிக்க மதச் சபையின் வரலாறு இதற்கு ஒரு சான்றாகும். நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாக்க வந்த கத்தோலிக்க மதச் சபை, ஒரு நீண்ட நெடிய போரட்டத்துக்குப் பிறகு நிலப்பிரபுத்துவம் தோற்கடிக்கப்பட்டதும், அது முதலாளித்துவ ஒழுங்குமுறைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு, மீண்டும் புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களுமான முதலாளிகளுக்குச் சேவை செய்யும் ஒரு ஆன்மீக ஒடுக்குமுறைக் கருவியாக மாறிவிட்டது.

இந்துமதம் இப்போது சாதி மற்றும் தீண்டாமையைத் தனது அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை ஒழிக்கப்பட்ட பிறகும் தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு தொடர்ந்து உயிர்வாழ்வது சாத்தியமானதேயாகும். அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் ஏற்படும் முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு தரகு முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கிறது. இதிலிருந்தே மேற்கூறப்பட்ட சாத்தியப்பாட்டை அறியலாம். ஆனால் சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு அவ்வாறு தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் சாதிமுறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும். ஆகையால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும். அதற்கு அடுத்த சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் சாதிமுறை தொடர முடியாது. இவ்வாறு, மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான வேர்களும், சாதிமுறை ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான வேர்களும் வெவ்வேறானவை என்பதைக் காணலாம்.
மதம் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வாகும். சுரண்டலும். வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதின் மூலம் மதத்தை ஒழிக்க முடியும். அத்தகைய ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்துவதற்கிடையில், மத ஒடுக்குமுறையிலிருந்து அரசியல் சுதந்திரம் பெறும் பொருட்டே மதநிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக்கூடாது என்ற ஒரு தீர்வும், வர்க்க முரண்பாடுகள் நிலவும் சமுதாயத்தில் மக்கள் மதநம்பிக்கை கொள்வதற்கான சமூக வேர்கள் இருப்பதால் மக்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் பொருட்டும் அதே சமயம் மத மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான உரிமை என்ற முறையில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதற்கும், நாத்திகனாக இருப்பதற்கான உரிமையும் இருக்க வேண்டுமென்பதற்காகவும் மதம் தனிநபரது சொந்த விவகாரமாக்கப்பட வேண்டும் என்ற மற்றொரு தீர்வும் வைக்கப்படுகிறது.
நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும் நிலைத்திருக்கக் கூடிய மதத்திற்கு எதிராக வைக்கப்படும் தீர்வுகள், நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படுவதோடு ஒழிந்துவிடக் கூடிய சாதி மற்றும் தீண்டாமைக்கும் பொருந்தாது. ஆகையால் மதத்திற்கு எதிராக வைக்கப்படும் மேற்கூறப்பட்ட இரண்டு தீர்வுகள் சாதி ஒழிப்பதற்கு உகந்ததல்ல.

வேறுவிதமாகச் சொன்னால், சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத் தொழிற் பிரிவினையும், அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும், இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதும் ஆகும். ஆகையால் மதத்துறையில் ஜனநாயகத்திற்காக வைக்கப்படும் தீர்வுகளான அரசுத் தலையிடாக் கொள்கையும், தனிநபர் சொந்த விவகாரமாக ஆக்கப்படுவதும் சாதி மற்றும் தீண்டாமைக்கு பொருந்தாது. மேலும் சாதி மற்றும் தீண்டாமையும் இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ஒழிக்கப்படக் கூடியதாகும். ஆகையால் இத்தீர்வுகள் சாதிமுறைக்குப் பொருந்தாது.

அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் சாதியும், தீண்டாமையும் நிலவுவதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவத்திற்கு முதலாளித்துவத்திற்கு முந்தைய (எல்லா உற்பத்தி உறவுகள் நீடித்திருப்பதற்கு) ஏகாதிபத்தியமும் தரகுப் பெருமுதலாளித்துவமும் ஆதரவு தருவதே ஆகும். புரட்சிகரமான முறையில் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் அரசை ஒழித்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு நிறுவுவதன் மூலமே ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். நிலப்பிரபுத்துவத்திற்கு ஏகாதிபத்தியமும், தரகு முதலாளித்துவமும், தரும் ஆதரவுக்கு முடிவு கட்ட முடியும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகளை ஒழிப்பதால், சாதிமுறைக்கும், தீண்டாமைக்கும் ஆதாரமாக இருக்கும் பரம்பரை தொழில் பிரிவினையை ஒழிக்க முடியும். மக்கள் ஜனநாயகக் குடியரசும் புரட்சிகர மக்களும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக கலச்சாரப் புரட்சிகளை நடத்தி சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்கின்ற பிற அம்சங்களான அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றின் அடித்தளத்தைத் தகர்த்துவிட்டு ஒரு புதிய ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்க முடியும். இவ்வாறு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை முற்றாக ஒழித்து, புதிய ஜனநாயக அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை உருவாக்கி, சோசலிச சமுதாயத்தை நிறுவும் நிகழ்வுப் போக்கில் சாதி மற்றும் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது சாத்தியமான ஒன்றாகும்.
மக்களுக்கு, ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு இன்றி, அவர்களால் பரம்பரை வேலைப் பிரிவினையை ஒழித்து ஒரு புதிய வேலைப் பிரிவினையை உருவாக்க முடியாது. சாதிமுறை நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்யும் அகமணமுறை மற்றும் பிற அம்சங்களை ஒழித்து ஒரு புதிய பண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஆகையால் சாதிமுறைத் துறையில் ஜனநாயகத் தீர்வு ஒரு மக்கள் ஜனநாயகத் குடியரசு என்பதேயாகும்.

உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்தும், சாதி மற்றும் தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு பரம்பரை தொழில் பிரிவினை, அகமணமுறை (சாதிக்கு உள்ளே மட்டுமே திருமண உறவுகள் கொள்ளுதல்), உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள், தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிராகவும், பார்ப்பனிய உயர்சாதி ஆதிக்க முறையை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவாகவும், பாடுபடுத்தி, உண்மையான முதலாளிய, ஜனநாயக் சீர்திருத்தங்கள் அரசு செய்யக்கோருவது ஒரு முதலாளிய ஜனநாயகக் கோரிக்கை ஆகும்.
இப்பிரச்சினைகளில் அரசு தலையிடக் கூடாது என்பதோ சாதி மற்றும் தீண்டாமை தனிநபரது விவகாரமாக ஆக்கி விடுவதோ எதுவாயினும் சாதி மற்றும் தீண்டாமை தொடர்வதற்கே பயன்படும். ஆகவே இவ்விரண்டு தீர்வுகளும் சாதி மற்றும் தீண்டாமைக்குப் பொருந்தாது. மேற்கூறப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் அவை உண்மையாகவே முதலாளிய ஜனநாயக சீர்திருத்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் நீங்கலாக, பிற சாதிகள் குறிப்பாக பிற்பட்ட சாதிகளிலே கூட வர்க்க முரண்பாடுகள் தோன்றி ஜனநாயகத்திற்கு எதிரான நலன்கள் கொண்ட பிரிவுகள் இருப்பதையும் கணக்கில் கொண்டு, சாதி மற்றும் தீண்டாமைக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற வகையில் அவை கோட்பாடு ரீதியில் ஆதரிக்கத் தகுந்தவை ஆகும்.


குறிப்பு: மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்
- “காங்கிரசும் பாரதிய ஜனதாவும் இந்திய பாசிசத்தின் இருமுகங்கள்”,
-ம.ஜ.இ.க வெளியீடு, மார்ச் 1993
================================= முற்றும் =============================

ஆரிய திராவிட இனவாதமும் விளக்கமும்-ம.ஜ.இ.க

 

ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும்-திராவிடமும் ஒன்றே!!


ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும்-திராவிடமும் ஒன்றே!!
- ஏ.எம்.கே

இன்றைய காலகட்டத்தில் இந்த ஆரிய-திராவிட இனம் குறித்த விவாதத்தின் தேவை என்னபதில் எளிமையானது.

ஒரு புறம்இந்து ராஷ்டிரம்-இந்துத்துவப் பாசிசம் போன்ற மிகப் பிற்போக்கான அபாயகரமான ஜெர்மானிய வகைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆரிய இனவாதம் தீவிரம் பெற்றுவருகின்றது. மறுபுறம்அதை எதிர்ப்பது என்ற பேரில் பிற்போக்கான திராவிட இனவாதம் முன்வைக்கப்படுகிறது. ஆரிய குத்தீட்டிக்கு எதிராக திராவிடத்தை முன்வைத்த கால்டுவெல்லை போர்வாளாக முன்வைப்பது என்ற போக்கு தலைதூக்குகிறது. ஆனால்இவ்விரண்டு இனவியல் கோட்பாடுகளுமே ஏகாதிபத்திய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்கின்றனஇவை ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இந்துத்துவப் பாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்டத் தடையாக உள்ளன. எனவேதான் இந்த இனவியல் கோட்பாடுகளின் பொருளியல் அடிப்படையைப் புரிந்து கொண்டு விவாதிப்பதும்அம்பலப்படுத்தி அவற்றை முறியடிப்பதும் அவசியமானது. ஆகவேஏகாதிபத்திய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்த ஆரிய-திராவிட மொழியியல்-இனவியல் கோட்பாடுகளின் தோற்றம் பற்றி வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியமாதலால் அது குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

காலனிய இனவியல் கோட்பாட்டுக்கான பொருளியல் அடிப்படை

15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ ஆட்சிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜெர்மனிபிரிட்டன்பிரான்ஸ்இத்தாலிபோர்ச்சுகல் மற்றும் டச்சு உள்ளிட்ட 15 நாடுகளில் முதலாளித்துவ ஆட்சிகள் உருவாயின. அந்த 15 நாடுகளிலும் தத்தமது தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட 15 தேசிய அரசுகள் உருவாயின. அந்நாடுகளில் கிழக்கிந்திய கம்பெனிகள் போன்ற முதலாளித்துவ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அத்தகைய நிறுவனங்கள் அனைத்தும் வணிக முதலாளித்துவப் பிரிவுகள் ஆகும். அவை நாடு பிடிக்கும் போரில் இறங்கின. காலனிய நாடுகளுக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் பணி புராதன மூலதனச் சேர்க்கையில் ஈடுபட்டதாகும். புராதன மூலதனச் சேர்க்கை என்பது முதலாளித்துவ வழியில் மூலதனம் சேர்ப்பது அல்ல. அதாவது முதலாளித்துவ முறையில் மூலதனம் போட்டு தொழிலாளர்களின் கூலி உழைப்பின் ஒரு பகுதியை மூலதனமாகச் சேர்ப்பது என்ற கோட்பாட்டிற்கு மாறான வழியில் இரு வர்க்கங்களை உருவாக்கினார்கள். ஒன்று கொள்ளையடிப்பதன் மூலம் மூலதனத்தைக் குவித்து முதலாளி வர்க்கத்தையும்அடிமை முறைகளை உருவாக்குவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தையும் உருவாக்கினார்கள்.

முதலில் முதலாளிகளை உருவாக்குவது என்பதைகாலனிய நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடித்து அதன்மூலம் முதலீடு செய்யும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கங்களை உருவாக்கினர். இது ஆதி திரட்சி எனப்படும். அதாவது செல்வங்களைக் கொள்ளையடித்து மூலதனத்தைக் குவித்தனர். இரண்டாவதாக மனிதர்களைக் கொள்ளையடித்து அடிமைத் தொழிலாளர்களை உருவாக்கினர். இத்தகைய தொழிலாளர்களை உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருந்தன. ஒன்றுஐரோப்பாவைப் பொறுத்த வரை நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து முதலாளித்துவ வர்க்கத்தை உருவாக்குவதன் வாயிலாக விவசாயிகளின் உடமைகளை நீக்கி தொழிலாளர்களை உருவாக்கினர். அது முற்போக்கானதும் புரட்சிகரமானதும் ஆகும். அது நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த ஜனநாயகப் புரட்சி எனும் அடிப்படையில் அமைந்ததாகும். ஆனால் இந்தியா உள்ளிட்ட காலனிய நாடுகளில் நுழையும்பொழுது தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதன் மூலம் அடிமைத் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கும் வேலையைச் செய்தனர். அவர்களை சிறைப்பிடித்து கொட்டடியில் அடைத்து தமது நாடுகளுக்கும் பிற காலனிய நடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார்கள். இவ்வாறாக ஓர் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். இந்த அடிமை வியாபாரத்தை நியாயப்படுத்துவதற்கென்றே இங்கு இனவாதத்தை முன்வைத்தார்கள்.

இது குறித்துகார்ல் மார்க்ஸ்தனது மூலதனத்தின் முதல் தொகுப்பில் 31-வது தலைப்பில் ப-1011-இல் புராதன மூலதனச் சேர்க்கை என்ற பகுதியில்விரிவாக எழுதியுள்ளார். அதில் காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமை முறைகளை உருவாக்கியதற்கான பொருளியில் அடித்தளம் பற்றி விளக்குகிறார். கொள்ளையடிப்பதன் மூலம் மூலதனத்தை சேர்ப்பதையும்அடிமைப்படுத்துவதன் மூலம் கூலித்தொழிலாளர்களை உருவாக்குவதையும் விளக்குகிறார். தொழிலாளர்களைஅடிமை வியாபாரத்தின் மூலம் ஏற்றுமதி செய்யும் முறைகளைப் பற்றி மார்க்ஸ் கூறுகையில்நேரடியாக கிறிஸ்துவ காலனியாதிக்கம் என்ற வாக்கியத்தைப் பயன்படுத்துகிறார். கிறிஸ்துவ பாதிரியார்களின் வாதங்களையே மேற்கோள்காட்டி, “கிறிஸ்துவ காலனியம்” என்பதை விளக்குகிறார். திருச்சபைகளே அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டதை எடுத்துக்காட்டுகிறார். கிறிஸ்துவத்தையே தனது வாழ்வாகக் கொண்ட வில்லியம் ஹோவிட் எனும் பாதிரியார்கிறிஸ்துவ காலனியாதிக்கம் பற்றிக் கூறியதை பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார் மார்க்ஸ்.
கிறிஸ்துவ இனத்தார் எனப்படுவோர் உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டிச் செயல்களையும்வெறித்தனமான அட்டூழியங்களையும் புரிந்துள்ளனர். வேறு எந்த இனத்தாரும்அவர்கள் எவ்வளவு தான் மூர்க்கமானவர்களாகவும்நெறி புகட்டப் பெறாதவர்களாகவும் இருந்தாலும்கருணை வெட்கம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்களாக இருந்தாலும் சரிஉலக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இவற்றிற்கு இணையான அட்டூழியங்கள் புரிந்ததில்லை.

இவ்வாறு தொழிலாளர்களைக் கைது செய்துஅவர்களை ஏற்றுமதி செய்து கிறிஸ்துவத் திருச்சபைகள் ஏலம் விடுவது எவ்வளவு கொடூரமானது என்பது வரலாற்றுரீதியாக விளக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காஇலங்கைசிங்கப்பூர்பர்மா போன்ற நாடுகளுக்கு அனுப்பியது பற்றி வரலாற்றுரீதியாக எடுத்துரைக்கப்படுகிறது. இதை முதலில் போர்த்துகீசியர்கள் தான் பரங்கிப்பேட்டையில் ஆரம்பித்தனர் என கூறப்படுகிறது. காலனிய முறை என்பது எவ்வாறு இனவாதத்தால் உருவாக்கப்பட்டது என்பதும்இனவாதத்தின் மூலம் எப்படி அடிமைமுறைகள் உருவாக்கப்பட்டன என்பதும் விளக்கப்படுகிறது.

காலனிய இனவாதத்தை முன்வைக்கும் இவர்கள் யார்அவர்கள் வணிக முதலாளித்துவவாதிகள்தொழில் முதலாளித்துவப் பிரிவினர் அல்லர். இவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள்எதன் அடிப்படையில் செய்தார்கள்?

முதலாளித்துவ முறைக்கு விரைவாக மாறிச்செல்லும் பொருட்டுஅதாவது நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் நிகழ்வுப்போக்கை விரைவுபடுத்தும் பொருட்டே இத்தகைய காலனிய முறைகளைப் பயன்படுத்தினர். காலனிய இனவியலை விமர்சனம் செய்யும் பல ஆய்வாளர்களும் இனவியலின் இந்தப் பொருளியல் அடித்தளத்தை எடுத்துக் காட்டுவதில்லை. அதை வெறும் மத அடிப்படையில்மத ஒடுக்குமுறை வடிவமாக மட்டுமே இக்கொள்கைகள் செயல்படுத்தப்படுவதாக பார்க்கின்றனர்.


கிழக்கிந்திய கம்பெனிகள் போன்ற வணிக முதலாளித்துவப் பிரிவினர் இத்தகைய அடிமை முறைகளை உருவாக்குவதற்கு இனவாதத்தை எத்தகைய முறைகளில் கட்டியமைத்தனர்முதலாவதாக உடலியல் கூறுகளைக் கொண்டு அதாவது நிறம்முகத்தோற்றம்மூக்கின் நீளம் ஆகியவற்றைக் கொண்டு மக்களை ஆண்டான்-அடிமைகள் என வகைப்படுத்தினர். இதன் மூலம் அடிமைமுறைகளைப் புகுத்தினர். இந்த அடிமைமுறைகளுக்கான அடிப்படை பழைய ஏற்பாட்டின் பைபிள் கதைகளிலேயே அடங்கியுள்ளது. நோவா பெருவெள்ளம்ஹாம் சந்ததியினர் மீதான சாபம்பேபல் கோபுரம் போன்ற பழைய ஏற்பாட்டின் பைபிள் கதைகளை காலனியாதிக்கக் கொள்கைகளாகப் பயன்படுத்தினர். பெருவெள்ளம் வடிந்த பிறகுதிராட்சை இரசம் அருந்தி ஆடையின்றிக் கிடந்த நோவாவைப் பார்த்து பரிகசித்துவிட்ட அவரது மகன் ஹாமும் அவரது சந்ததியும்மற்ற இரு மகன்களான ஷெம்ஜெப்பேது-வின் சந்ததியினருக்கு அடிமைகளாகக் கடவது என்பதே சாபம். ஹாம் சந்ததியினர் கருப்பு நிறத்தார்அழகற்ற உடலியல் கூறுகளைக் கொண்டவர்கள்அவர்கள் வெள்ளைநிறஅழகான உடலியல் கூறுகளைக் கொண்ட அவரது சகோதரர்களின் வம்சத்திற்கு அடிமைகளாக சேவை செய்து தமது பாவத்தை போக்கிகொள்ள வேண்டும் என்று கூறினர். பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பித்த மோசேவின் இனவியல் தர்மம்மனுவின் வர்ண தர்மத்திற்கு நிகரானது.

இரண்டாவதாககிழக்கிந்திய கம்பெனி அரசுகள்மக்களை இனவாத வழியில் பிளவுபடுத்துவதுமுரண்பாடுகளை உருவாக்கி அம்முரண்பாடுகளைப் பயன்படுத்துவது என்ற வழியில் தங்களது அரசு அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். மேற்கண்டவாறு நிறம் உள்ளிட்ட உடலியல் கோட்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துதலைத் தொடர்ந்து மூலமொழி மற்றும் மொழிக் குடும்பம் போன்ற மொழியியலில் கோட்பாடுகளை முன்வைத்து இனங்களை வகைப்படுத்தினர்.

ஆரிய இனவாதம்

வில்லியம் ஜோன்ஸ் எனும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதி Third Anniversery Discourse Asiatic Reasearches vol-1, 1788 pages 415-431 எனும் நூலில் ஒரே வேர்ச்சொல்மூலச் சொற்கள் என்று ஆய்வு செய்துஒரே மூலச்சொற்களைக் கொண்டவைகளையெல்லாம் ஒரு மொழிக் குடும்பம் என்று வரையறுத்தார். அந்த வரையறையின்படி இந்தோ ஆரிய மொழிகள் (Indo-Aryan Languages) ஒரே மொழிக் குடும்பமாக வகைப்படுத்தினார். இந்த வகைப்படுத்துதலுக்கு அவர் பேபல் கோபுரக் கதைகளையே” அடிப்படையாகக் கொண்டார். விவிலியத்தின் பேபல் கோபுரக் கதையின்படிஆண்டவருக்கு எதிராக பாபிலோனியர்கள் பேபல் கோபுரத்தை கட்டியதாகவும்அங்கு ஒரே மொழியை பேசியவர்கள் மத்தியில் பல மொழிகளை ஏற்படுத்தி குழப்பத்தை தோற்றுவித்து உலகம் முழுதும் பல பகுதிகளுக்குப் பிரிந்து செல்லுமாறு ஆண்டவர் செய்தார் என்பதே இந்த ஐதீகக் கதையின் சுருக்கமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே மூல மொழிக் கொள்கை மற்றும் மொழிக் குடும்பக் கொள்கையை உருவாக்கினார். ஆரிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி சமஸ்கிருதம் என்று கூறினார். இம்மொழிகளைப் பேசுவோர் ஒரே இனம்இந்தோ ஆரிய இனம் என மேக்ஸ் முல்லர் தனது “The Languages of the seat of war in the east -London-william Norgate 1855” எனும் நூலில் வரையறுத்தார். இவ்வாறு இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்பது ஆரிய மொழிக் குடும்பமாக வகைப்படுத்தப்படுகிறது. வேர்ச் சொற்களின் ஒற்றுமை என்ற அடிப்படையில் ஆரிய மொழிக் குடும்பத்தை வரையறை செய்ததோடு மட்டுமின்றிகாலனியாதிக்கத்தை திணிப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் ஆரிய மேன்மை-ஆரிய மேலாதிக்கக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. அதாவது ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள்ஆளப்பிறந்தவர்கள்அவர்கள்தான் உலகத்தில் நாகரீகத்தையும் பண்பாட்டையும் கொண்டுவந்தவர்கள் என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இங்ஙனம் ஐரோப்பிய காலனிய மேலாதிக்கத்திற்கு ஆரிய மேன்மை என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஆரிய மொழிக் குடும்பத்தின் மூலமொழித் தேடலின்போதுசமஸ்கிருதமே மூலமொழி என்று கூறி இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தில் சமஸ்கிருதத்தையும் இணைத்துக்கொண்டுஇந்தியாவிலிருந்த ஆரியரையும் இணைத்துக் கொண்டு ஆரிய மேன்மை பேசினர்.

பின்பு காலனிய ஆதிக்கமும்-காலனிய ஆட்சியும் தோன்றிய பிறகுஇனத்தூய்மை பேசி ஜெர்மன் இனம்தான் உண்மையான ஆரிய இனம் என்று கூறிஇந்தியாவிலுள்ள ஆரியர்களை-அதாவது பார்ப்பனர்களை ஆரியர்களாகக் கருதவில்லை. இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம்-அதாவது பார்ப்பனர்களிடையே சாதிமுறையும்உருவ வழிபாடும் தோன்றி எல்லாவிதப் பிற்போக்கும் வந்து விட்டதால் இவர்களை ஆரியர்களாக ஏற்க முடியாது என்றனர்அதாவது ஆரியத் தூய்மையை இழந்துவிட்டனர் என இவர்களை கீழ்நிலைக்குத் தள்ளி இவர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். ஜெர்மனியில்தான் ஆரியத் தூய்மை நிலவுகிறதுஎனவே உலகத்தை ஆளப் பிறந்த இனம் ஜெர்மானிய இனம்தான் எனும் கோட்பாட்டை நிறுவினர். ஆரிய மொழி அல்லாத பிற மொழிகளையும்பிற மொழிக் குடும்பங்களையும்இந்தியாவைச் சார்ந்த பார்ப்பனர்களையும் ஆரியர்களுக்கு அடிமைகளாகவே பார்த்தனர். ஆனால் பார்ப்பனர்களோ தாங்களும் ஆரியர்கள்தான் என்று உரிமை கோரி பெருமை கொண்டாடுகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள் இவர்களை எட்டி உதைத்தாலும் உதைத்த காலை நக்கிப் பிழைக்கிறார்கள். காலனியாதிக்கத்தின் நுகத்தடிக்குள் பார்ப்பனர்களைக்கொண்டு வந்து அடிமைப்படுத்தவேண்டும் என்பதால் அவர்களை ஆரியர்களாகக் கருதவில்லை. காலனியாதிக்கவாதிகள் இவர்களை கீழ்நிலைக்குத் தள்ளினாலும் தாங்களும் ஆரியர்கள்தான் என உரிமை கோருவது இவர்களிடம் உருவான தரகுசித்தாந்தத்தையே காட்டுகிறது. பார்ப்பனர்கள் உயர்மட்டத்தில் இருந்த நிலை என்பது போய் அவர்கள் ஆரியர்கள் இல்லை என அவர்கள் இழிவுபடுத்தினாலும் நாங்களும் ஆரியர்கள்தான் என இவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் ஆரியர் என்றால் அது ஐரோப்பிய ஆரியர்களைத்தான் குறிக்கும். பார்ப்பனர்களை அல்ல.

இக்கோட்பாட்டிற்கு பலம் சேர்க்கும் விதமாக தூய இனவாதத்தை” கோபினியு தனது மனித இனங்களின் சமத்துவமின்மை குறித்த கட்டுரைகள் (1853-55)” எனும் நூலில் முன்வைத்தார். அவர் பின்வருமாறு கூறுகிறார்: வெள்ளை இனம்தான் அனைத்து பண்டைய நாகரிகங்களுக்கும் ஆதாரமானது. வெள்ளை இனத்துடன் பிற இனங்கள் கலந்ததே அனைத்து நாகரிகங்களும் அழிவதற்குக் காரணம். இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மானிய இனம் மட்டுமே தூய்மையானது”. இந்தக் கோட்பாடேநாஜிக் கட்சி உருவாவதற்கு காரணம் ஆனது. இதைக் கொண்டே கோல்வால்கர் இங்கு இனத்தூய்மையைப் பேண இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என இந்துத்துவப் பாசிசம்-இந்து ராஷ்டிரத்தை முன்வைத்தார்.

இந்தியாவிற்கு வரும்பொழுதுஆரிய மொழிக் குடும்பம்-சமஸ்கிருதம் அல்லாமல் பிற மொழிகள் பேசுவோரும்  வாழ்ந்து வந்தனர். அம்மொழிகள் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல. அவை ஆரிய மொழிக் குடும்பத்திற்கு கீழானவைகளாக கருதப்பட்டன. அதேபோன்று காலனியாதிக்கவாதிகள் பல நாடுகளுக்குச் சென்றனர்ஆப்பிரிக்க கண்டத்திற்குச் சென்றனர். இந்த நாடுகளிலுள்ள மக்களை இந்த ஆய்வு அடிப்படையிலான இனவாதக்கோட்பாட்டின் அடிப்படையில்தான் அடிமைகளாக மாற்றினர். அத்துடன் ஆரிய மூலத்திற்கு பழைய ஏற்பாட்டின் மூன்று ஐதீகக் கதைகளைப் பயன்படுத்தினர். நோவாஊழிப்பெருவெள்ளம்பேபல் கோபுரம் போன்ற கதைகளின் அடிப்படையில் காலனியாதிக்கக் கோட்பாடுகளை உருவாக்கி காலனியாதிக்கத்தை-காலனிய அரசுகளை நிறுவினர்.

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் உலகின் பல இடங்களில் காலனிகளை உருவாக்கிய பொழுதுஅவர்களின் மிஷினரிகளும் வியாபாரிகளும் மேற்கின் பண்பாட்டிற்குத் தொடர்பற்ற வேறு விதமான கலாச்சாரங்களையும் மனித சமுதாயங்களையும் எதிர்கொண்டனர். நோவாவின் மூன்று மகன்கள் மற்றும் அவர்களுடைய சந்ததிகள் குறித்த ஐதீகக் கதைகளுக்குள் உலகின் பிற பண்பாட்டு சமுதாயங்களை அடைக்கும்படியான விவரணைகளை அவர்கள் உருவாக்கினார்கள். உதாரணமாகஇந்தியாவின் பூர்வகுடி ஆரியர்கள் ஹாமின் சந்ததிகள் எனவும்பெரு வெள்ளம் வடிந்த பிறகு அவர்கள் இந்தியாவிற்கு குடியேறினர் எனவும்பிரிட்டிஷ் காலனியாதிக்கம் என்பது அவர்களை மீண்டும் விவிலியத்திற்குள் மீட்கவே எனவும் கதைகளைப் புனைந்தனர். இராமனை ஹாமின் சந்ததியான ராஹ்மா-உடன் ஒப்பிட்டுவெள்ளம் வடிந்த பிறகு இராமன் தலைமையில் இந்திய மக்கள் இங்கு குடியேறினர் எனவும்பேபல் கோபுரத்தைக் கட்டிய நிம்ரோத் மன்னனே விஷ்ணு அவதாரம் எனவும் கதைகள் எழுதினர்.

ஒவ்வொரு பண்பாடும் தம் தோற்றம் பற்றியும் தன்மைகள் பற்றியும் கொண்டிருந்த தொன்மங்களும் வழக்குகளும் மூடநம்பிக்கைகள் எனவும்முட்டாள்தனமான கதைகள் எனவும் தூக்கி எறியப்பட்டன. ஐரோப்பியர் அல்லாத ஒவ்வொரு பண்பாட்டிற்குமான உண்மையான வரலாற்றை உருவாக்கும் பொறுப்பும் தார்மீகக் கடமையும் ஐரோப்பியர்களின் வரலாற்றுக் கடமை என்று கருதப்பட்டதுஇந்த கடமையை நிறைவேற்றும் பொழுது கருப்புத் தோல் கொண்ட மக்கள் அனைவரும் ஹாமின் சந்ததிகளாக வகைப்படுத்தப்பட்டு நாகரீகமற்றஉயர் பண்பாடு அற்றஒழுக்கத் தன்மையற்றஅதே சமயத்தில் தந்திரபுத்தியும் வஞ்சகமும் கொண்ட அடிமைகளாக அடக்கி ஆளப்பட வேண்டியவர்களாகக் கருதப்பட்டனர்.

திராவிட இனவாதம்

இந்தியாவில் அதன்பிறகு ஒரு பிரச்சினை எழுகிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில் ஆரியர்கள் நுழையும் முன்பே சிந்துசமவெளி நாகரீகம் இருந்தது என 1924-இல் கண்டறியப்பட்டது. இங்கு பூர்வகுடிகளான தமிழர்கள்மங்கோலியர்கள் போன்ற இனங்கள் வசித்து வந்தன. இவர்களின் நாகரீகம் ஆரியரின் நாகரீகத்தை விட மேலானதொரு நாகரீகம் ஆகும். ஆரியர் வருகையில் இங்கு நாகரீகம் மேம்பாடு அடையவில்லை. வெள்ளையர் நாகரீகத்தால் இவர்கள் மேன்மையடையவில்லை. மாறாக அவர்களின் வருகையால் இவர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். ஆகவேஆரிய மேன்மைக் கோட்பாடு அடித்து நொறுக்கப்பட்டது.

எல்லிஸ் எனும் காலனியாதிக்கவாதி தமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம்துளு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஒரே வேர்ச்சொல்லைக் கொண்டவை. அவை சமஸ்கிருதத்தில் இருந்து வேறுபட்டவை” என வகைப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதியும்சமய பரப்பாளருமான ராபர்ட் கால்டுவெல் என்பவர்தமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம் ஆகிய நான்கு மொழிகளையும் உள்ளடக்கி திராவிட மொழிக்குடும்பம்” என தென்னிந்திய(அ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலில் வகைப்படுத்தினார். இம்மொழிகளைப் பேசுவோர் திராவிட இனம் என சொன்னார். இந்த வாதத்தை ஆந்திராவைச் சேர்ந்த மமடி வெங்கையா எனும் அறிஞர் மறுக்கிறார். திராவிட தமிழ் மொழியைச் சார்ந்தது அல்ல தெலுங்கு மொழி” என்கிறார் அவர். அதாவது தெலுங்கு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் வேர்ச் சொற்கள் வேறு வேறுதிராவிட மொழிகளிலிருந்து தெலுங்கு வந்ததல்லதனித்தனி மொழிகள்தான். ஒரு மொழிக் குடும்பம் என்ற கோட்பாட்டை அவர் ஏற்கவில்லை. ஆரியக் கோட்பாட்டில் ஜோன்ஸ் கும்பலால் என்ன முன்வைக்கப்பட்டதோ அதே கோட்பாட்டையே கால்டுவெல் பேசுகிறார். எனவே திராவிட மொழியியல்- இனவியல் கோட்பாடு ஆரிய மொழியியல்-இனவியல் கோட்பாட்டிற்கு மாறானது அல்ல. அந்த கோட்பாட்டின் அடிப்படையிலியே கால்டுவெல் இக்கோட்பாட்டை முன்வைக்கிறார். நாம் ஜோன்ஸ்-கால்டுவெல் கும்பலின் ஆரியதிராவிட மொழியியல்-இனவியல் கோட்பாட்டை நிராகரிக்கிறோம்.ஒரே வேர்ச்சொல்இலக்கண ஒற்றுமை என்பதன் அடிப்படையில் ஒரே மொழிக்குடும்பம் (அ) மூல மொழிக்கொள்கை என வரையறுப்பது மார்க்சியத்திற்கு புறம்பானது என ஸ்டாலின் மொழியியல் குறித்து மார்க்சியம்” J.V Stalin -Marxism on Linguistics- 1950 July 20எனும் நூலில் கூறுகிறார்.

அதன் பிறகுபார்ப்பனர்கள் அல்லது ஆரியர்கள் குறிப்பாகச் சொன்னால் ரிக் வேத கால ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்களாஇங்கேயே பிறந்தவர்களாவெளியில் இருந்து வந்தவர்கள் எனில் படையெடுத்து வந்தார்களாஊடுருவினார்களாஆகிய கேள்விகள் எழுந்தன.

கால்டுவெல்ஜோன்ஸ்முல்லர் போன்ற காலனியாதிக்கவாதிகள் ஆரியர்கள் இங்கேயே இருந்தவர்கள் அல்ல என்றும்வெளியில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் என்ற நிலைபாட்டை முன்வைத்தனர். ஆரியர்கள் திராவிடர்கள் என இரண்டு இனங்களாக வரையறுத்துஇந்திய வரலாற்றையே ஆரிய-திராவிட வரலாறாக முன்வைத்தனர். இவர்கள்தான் மொழியியல் அடிப்படையில் இனத்தை வகைப்படுத்தியவர்கள் ஆவர். அதாவது ஆரிய மொழிகள் பேசுவோர் ஆரிய இனம்திராவிட மொழிகள் பேசுவோர் திராவிட இனம் என வகைப்படுத்தினர். இதனடிப்படையில்தான் பூலேவும்பெரியாரும் நிலை எடுத்தனர். அதாவது ஆரியர்கள் வந்தேறிகள்படையெடுத்து வந்து இந்திய பூர்வகுடிகளை வென்று அடிமைப்படுத்தினார்கள்ஆரிய திராவிடப் பகைமை தான் இந்திய வரலாறு என்ற காலனியாதிக்க கோட்பாட்டை ஏற்றனர். பெரியார் மற்றும் பூலேவின் வாதத்தை மறுத்து அம்பேத்கார் சரியான நிலையை எடுத்தார்.

காலனிய இனவாதத்தை மறுக்கும் அம்பேத்கார்

அம்பேத்கார் இது குறித்து சூத்திரர் யார்?” என்ற நூலில் விரிவாக பின்வருமாறு கூறுகிறார்:

1) ஆரிய இனக் கோட்பாடு அதன் ஒவ்வொரு அம்சத்திலும் தோல்வியடைந்து வருகிறது. அது அறிவியல் கண்டுபிடிப்புகளின் வக்கிரம்.

2) ஆரிய இனம் போன்ற எத்தகைய இனத்தையும் வேதங்கள் அறிய மாட்டா.

3) ஆரிய இனம் இந்தியாவின் மீது படையெடுத்துவந்து இந்தியாவின் பூர்வகுடிகளான தாசர்கள் மற்றும் தஸ்யூக்களை வென்று கீழ்படுத்தினார்கள் என்பதற்கு வேதங்களில் எவ்விதச் சான்றுகளும் இல்லை.

4) ஆரியர்கள்தாசர்கள்தஸ்யூக்கள் இடையிலான வேறுபாடு இன வேறுபாடு என்பதற்கான சான்றுகள் இல்லை.

5) ஆரியர்கள் மேனி வண்ணத்தில் தாசர்கள் தஸ்யூக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்ற வாதத்தை வேதங்கள் ஏற்கவில்லை.

மேலும் மொழிக் குடும்பம் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் இனக்கோட்பாடு தவறு. இவை அனைத்தும் புராணக் கதைகளின் அடிப்படையில் பேசுவதுஅறிவியல் பூர்வமானதல்ல. இது இன வகைப்பட்டதல்ல” என்று இந்த நிலைபாட்டை எதிர்க்கிறார். மேலும் ரிஸ்லே என்பவர் வர்ணம்-சாதியே இனம்” என்ற கோட்பாட்டை முன்வைத்தார் (H H Risley 1841, 259). அதையும் அம்பேத்கார் மறுக்கிறார். சாதியே இனமாகாதுமாறாக சாதி சமூக வகைப்பட்டது” என்கிறார். பஞ்சாபைச் சேர்ந்த பார்ப்பனருக்கும் மதராஸைச் சார்ந்த பார்ப்பனருக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்அதேபோல் மதராஸைச் சேர்ந்த பார்ப்பனரும் பறையரும் ஒரே மரபினம் தான்” என மறுக்கிறார். ஆனால் அம்பேத்காருடைய ஆய்வு முறையானது மதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பொருளியல் அடிப்படையில் அவர் ஆய்வு செய்யவில்லை. இருப்பினும் அம்பேத்கார் சாதியை இன வகையாகப் பார்க்காமல் சமூக வகையாகவே பார்க்கிறார். இது ஒரு சரியான அம்சமாகும். ஆனால் அவரும் தன்னுடைய ஆய்வு முறையில் சமூக பொருளாதார ஆய்வு முறைகளை எடுத்துக்கொள்ளாமல் மதத்தையும்மத இலக்கியங்களையும் மட்டுமே எடுத்துக்கொண்டு ஆய்வு செய்யும் முறையை மேற்கொள்கிறார். அவர் எண்ணமுதல்வாத முறைகள் மூலமே ஆய்வு செய்கிறார். இருப்பினும் இனவாதக் கோட்பாட்டை மறுப்பதன் மூலம் ஒரு நேர்மறையான பாத்திரம் வகிக்கிறார்.

காலனிய இனவாதத்தின் விளைவே ஆரிய மாயை திராவிட மாயை

1) ஆரிய மாயையால்காங்கிரஸில் திலகர் முதல் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட் அம்மையார் வரைபார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும்பிற்போக்கையும் நிலைநாட்டினார்கள்.

2) ஆரிய மேன்மைதூய இனவாதத்தால் உருவான ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இந்துத்துவம்ஜெர்மன் பாசிசத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு இந்துத்துவப் பாசிசமாக வடிவம் பெற்றது. இந்து என்பவன் யார்என்ற பிரசுரத்தில் சாவர்க்கர் தரும் விளக்கம் வருமாறு:

இந்து என்பவன் இந்தியாவை தந்தை நாடாகவும் (பித்ரு பூமி) புனித நாடாகவும் கருதவேண்டும். இந்திய முஸ்லிம்களுக்கும்கிறித்தவர்களுக்கும் புனித பூமி அரேபியாவிலும்பாலஸ்தீனத்திலும் இருப்பதால்அவர்கள் பித்ரு பூமியை புண்ணிய பூமியாக கருத இயலாது. கம்யூனிஸ்டுகளுக்கு நாடென்பதே கிடையாது. ஆகவே இவர்களை வெளியேற்றவேண்டும்.

அதன் பிறகு, 1930களில்ஜெர்மன் மற்றும் இத்தாலிய பாசிச சக்திகளுடன் கூட்டு வைத்தது இந்த கும்பல். இனத்தூய்மை எனும் பெயரில் யூதர்களைக் கொன்றொழித்தது போலவேஇங்கு இஸ்லாமியர்களைக் கொன்றொழிக்கவேண்டும் என்று கோல்வால்கர் கூறுகிறார். இதை நாம் அல்லது நமது தேசியத்தை வரையறுத்தல்” எனும் நூலில் அடால்ப் ஹிட்லர் பாணியில் அவர் விளக்குகிறார்:

இன்று எல்லோரும் ஜெர்மனியின் தேசிய கர்வத்தைப் பற்றி பேசுகிறார்கள். தன் தேசிய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையைத் தக்கவைத்துக்கொள்ளஜெர்மனி செமிட்டிக் இனங்களை (யூதர்களை) அழித்து உலகத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அங்கே மிக உயர்ந்த அளவில் தேசிய கர்வம் காணப்படுகிறது. அடிப்படையில் வேறுபாட்டை கொண்டுள்ள இனங்களும் கலாச்சாரங்களும் ஒற்றுமையுள்ள ஒரே அமைப்பாக சேர்ந்து வாழ்வது அநேகமாக முடியாது என்பதையே ஜெர்மனி எடுத்துக் காட்டுகிறது. இந்துஸ்தானில் இருக்கும் நமக்கு கற்கவும் லாபம் அடையவும் அது ஒரு நல்ல பாடம்.

இந்த பிற்போக்கான தத்துவத்தைக் கொண்டே இசுலாமியர்களைக் கொன்றொழித்து வருகிறது இந்தக் கும்பல்.

3) திராவிட மாயை மற்றும் திராவிட இனவாதத்தின் விளைவாக தமிழ் தேசிய இனத்திற்கும்அதன் சுயநிர்ணய உரிமைக்கும் பெருங்கேடு ஏற்பட்டது. பெரியார்காங்கிரசில் இருந்தபொழுது தேசியவாதியாக இருந்தார். அக்கட்சியில் இருந்த பிற்போக்குத்தனம் மற்றும் பார்ப்பனிய ஆதிக்கத்தால் வெளியேறி சுயமரியாதை இயக்கம் துவங்கினார். வர்ணாசிரம எதிர்ப்புமூட நம்பிக்கை எதிர்ப்புசுயமரியாதை போன்ற அவரது நடவடிக்கைகள் சரியான ஒன்றே ஆகும். பிறகு சிங்காரவேலர் மற்றும் ஜீவாவின் நட்பால் சோஷலிச சமதர்ம கருத்துகள் பேசத்துவங்கினார். ரசிய பயணத்திற்குப் பிறகு அது தீவிரமடைந்துகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு சென்றார். இதுவும் அவரின் சரியான அம்சமே ஆகும். சீர்திருத்தவாதியாக இருந்தவரை அவரை அனுமதித்த பிரிட்டிஷ் அரசுஅவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகளை அனுமதிக்கவில்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்துஏகாதிபத்திய எதிர்ப்புசோஷலிசக் கருத்துகளை அவர் கைவிட்டார். பிறகு நீதிக்கட்சியில் இணைந்து ஏகாதிபத்திய தாசராக மாறினார். சமதர்மப் பாதையைக் கைவிட்டதற்கான காரணம் குறித்து பெரியார் இவ்வாறு கூறுகிறார்:

சர்க்கார் வலிமையானது. அது நம்மை அடக்கி ஒடுக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் இனி புத்தியுடன் செயல்படவேண்டியுள்ளது. ....ஆகவே சுயமரியாதை இயக்கமே இன்றைய தேவை. ....இது ஜீவா மற்றும் சிங்காரவேலருக்கு பிடிக்காது. என்ன செய்வதுவேறு வழி இல்லை

என தனது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தினார். இவ்வகையில் காவுத்ஸ்கிபிரசந்தாபெரியார் மூவரும் ஒன்றே. தனது ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு பின்வருமாறு விளக்கம் தந்துதனது சுயமரியாதையின் வர்க்கப் பண்பை வெளிப்படுத்துகிறார்:

வெள்ளைக்காரன் காலை நக்கியவர்கள் என்று நீங்கள் எங்களை கேவலமாகச் சொல்லலாம். பார்ப்பான் காலை விட வெள்ளைக்காரன் கால் சுத்தமானது. அது சாக்ஸ் போட்ட கால்-சுத்தமாக இருக்கும். இதை நக்குவதைவிட அதை நக்குவது என்பது நல்லது என்று பெரியார் தனக்கே உரிய பாணியில் ஓங்கி அடித்து பதில் சொன்னார்.” (வீரமணிமொழியால் தமிழர்இனத்தால் திராவிடர். தி.மு.க வெளியீடு.பக்கம் 65) ஆம்! கொள்கையைத் துறப்பதற்கும் துணிவு வேண்டும் அல்லவா?

ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பகத்சிங்கும் அவரது தோழர்களும் இரத்தச் சரித்திரம் எழுதிக் கொண்டிருந்த பொழுதுநீதிக்கட்சியும்ஆர்.எஸ்.எஸ்-சும் எச்சில் சரித்திரம் எழுதிக் கொண்டிருந்தன.

இங்கு ஏற்கனவே நிலவிவந்த பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் பூசல்கால்டுவெல் வருகைக்கு பின்பே ஆரிய-திராவிட இனவாத வடிவம் பெற்றது. இரண்டுமே காலனி ஆதிக்க அடிமைத் தத்துவங்களே. கற்பனையான பழைய பிற்போக்கு பைபிள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு காலனி ஆதிக்கவாதிகள் உருவாக்கிய இந்த ஆரிய-திராவிட இனவாதத் தத்துவங்களை நீதிக்கட்சியும்பெரியாரும்அண்ணாதுரையும் வரித்துக் கொண்டனர்.

இந்த திராவிட இனவாதம்தான்இந்தியாவை மூன்றாகப் பிரிக்கும் இந்துஸ்தான்திராவிடஸ்தான்பாகிஸ்தான் எனும் இனவெறிக் கோட்பாடுகளுக்கு இட்டுச்சென்றது. பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்ட பிறகுமொழிவழி மாநிலம் அமைந்தது. பொது மொழியும் பிரதேசமும் அற்ற திராவிட தேசியம் காலாவதியான பிறகு அண்ணா துரையால் திராவிட இனவாதம் பின்வருமாறு மறுவரையறை செய்யப்பட்டது: வர்ணாசிரமத்தை ஏற்பவர்கள் ஆரியர்கள். ஏற்காதவர்கள் திராவிடர்கள்” என முன்வைக்கப்பட்டது.

இவ்வாறுகாலனியாதிக்க ஆதரவு திராவிட மரபினவாதம்தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமைக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் பெருங்கேடு ஏற்படுத்தியது. இந்தி மொழி எதிர்ப்பு எனும் பெயரில் Hindi Never English Ever என்று ஆங்கில மொழி அடிமைத்தனத்திற்கும்ஆங்கில மொழியை நிலையான ஆட்சி மொழியாக்கும் நிலைக்கும் இட்டுச் சென்றது. மேலும் செம்மொழி எனும் கூப்பாடு தமிழுக்கு இவர்கள் செய்த துரோகத்தை மூடிமறைப்பதேயாகும். திராவிடக் கட்சிகள் இந்துத்துவப் பாசிச கும்பலுடன் கைகோர்த்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என காலனி ஆதிக்கத்திற்கு சேவை செய்கின்றன.

ஆகவேஆரிய-திராவிட மாயை இரண்டுமே அன்றும் இன்றும் என்றும் காலனிய இனவியலுக்கு சேவை செய்பவையே ஆகும். அன்று பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு சேவை செய்தனஇன்று அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் சேவை செய்கின்றன. வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றன. ஆரியம் திராவிடம் இரண்டும் ஏகாதிபத்தியம் கள்ளத்தனமாக ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் ஆகும். ஒன்று வெள்ளைக் குழந்தைஇன்னொன்று கருப்புக் குழந்தை. ஒன்று காவி மடம்இன்னொன்று கருப்பு மடம். இவையிரண்டையும் முறியடிப்பதன் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்க தேசியத்தை கட்டியமைக்க முடியும்கட்டியமைக்க வேண்டும்.