Thursday, 25 August 2016

மார்க்சியம் சாதியக்கட்டமைப்பை விளங்கிக் கொள்வது !!



சாதியை விளக்கிக் கொள்வது என்றால் அரசியல் பொருளாதார கட்டமைப்பை விளங்கிக் கொள்வதன் ஊடாகவே சாத்தியமானதாகும்.. ஆனால் மக்களிடையே உள்ள அகவுணர்வின் வெளிபாட்டுக் காரணத்தினை வெளிப்படுத்தாது. மனிதர்களின் அகவுணர்வை மாத்திரம் வெளிப்படுத்தும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றது. சமூகத்தில் இருக்கும் தன்மைகள் என்பதை வைத்து சாதியத்தினை விளங்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு  அணுகுவது என்பது  தலித்தியம் போன்ற அடையாள அரசியல் செய்பவர்களுக்கு பயன்படும். ஆனால் சமூகமாற்றத்திற்காய் உழைப்பவர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் பயன்படப்போவதில்லை.
மார்க்சியம் சாதியத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வது? சாதியத்திற்கும் பொருளாதார அமைப்பிற்கும் அதன் மேல் எழுந்த சிந்தனைக்கும் தொடர் இருக்கின்றதா இல்லையா என்பதில் இருந்து ஆராய்வது தான் பொருத்தமாக இருக்கும். மூன்று தத்துவக் கூறுகளை முதலில் முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும். மார்க்ஸ் இன் கண்டுபிடிப்புகள் என்பது முன்னைய சமூகத்தை விளங்கியதற்கு மாறுபட்டு சமூகத்தை புரிந்துகொள்ள வைக்கும் தத்துவப்பார்வையாகும். மார்க்சியம் என்பது அன்னியத் தத்துவம் என்று கொள்ளமுடியாது. காரணம் மனிதவரலாற்றில் அறிவொழிச்சின் படைப்பு என்பது முன்னைய சமூகத்தில் இருந்த அறிவை குவித்து தந்ததே மார்க்சியமாகவும் அது சர்வதேசியவாதமாகவும் உள்ளது.
மார்க்சியத்தினை உள்ளதை உள்ளபடி சிதைக்காது மார்க்சிய அடிப்படையை மக்களிடத்தில்முன்னேறிய பிரிவினரிடையே சென்றடைய வேண்டும் என்பதே ஒரு மார்க்சியரின் கடமையாகும். ஆனால் கலாசாலையில் - thesis - ஒரு கோட்பாட்டை முன்னிறுத்தி ஒப்படைப்புச் செய்வதைப் போல அல்லாது மூன்று கூறுகளை கவனத்தில் கொள்ளத் தயாராக இல்லாது, மூன்று கூறுகளை உதறிவிட்டு மார்க்சியதினை கேள்விகேட்க முயற்சிக்க முடியாது.  மூன்று தத்துவக்கூறுக்கு அப்பால்  இருந்து ஒன்றை மட்டும் விலத்தி எடுத்து ஆய்விற்கு உட்படுத்தும் ஆய்வுமுறைகளே மற்றைய அணுகுமுறையாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் மார்க்சியம் என்பது தனியே வர்க்க அணுகுமுறையை மாத்திரம் முதன்மைப்படுத்துவதாகவும் வர்க்கத்தை மாத்திரம் குறுக்கிவிடுவதால் போதாமை உள்ளதாக விமர்சிப்பவர்கள் உள்ளார்கள்.
மார்க்சின் படைப்புக்களில் இருந்தும் அதன் குறிப்புக்களில் இருந்தும் மார்க்சிய மானிடவியல் அணுகுமுறையை "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில்எங்கல்ஸ் இனால் படைக்கப்பட்டது. இங்கு இனக்குழும முறை அவர்களின் இரத்த உறவில் அமைந்த வாழ்வு முறையை விளக்கும் ஒரு புத்தகமாகவும் அடிப்படைப் புத்தகமாகவும் கொள்ள முடியும். மற்றைய முதலாளித்துவ- சமூக ஜனநாயகக் உலகக் கண்ணோட்டத்தைக் கொண்ட ஆய்வணுகுமுறைக்கு மாற்றாக மார்க்சிய லெனினிய அணுகுமுறைப் பார்வையை முன்வைக்கின்ற புத்தகமாகும்.
மார்க்சின் கண்டுபிடிப்பு என்பது மார்க்சியம்- லெனினியம்- மாவோயிசமான வளர்ந்துள்ளது. இன்று வளர்ந்துள்ள அனைத்து படிமுறைப் பாதைகளின் ஊடாகவே மார்க்சினை புரிந்து கொள்ளமுடியும். மார்க்சியமாகிய இயங்கியல்- வரலாற்றுப் பொருள்முதல்வாதம்- வர்க்கப் போராட்டத்தினை புரிந்து கொண்டால் இந்த சமூகத்தினை முழுமையாக ஆராய துணைபுறிகின்ற ஒரேயொரு அணுகுமுறை மார்க்சியம்லெனினிய மாவோயிசமே. இதற்று அப்பால் மண்ணுக்கேற்ற மார்க்சியம் ஒன்றில்லை. மூன்று தோற்றுவாய்களை நுணுக்கமாக அறிந்துக் கொள்வதன் ஊடாகவே புதிய கோட்பாட்டை படைக்கமுடியும்.
மார்க்சிய அணுகுமுறையை பேராசிரியர்கள் வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி, கோ கேசவன் போன்றவர்கள் மார்க்சிய அணுகுமுறையைக் கொண்டே சமூக ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள். அந்த ஆய்வாளர்கள் கூட மார்க்சியம் மேற்கத்திய- அன்னிய அணுகுமுறை என்று கூறியதில்லை. இந்தியாவில் கடைக்கோடியில் இருந்து மார்க்சியத்தினை முறையாக விளங்கிக் கொண்டால் ஐரோப்பா என்ன எந்த நாட்டையும் ஆராய முடியும்.  மார்க்சிய புரிதல் பற்றிய பிரச்சனை என்பது மார்க்சிய முகாமில் ஒரு  அம்சம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

மார்க்சியம் என்பதை மேலைநாட்டு தத்துவம் என்று . குறுக்கிக் கொள்வதும் ஒன்றும் புதிதல்ல. மார்க்ஸ் எழுதியவற்றை ஏன் லெனின், ஸ்ராலின், மாவோ எழுத்துக்களை இயங்கியல்- வரலாற்றுப் பொருள்முதல்வாதம்- வர்க்கப் போராட்டம் என்று மூன்று தத்துவக் கூறுகளைக் கொண்டே நாம் படித்தறிந்து கொள்ள முடியும். இங்கு பெரியாரியம்- அம்பேக்கார் கூறியவற்றைக் கூட மேற்கண்ட மூன்று கூறுகளை கொண்டுதான் ஆராயமுடியும். அறிவொணாவாத்தை மார்க்சியமாக முன்வைப்பது மார்க்சியம் அல்ல.
ஒவ்வொரு சமூகக் கட்டத்தினையும் கடந்து செல்வதற்கான வழிமுறைகள், போராட்ட யுக்திகள் என்பது ஒரு புரட்சிகர கட்சியின் வழிகாட்டல் ஊடாக வெற்றியடைக் கூடிய முறையில் செயற்படுத்த முடியும். அதற்கு கட்சியும் சரியான புரிதலை கொண்டிருக்க வேண்டும். இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள்# என்பவைகளே தவறான புரிதலையும், பெயருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளாகவும்# நடைமுறையில் சமூக ஜனநாயகக் கோட்பாட்டைக் கொண்டதாகவே இருக்கின்றது. 
பொருளாதார அமைப்பும் அதன் சார்ந்த சிந்தனை முறையைத் தீர்மானிக்கின்றது. சிந்தனை, சின்னங்களை அகற்றும் போராட்டவடிவங்கள், அடையாளப் போராட்டங்கள், தன்னியல்புப் போராட்டங்கள் என்பதை சமூகமயப்படுத்துவதில் இருந்து புரட்சிகர மாற்றத்தை நோக்கியதான பயணத்தில் இருந்துதான் சமூகமாற்றம் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஏனெனில் சிந்தனை புதிய பொருளாதார அமைப்பு உருவாகி அதன்பாலான சமூக உறவு தோன்றாதவரை முற்றுமுழுதாக சமூகத்தில் இருக்கும் சிந்தனைமுறையும் கருத்தியல் மாற்றம் அடைவதில்லை.

பிற அணுகுமுறை-
கலாசாலையில் பாடநெறிகளுக்குள் அந்த பாடநெறிகளை கற்றுக் கொள்ளுகின்ற போது அணுமுறைகள் பற்றி பார்வை முக்கியமாக இருக்கின்றது. இந்த அணுமுறையூடாக பாடநெறியை கற்றுக் கொள்கின்றனர். (இந்த அணுகுமுறைகள் வர்க்கம் சார்ந்து இருக்கின்றது ஒரு புறமிருக்க) இவர்கள் Sturcturalism, functionalism (Emil Durkheim), sturctural functionlism (Levi Struss) , conflict perspective, marxism. பின்நவீனத்துவம், நவமார்க்சீசம் (அகநிலைவாத) என்று புதிய அணுமுறைகளை புகுத்துவது இன்றைய கலாசாலை வட்டத்தில் கற்பிற்கப்படுவதுதாம்.
இந்த அணுகுமுறைகளை எழுத்தாளர்கள் என்ற சிறிய வட்டத்தினுள்ள புகுத்தப்படுகின்றது. கல்விசார் நிறுவனங்கள் இந்த பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டான கல்வித்திட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றது. இந்த பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டான ஊழியர்களை உருவாக்க வேண்டியது தேவையாகும்.  அறிவுசார் ஊழியர்களை மறுவுற்பத்தி செய்கின்ற போது உருவாக்கப்படும் அறிவுசார் பிரிவினர்கள் சமூகதளத்தில் தமது புலமைகளை வெளிப்டுத்த நுழைகின்றனர். இவர்களின் கல்வித் தகமை எல்லோரிடமும் இருப்பதில்லை (அறிவு வேறு) இவர்கள் கொண்டுள்ள பல்வேறு இசங்களை (ism) வைத்துக் கொண்டு தம்மை மற்றையவர்களை விட மேலான்மை கொண்டவர்களாக இருத்திக் கொள்கின்றார்கள்.
இவ்வாறான இசங்களின் (ism) அணுமுறையில் இருந்து வெளியாகும் எழுத்துக்களினால் ஏற்படும் மயக்க நிலை இந்தச் சமூகத்தில் உள்ள அறிவுசார் பிரிவினர்களில் உண்மையான மக்கள் நலம் கொண்டவர்களிடயே ஆழுமையையும் மயக்கத்தையும் உண்டு பண்ணுகின்றார்கள். இவ்வாறா அணுகுமுறை ஊடாக அதுவும் இல்லை இதுவும் இல்லை என்ற எண்ணப்போக்கை உருவாக்கிக் கொள்வதாகும். இங்கு முதலாளிய சமூக அமைப்பின் நலனே முன்னிறுத்தப்படுகின்றது. கல்விசார் நிறுவனங்கள் முதலாளித்துவ பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு உருவாக்கப்படும் கல்விமுறையாகும்.
ஆனால் கலாசாலையில் - thesis - ஒரு கோட்பாட்டை முன்னிறுத்தி ஒப்படைப்புச் செய்வதைப் போலவே தான் மார்க்ஸ் சாதி பற்றிப் பேசவில்லை என்பதாகும். இந்தக் கருத்து கலாசாலை கோட்பாட்டாக்க நெறியைப் பின்பற்றி வர்க்க முகாமை சிதைப்பதாகும்.



சாதியும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவமும்
மலத்தை கையால் அள்ளுவதை நிறுத்த முடியுமா என்றால் முடியும். அதற்கு இன்றைய நவீன வடிகால்லமைப்பு, கழிவுகளை மறுசுலர்ச்சிக்கு உள்ளாக்கும் நிலையம், அனைத்தையும் சுத்தீகரிப்பு நிலையத்தின் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  இதற்கான அரச திட்டம் என்பது இல்லை என்பதே உண்மை. இவற்றைச் செய்யாது ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு ஏற்ற வகையாக உட்கட்டுமானம்,  கட்டமைப்பில் மறுசீரமைப்பு, வளங்களை  பணத்திற்குரிய பண்டமாக்கல், தனியார் மயமாக்கலின் ஊடாக அரச நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைகின்றது.
நாட்டைச் சுற்றமாக வைப்பது என்பது தெருவில் இருக்கின்ற குப்பைகளை கூட்டி விடுவது என்பது வெறும் அடையாள அரசியல் பூச்சேயன்றி அது பெரும் மாற்றத்தைக் கொடுப்பதில்லை. ஆனால் மாற்றத்தைக் கொடுக்கக் கூடியது என்றால் அடிப்படையில்  திட்டமிட்ட சுகாதார அமைப்பு முறை அவசியமாகும். இதன் ஊடாக மலத்தினை  அள்ளும் மக்களை விடுவிக்க முடியும். அந்த மக்களை நவீன தொழிற்நுட்பத்தினை, திட்டமிட்ட கழிவகற்றல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் கோசத்தினை முன்னிறுத்த வேண்டும்.
இவ்வாறான கட்டமைப்பை உருவாக்கக் வேண்டிய தேவையை மக்களின் ஊடாக அரசை நிர்ப்பந்திக்க  வேண்டும். ஆனால்  இதற்கான போராட்டத்தினைக் கூட பரந்துபட்ட ரீதியாக முன்னெடுப்பதில் சாதியத்தினை  எதிர்ப்பவர்கள் அடையாள அரசியலான தலித்தியத்தில்  மாத்திரம் கவனம் செலுத்துகின்றனர். தலித்தியவாதிகள் தமது வர்க்கத்தவர்களின், தமது பிரிவினரின் தேவையுடன் திருப்தி கொள்கின்றனர்.
அரச இயந்திரத்தினை அசைக்கும் போராட்டம் என்பது தனியே ஒரு பிரிவு ஒடுக்கப்பட்டவர்கள் மாத்திரம் போராடினால் மாத்திரம் போதாது அனைத்து ஒடுக்கப்படும் பிரிவினரும் சேர்ந்தே போராடி வேண்டும்.
இங்கு  கழிவுளை அகற்றும் முறையை நவீனப்படுத்துவது ஊடாக மக்களை அந்த தாழ்வான நிலையில் இருந்து மீட்க வேண்டும். அதனைச் செய்யாது சாதிய எதிர்ப்பு, இடவொதுக்கீடு என்று அடையாள அரசியலில் மாத்திரம் கவனத்தை குவிப்பதால்  உயர்ந்த உற்பத்தி சக்திகளை (அறிவார்ந்த உழைப்பாளிகளை, தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள) உருவாக்கிக் கொள்ள முடியாது.
ஒடுக்கப்படும் மக்களை  இழிநிலையில் இருந்து விடுவிப்பது தனியே அடையாள அரசியல் செய்துவிடாது.
உற்பத்தி முறையில் மாற்றம்  ஏற்பட வேண்டும். இன்று நீலிக்கண்ணீர்வடிக்கும் சமூகஅமைப்பில் ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். முதலாளித்துவ உற்பத்திக்குரிய உட்கட்டுமான அமைப்பு என்பதும் அவசியமாகின்றது. முதலாளித்துவ உற்பத்தியை ஏற்றுக் கொண்டு இன்றைய அரசுகள் தனியார்மயமாக்கல், வளங்களை பணப்பண்டமாக்கல், உட்கட்டுமானங்களை நிதிமூலதனத்திற்கு சாதகமாக மட்டுமே அமைந்திருக்க வழிவகைக்கின்றனர். ஆனால் உழைக்கும் மக்களின் நலன்பேனும் உட்கட்டுமானம் என்பது அவசியமானதாகும். இதுவே நவீன சுத்தீகரிப்பு, கழிவுமுறை வடிவங்களாகும்.

உற்பத்தி முறைக்கும் சிந்தனைக்கும் இடையேயான உறவு-
உற்பத்தி முறைக்கும் சிந்தனைக்கும் இடையேயான உறவை அறிந்து கொள்வது அவசியமானதாகும். பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது. சாதியத்தினை இல்லாதொழிக்க இடையூறாக இருப்பது நிலமானிய எச்சமேயாகும். இங்கு முதலாளித்துவம்- ஏகாதிப்பத்தியம் என்ற கட்டத்தில் வாழ்கின்ற போதும் பழைய உற்பத்தி உறவே மறுபடியும் மறுவுற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இனக்குழும வாழ்வு முறையில் அமைந்த சமூக உறவின் எச்சங்கள் நிலப்பிரபுத்துவத்தில் தொடர்கின்றது. அதேபோல முதலாளித்துவத்தில் ஏன் ஏகாதிபத்தியத்திலும் நிலப்பிரபுத்துவ சமூக உறவு தொடர்ச்சியாகத் தான் இருக்கின்றது. இன்றையக்கு மேற்கு தேசங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்றால் அவர்களின் வாழ்வு முறையில் இருக்கின்ற சமூகப் பண்புகள் முழுமையான தனித்துவவாத பண்பு கொண்டதாக இல்லை.
மேற்குநாடுகளில் கிறிஸ்தவ மதபீடத்தின் ஊடாக நிலமானியம் அழுத்தமாக பாதுகாக்கப்படுகின்றது. கால்வின், லூதரின் மதத்தை தனிமனிதத் தெரிவாக முன்வைத்தார்கள். இவர்களின் சிந்தனை முதலாளித்துவ  உற்பத்தி முறைக்கு ஆதரவாகவும் (உழவர்களுக்கும் வணிகர்களுக்கும் இடம்பெற்ற போரே பக்தி இலக்கியம் என்பர் அதுபோல அடிமைகளை விடுவித்த லிங்கனின் செயல் என்பது முதலாளித்துவ  உற்பத்தி முறைக்கு ஏற்றதாகும்)
‘‘ஆனால் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றால் தம்மையும் தமது செய்கைகளையும் உடமைகளையும் சுதந்திரமாகக் கையாளக் கூடிய நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சமத்துவ நிலையில் உள்ள நபர்கள் முதலில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ‘‘சுதந்திரமான‘‘ ‘‘சமத்துவமான‘‘ மனிதர்களைப் படைப்பதே முதலாளித்துவ உற்பத்தியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இது அரை உணர்வுள்ள முறையில், மதவேடத்தில் நடைபெற்றாலும் லூதர் மற்றும் கால்வினுடைய மதச் சீர்திருத்த காலத்தில் இருந்து இது கோட்பாடாக உறுதிப்பட்டது.‘‘ (ப 130 கு.அ.த தோற்றம்) இவ்வாறு தத்துவப் போக்கு இருந்த போதிலும் முற்றாக கால்வினுடைய சிந்தனைப் போக்கு நிலப்பிரபுத்துவத்தின் சிந்தனை வடிவத்தை முற்றாக அழிக்கவில்லை. 
முதலாளித்துவ வளர்ச்சி என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முழுமையடையவில்லை. முதலாளித்துவம் என்பது மார்க்ஸ் எதிர்பார்த்தது போலவே பழைய உற்பத்தியில் இருந்து விடுதலைபெறுவார் என எண்ணிக் கொண்டார். 
இங்கு பழைய உற்பத்திமுறையில் அமைந்த நிறுவனக் கட்டமைப்பு மாற்றாக புதிய கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்று பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் முடிவிற்கு வந்தனர்.
மேற் கண்டது போல சாதியத்தினை ஒழிப்பதற்கு உட்கட்டுமானம் மாத்திரம் துணைபுரியாது. மார்க்ஸ்

·         கழிவை மறுசுழர்ச்சிக்கு உட்படுத்தும் போது மனித வலு ஒரு குறிப்பிட்ட மனித வலு அவசியமாகும்.
·         மலக்கழிவு – வடிகால் இவற்றினை நவீனமயப்படுத்தினால் மனிதர்கள் எவரும் தமது கையாள் அள்ளும் நிலைமுற்று முழுதாக  இல்லாதாக்கலாம்.  இங்கு இயந்திரங்களை கையாள்வதற்கே மனிதர்கள் அவசியப்படுகின்றது.
இவ்வாறு நவீனமயப்படுத்தத் தூண்டுதவற்கான போராட்டங்களையும் போராட்டத்திற்கான முனைப்பையும் செய்யமுடியவில்லை.  இங்கு மார்க்ஸ் கணித்த  மேற்கட்டுமானத்தில் ஏன் மாற்றத்தை உண்டு பண்ணும் அல்லவா?
இறுதியாக
சாதீயம் தொடர்ச்சியாக உயிர்வாழ்வதற்கான பொருளாதார அடிப்படை என்பதை  அறிவது மாத்திரம் அல்ல. மாறான அதனை மாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதிலும் குறிப்பாக முதலாளித்துவ பொருளுற்பத்தி காலத்திலும் செய்ய முடியும். அதற்கான வேலைமுறைகள் என்பதும் அவசியமாகின்றது. இந்த பொருளாதார அமைப்பில் கூட பல சீர்திருத்தத்தினை கொண்டுவர முடியும். மனிதர்களை கையால் அகற்றும் கொடிய நிலையை  குறைந்தபட்சம் தீர்க்க முடியும். இதனைச் செய்யாததுமட்டுமல்ல இதற்கான வேலைத்திட்டத்தின் பற்றாக்குறையை நிறையவே காணமுடிகின்றது.
ஆட்சியில் அதிகாரம், சலுகைக்காக போராடும் அடையாள அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள் ஏன் இந்த மாற்றத்தை கோரி போராட வில்லை. 1980களில் இருந்து தலித்திய கட்சிகள் என அடையாள அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள்  வடிகால்லமைப்பு, கழிவு, மலத்தினை அகற்றல்  நவீனமயப்படுத்தப் போராடும் முறையில் எந்த வேலைத்திட்டத்தினையும் முன்வைக்காது. தனியே ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள பிரபுகுலத்தவர் (வசதிபடைத்தவர்) நலன் பேணும் அமைப்புகளாகவே இருக்கின்றது.

இன்றைய மதச்சாயம்
இன்றைய சடங்குகள் சம்பிரதாயங்களில் சமயம் சார்ந்த சிந்தனைவடிவம் என்பது புரையோடிப் போயுள்ளது.   தொல்குடி பழக்க வழக்கங்களும், வழிபாட்டு சடங்குகளும் சிதைந்தும் உள்ளது. அந்த இடத்தில் பக்தி இலக்கியத்தின் பின்னராக காலத்தில் நிறுவனமயப்பட்ட சடங்குள் என்பது நுழைந்துவிட்டதும், வர்ணாசிரமச் சிந்தனை உள்நுழைந்து விட்டது.  இது சோழர் காலத்தின்  பின்னரான காலத்தில் சாதிய அழுக்குப்படிந்த சமூகமாக முற்றுமுழுதாக மாறிவிட்டது. சோழன் ஆக்கிரமிப்பு அரசியல் வழியில் சிந்தித்த காரணத்தினால் அவனுக்குத்தேவையானது மூலதனம் என்பது கிடைக்க வேண்டியிருந்தது. மூலதனத்தின் குவியல் என்பது சாதியத்தினை இறுக்கியிருக்க முடியாது. மக்களின் பண்பாடுகளை சனாதன தர்மத்தில்  அமைந்ததாக இட்டுக்கட்டப்படும் கருத்தியல் என்பது வெகு வேகமாக சமூகத்தில் பரப்பப்படுகின்றது, ஆழமான சமூக விதியாக மறுபடி மறுபடி கற்பிக்கப்படுகின்றது.
ஆனால் இன்றைய சமூகக் கட்டமைப்பை இன்றைய நிலையில் இருந்து  சமூகத்தை அணுகும் போக்கும் இன்று  மதவாத, சாதியத்தினுள் இருந்து சமூகத்தின் நீதிநெறி சிந்தனைகளை, சடங்குகளை நியாயப்படுத்தும் போக்கே பழமைவாதிகளால் முன்வைக்கப்படுகின்றது.
ஒரு சமூகத்தின் பண்பாடு பற்றிய ஜனநாயகப்படுத்துவது என்றால் முன்னைய உற்பத்தி உறவில் அமைந்த சிந்தனையும், அதன் வாழ்வியலையும், இயல்பான சமூக நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்வதன் ஊடாகவே சுதேசிய அடையாளத்தைப்  ஜனநாயகப்படுத்த முடியும்.
ஆனால் இது சம்பந்தமான ஆய்வுகள், முயற்சிகள் புரட்சிகர அரசியல் போக்கில் புதிய பண்பாட்டுத் வேலைகளை திட்டங்களில் அல்லது ஆய்வுக் கண்ணோட்டங்களில் தவறான போக்கு இருப்பதையே தற்போதைய காலத்தில் விவாதங்கள் எழுகின்ற போது அறிய முடிகின்றது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7KlLGc0DheIGX6DnCr0pLRGHrI2uLpy0IwbDkW7Yhj6tB7GnFtXr6Tm7OGb3m8KbkEPpml-ogENsZiyfQkx5XLg3TjnKIrYlbN-4Zmro2HcGuLA2R7iBPp42314mm2Tt95dLSCyey4Rg/s320/Jallikkattu.jpg
பண்டைய வழிபாட்டுமுறை
பண்டைய வழிபாட்டு முறை என்பது இன்றைய சிறுதெய்வ வழிபாட்டிற்கு முன்னோடியாக இருந்துள்ளது. குலக்குறிகளை வணங்குதல், நடுகல் வைத்தல், பலியிடுதல் என்று குலத்தியிடுதல் என்று குலத்தலைவனால் இறந்த முன்னோர்களின் ஆவியுடன் கதைத்துக் கொள்ளும் சிந்தனையும் இருந்துள்ளது. இதனை மானிடவியில் தொல்வழிபாட்டு முறையை சாமானிசம் (Shamnism) என்று அழைப்பார்கள்.
Rites de passage என்று மானிடவியலில் அழைக்கப்படும் நிலைமாற்றுக் கால சடங்கு, நன்றிச் சடங்காகும். இது நிறுவனமயப்பட்ட மதங்கள் உருவாகுவதற்கு முன்னே இருந்துள்ளது. சூரியனை கும்பிடுவது எவ்வாறு தமிழ் வழக்கம் இல்லையோ அவ்வாறே திருனூத்து வைப்பதாகும். திருனூத்துக் கூட குலக்குறியின் எச்சமாக இருக்கலாம்.  குலக்குறிகள் என்பது இனக்குழும வாழ்வியலில் இயல்பாக இருந்திருக்கின்றது.  முன்னோர்களின் நினைவிற்காகவும், தமது வாழ்வியலுக்கு நம்மையை செய்ய வேண்டியும்  முன்னோர்களின்  தொடர்ந்தும் போற்றியிருக்கின்றனர்.

Rites de passage (விளைச்சலைக் குறிக்கும் பூப்புனித நீராட்டுவிழா என்ற சடங்கு கூட அவ்வகையான Rites de passage தான்- பிற்பால சொத்துடமைச் சமூகத்தில் சொத்துடமையை நிலைப்படுத்தும் சடங்காகியது.) நன்றிநவில்- இடைமாறும் கால சடங்கு வகை என்பது முற்பட்டது. இந்த வகைச் சடங்குள் பல நம்சமூகத்தில் உண்டு.

மித்திரன்- சூரிய வழிபாடு என்பது தமிழர் வழிபாடு அல்ல. மத்திய கிழக்கிலும், இந்தோ ஐரோப்பியர்கள் தான் சூரியவழிபட்டார்கள். சூரிய விழாவே இன்றைய நத்தார் பண்டிகையாக கிருஸ்தவத்தில் உள்வாங்கப்பட்டு கிறிஸ்துவின் பிறப்பு நாளாக மாற்றப்பட்டுள்ளது.
நிறுவனமயப்பட்ட சமயங்களுக்கு முற்பட்டதே பொங்கலாகும். இது தொன்மையான வரலாற்றைக் கொண்டது. இதனை ஏற்பது ஏற்காமல் விடுவது தங்களின் உரிமை. ஆனால் மனித வளர்ச்சிப் போக்கில் வரலாற்றின் படி பொங்கல் தொன்மையானது. மதத்திற்கும் பொங்கலுக்கும் சம்பந்தமில்லை. தமிழ் தேசிய இனத்திற்கான விழா என்பது தான் சரியானது. ( மேலும் 2000 தமிழக சட்ட மன்றத்தில் தமிழர்களுக்கான புதுவருடமாகவும், தமிழர் திருவிழா என்றும் தீர்மானமாக நிறைவேற்றபட்டது) தமிழ் தேசிய இனத்தினுள் கத்தோலிக்கர்களும் அடங்குவார்ககள். அதேவேளை தமிழகத்தைப் போல இலங்கை முஸ்லீம்களும் தமிழ் தேசிய இனத்தவர் என்று உரிமை கோரினால் அதற்கு யார் தடைசெய்ய முடியும்.

விளையாட்டுப் பற்றிய
சாதியத்திற்கு முன்னையது ஏறு தழுவல் விளையாட்டாகும். மனித குலவளர்ச்சியில் முதலாவது வேலைப்பிரிவினை என்பது பெண் என்பவள் பிள்ளையை பெறுவது என்பது தான்முதலாவது வேலைப்பிரிவினையாக  இருந்துள்ளது. அடுத்ததாக வேட்டையாடி வாழ்ந்த மனிதர் மிருகங்களை வளர்த்துக் கொள்வதில் தான் இரண்டாது பெரும்வேலைப் பிரிவினை உருவாகிக் கொண்டது. (ஏங்கெல்ஸ்) இவ்வாறான இரண்டாது வேலைப்பிரிவினையினால் ஏற்பட்ட மோதல் அல்லது முரண்பாட்டை விவிலியத்தில் காயின்,  ஆபேல் என்ற சகோதர முரண்பாட்டில் கண்டு கொள்ள முடியும்.  தனியாக கால்நடைகளை பழக்கி மேய்பதில் தொடங்கிய வாழ்வியலின் தொடர்ச்சி என்பது மிருகங்களுடன் போட்டிபோடும் விளையாட்டாக உருவாகிக் கொண்டது.
சாதியம் என்பது பின்னால் வந்தது. சாதியமையவாதத்தில் இருந்து அல்ல. பண்பாட்டு விழுமியங்கள் எங்கும் கருத்துமுதல்வாதம் உள்ளது. அதனை எவ்வாறு பொருள்முதல்வாத சிந்தனை கொண்டதாக புதிய கலாச்சாரத்தினை உருவாக்கிக் கொள்வது என்ற அணுகுமுறை முக்கியமானது. பக்தி இலக்கியத்தில் கருத்துமுதல்வாதம் உள்ளது என்பதற்காக அதன் இலக்கிய வளத்தை மறுப்பது எவ்வாறு சாத்தியம்? அல்லது அந்த முழு இலக்கியத்தினையும் (பேரா.வானமாமலை ஆராய்ந்துள்ளார்) எதிர்க்க வேண்டுமா??பக்தி இலக்கியத்தில் உள்ள கருத்துமுதல்வாதத்தினை அம்பலப்படுத்தப்பட வேண்டுமா? 
இந்த ஏறுதழுவல்-மஞ்சுவிரட்டல் என்பதில் சாதியம் தோய்ந்திருக்கவில்லை என்று நான் கூறவரவில்லை.  எம் சமூக அமைப்பு எங்கும் சாதிய, மத ஒடுக்குமுறை எங்கும் உள்ளது. ஒடுக்குமுறை இருக்கின்றது என்பதற்காக ஒதுக்குவது என்றால் எத்தனை விடயங்களை ஒடுக்குவது? இங்கு ஒதுக்குவதான சமூகமாற்றமா என்ற கேள்வியாக நம்முன் வருகின்றது.

தமிழ் சமூகத்தின் பிற்போக்குத் தனங்களில் உள்ள கருத்துமுதல்வாத, ஜனநாயக விரோத நிலைகளை அகற்றப் போராடுவதன் ஊடாகவே புதிய பண்பாட்டைப் படைக்க முடியும். அதேபோல தமிழர் பண்பாட்டில் தூய்மையான தொல்குடிப் பண்புகளோ அல்லது தூய்மையான நிலமானிய பண்பாடு என்பது கிடையாது. தொல்குடி- நிலமானிய உற்பத்தியில் முறையில் உருவாகி சிதைப்புக்குள்ளாகிய பண்பாடுகளே உள்ளன. ஒரு தேசிய இனத்தின் பண்பாடு என்பது மேற்கின் மையவாத சிந்தனையில் இருந்து உருவாக்கிக் கொள்ள முடியாது. அது தாராளவாத சிந்தனைப் போக்கேயன்றி ஒடுக்குமுறையை களைந்த புதிய பண்பாட்டு- கலாச்சாரப் புரட்சியாகிவிட முடியாது.

இறுதியாக
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான pacifism - - மென்மைப் போக்கு என்பது போராட்டங்களை ஊக்கப்படுத்தாது அகிம்சை என்ற  போக்கை ஊக்கப்படுத்தினர். தனிமனித மையப்பட்ட சிந்தனை வடிவமும் போராட்டங்களை என்பது காலாவதியாகிப் போனதாக கற்பிதம் செய்தது. குறிப்பாக சொல்லப் போனால் முதலாளித்துவ தாராளவாத சிந்தனைப் போக்கே புரையோடிப் போய்யுள்ளது.
தன்னார் நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டது
இது மனித உரிமை அமைப்புக்கள், தன்னார்வ உதவிநிறுவனங்கள், சூழலியல் அமைப்புகள், மிருக பாதுகாப்பு அமைப்புக்கள் எனவும் சிவில் சமூக அமைப்பு என்ற போர்வையில் உருவாக்கிக் கொண்டது.
தனிமனிதர்களை உதாரண புருசர்களாகக் கொண்டு லொபி வடிவத்தை உருவாக்கிக் கொண்டது.

நிர்வனமயப்ட்ட முதலாளித்துவ உற்பத்திமுறை, சமூக உறவு என்பதற்கு அப்பால் பழைய (தொழில் நுட்பமான இயந்திர) இயந்திரமற்ற செய்பாடுகளை முடிவிற்கு கொண்டு வருவது தேவையாகின்றது.
மிகை உற்பத்தி, கூடிய லாபம்,  குறைந்த செலவு,....
பழையதை நிறுத்தி விட்டு புதியதை புகுத்துவதன் ஊடாக தங்கி நிற்கும் நிலையை ஏற்படுத்துவது.
ஒரு சிந்தனை வடிவம் இன்று தோன்றுவது போல் அல்ல அந்த சிந்தனை வடிவம் 1000  ஆண்டுகள் கொண்டிந்தாலும்  அவைகள் புதிய உற்பத்தி உறவிற்கு  பின்னரே மாற்றத்திற்கு உள்ளாகின்றது.
Macro  - விரிந்த கண்ணோட்டத்தில் ஆயிரக்கணக்காண ஆண்டுகளின் பின்னரா மாற்றம் என்பது நிர்ணயிக்கப்பட்டதே. பழைய உறவிற்கு மாற்றாக உள்னுழைக்கப்படுகின்ற மேற்கு சார்ந்த சிந்தனை வடிவம் என்பது ஜீவகாரூண்யமாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. இவ்வகையான போக்கு என்பது மேட்டுக்குடிக்கான பொழுதுபோக்கு செயற்பாடாக அமைகின்றது.

மதத்தினுள் திணிக்கப்பட்ட பண்பாடு என்பது அவலத்தில் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் அடையாளத்தினுள் அடக்கிவிட்டு குறுகிய வட்டத்தினுள் கொண்டுவந்து சமூகத்தை பிரிப்பது சமூக அவலம் தான்.
அரசியல் பொருளாதாரம் என்பது சுயசார்பை அழிப்பது
சிறுவிவசாயம் சார்ந்த உற்பத்தி முறைகளை சிதைப்பது
இதன் ஊடாக சுதேசியத்தினை சிதைத்து நுகர்வு, அன்றாடவாழ்வியல் தேவைகளை தன்னை தங்கிநிற்கும் நிலையை தோற்றுவித்து தனது அங்கியை நமக்குத் ஏகாபத்தியம் தருக்கின்றது. அதனைச் சுமந்து கொண்டு தான் இருக்கின்றோம்.
இந்த வகையில் தான் பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றிற்கு அடிப்படையாக மேற்கின் சிந்தனைவடிவம், பொருளாதார வடிவம் என்பது திணிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் இருந்து தான் கலாச்சாரம், பண்பாடு பற்றிய புரிதல் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.
தைப்பொங்கல் பற்றியும், ஏறுதழுவல் பற்றிய பிரச்சனை வருகின்ற போது எம்மவரின் சிந்தனை வடிவம் என்பது  போதிய சமய, சிந்தனை வடிவம் பற்றிய அறிவுத் தேடல் அற்றே உள்ளது.
புதிய பண்பாடு, புதிய கலாச்சாரங்களை மதச் சிந்தனை, பிற்போக்குக் கூறுகளை அகற்றிய கலாச்சாரம் பண்பாடு என்பவற்றை  தொன்மை நிலையை கண்டறிகின்ற போது நமக்கான சொந்தக் கலாச்சாரத்தை கண்டடையமுடியும்.  புதிய கலாச்சாரம் பண்பாடு என்பது மரபுகளில் இருந்து நிச்சயமாக கண்டடையமுடியும். ஆனால் தேசிய வெறியர்களாகவும், மரபுவாதிகளாகவும் முத்திரை குத்திக் கொண்டு ஏகாதிபத்திய பொருள் உற்பத்தி, சிந்தனையை தூக்கிப் பிடிக்கப்படுகின்றது. இவற்றிற்கு மாற்றானது சுதேசிய சிந்தனையை வடிவத்தை உருவாக்கிக் கொள்வது அவசிமானதாகும்.


இன்றைய சாதிகளான தேவர், நாடார், வன்னியர், வெள்ளாள கவுண்டர், நாயுடு, ரெட்டி, முதலியார், நாட்டுக்கோட்டை செட்டி, பிள்ளை, கோனார் முதலியனவும் இன்ன பிற 'ஆண்ட பரம்பரைகனவில்  மிதக்கின்றார்கள். இந்தச் சாதிகள் அனைத்தும் ஆண்ட பரம்பரையாக நிறுவன எண்ணுவது சமூக விஞ்ஞானப் பார்வைக்கு முரணானது. காரணம் சாதிகளாக இருக்கின்ற போதிலும் வர்க்க ரீதியாக பிரிந்தே உள்ளார்கள். இவர்கள் வர்க்க ரீதியாக பிரிந்திருக்கின்ற சாதிகளில் உள்ள அனைவரும்  அந்தஸ்தினை ஒரே அளவில் சமூகத்தில் கொண்டிருக்க முடியாது.
இங்கு சாதியக் கட்டமைப்பு என்ன?  இனக்குழுமம் எவ்வாறு தேசிய இனமாகின்றது? தேசிய இனம் எவ்வாறு தேசமாகின்றது என்ற புரிதல் தேவை என்றால் சமூக விஞ்ஞானப் பார்வை அவசியாகும்.
சமூகத்தினை ஆராயும் போக்கினை அறிந்து கொள்ள சாதியக் கட்டமைப்பு என்பதை விஞ்ஞானப் பார்வைக்கு உட்படுத்த வேண்டும். குறிப்பான பின்னவீனத்துவ அரசியல் போக்கு என்பது 1984களில் பின்னரும், சோவியத் வீழ்ச்சியின் பின்னாரான காலம் என்பது சமூக விஞ்ஞான அறிவு என்பது படுபிற்போக்கு நிலையை அடைந்துள்ளது. சமூக ஆய்வில் புதிய புதிய கண்ணோட்டங்கள் - ஆய்வுக் கண்ணோட்டங்கள் என்ற முறையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதில் சாதியந்தன் புத்தி குலமந்தன் ஆசாராசம் என்று சாதியே எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக முன்னிறுத்தியது. சாதியப்புத்தியே அனைத்துக்  காரணம் என்று சாதியைச் சுற்றியே கேள்விகளை தொடுத்தது. இங்கு இயங்கியல் பொருள்முதல்வாதம் நுண்ணிய ரீதியில் அகற்றப்பட்டது. இன்று பெரும் பேச்சாளப் பெருமக்களாக முற்போக்கு முகமூடி அணிந்து வலம்வருபவர்களின் போக்கு  இருக்கின்றது. அனைத்தையும் சாதிய அடிப்படையில் விளங்கிக் கொள்ள வைப்பதற்கான ஆழக்கிடங்கை உருவாக்கியவர்கள் இவர்களும் பொறுப்பானவர்கள் தான்
பாரதியின் படைப்புகள் அவரின் வெளிப்பாடுகளை சாதியை உணர்வை நிறுவதன் ஊடாக அணுகுமுறை முன்னிறுத்தப்பட்டது அதுபோல வாஞ்சிநாதனின் பார்ப்பண சிந்தனையே அவரை ஆஸை கொல்ல துணைநின்றது போன்று சாதியைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்த இயங்கியல் மறுப்பு போக்கு என்பது சிந்தனை என்பதே வாழ்நிலை தான் உணர்வுகளை தீர்மானிப்பது என்பதை மறுத்து உணர்வு- பிறப்புத் தான் சிந்தனையை தீர்மானிக்கின்றது என்ற மார்க்சிய எதிர்நிலைக் கருத்து முன்னிறுத்தப்பட்டது.
அன்றைய கொலனித்துவ அதிகாரியாக இருந்த ஆஸ் என்பவனர் முதலாளித்துவ சமூகப் பொருளாதார உற்பத்திற்கேற்ப முதலாளித்துவ ஜனநாயகத்தை ஏற்படுத்தினார் என்பதால் ஆஸ் ஆக்கிரமிப்புச் செய்திருந்த கொலணித்துவத்தின் அதிகார வர்க்கம் என்பதை மறுத்து விட்டு தியாகியாக்குவது அபர்த்தமான பார்வையாகும்.   இவ்வாறான பார்வைக்கு மாற்றாக சமூக விஞ்ஞானப் பார்வை என்பது அவசியமானதாகும். சாதியமே நிர்ணயிக்கும் காரணியாக கொள்வது சாதியவாதத்திற்கு உட்பட்டதேயாகும்.

இவர்கள்  நவீன தேசிய இனங்கள், நவீன தேசங்கள் பற்றிய விஞ்ஞானப் பார்வை இல்லாத அவலத்தை அவதானிக்க முடிகின்றது. தேசிய இனங்கள், தேசங்களாக வளரும் என்ற சிந்தனைப் போக்கினையும்  முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்கள் வளரும் என்ற புரிதல் என்பது (taboo) தவிர்த்தலுக்கு உள்ளாகின்றது.  இன்றைய சாதி- தேசியவாதிகள் சாதியம் என்பது தந்தை  பெரியார், மு.கருணாநிதி போன்றோரின் சாதிப் பின்புலத்தை கிளறி எடுத்து தமிழரை வேற்று மானிலத்தவர்கள் தமிழர்களை ஆள்கின்றார்கள் என்ற சிந்தனை வடிவத்தை ஏற்படுத்தி தமிழ் தேசிய இனத்தினுள் தூய தமிழ் சாதிகளைத் தேடுகின்றார்கள். தூய தமிழ் தேசியம் என்பதை தமிழ் சாதிகளைக் கொண்டு கட்டமைக்க முற்படுகின்றார்கள்.
தலித்தாக இருந்தால் தான் தலித்துக்களின் உணர்வை அறியமுடியும், ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தால் தான் ஒடுக்கப்பட்ட சாதியில் வலியை புரிந்து கொள்ள முடியும் என்று எதற்கும் சாதியமே அளவு கோளாக நிறுத்தப்பட்டது. சாதியத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களால் தான் முழுமையான இலக்கியம் படைக்க முடியும் என்ற கருத்து விதைக்கப்பட்டு மற்றைய கருத்துக்களை பலவீனமாக்கப்பட்டது. 

தனிமனிதர்களுக்குள்ளேயே பிரச்சனைக்கான தீர்வைக் காணும் உச்சமே ‘‘'தன்னைச் சாதிவெறியன் அல்ல என மறுபடியும் மறுபடியும் நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனே' என்பதாகும்.  இது தலித்தியவாதத்தின் உச்சமான அடையாளக் கோட்பாடாக முன்னிறுத்தப்படுகின்றது. பார்ப்பணியம், யாழ்சைவவேளாளம் என்ற நிலமானியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மாத்திரம் உரித்தானதாக இட்டுக்கட்டுகின்றது.

தமிழகத்தில் பொதுவுடமைக்கட்சிகளில் உள்ள பதவிகளில் இடவொதுக்கீடு கோரும் அவலம் என்பது தமிழகத்தில் அடையாள அரசியல் ஊடாக கோரப்படுகின்றது. பொதுவுடமைக் கட்சியில் சேர்வதற்கும், அடிப்படை உறுப்பினராக சேர்வதற்கும் விதிகள் உண்டு. ஊழியர்களின் பயிற்சிக் காலம் எவ்வளவு முக்கியமோ அதேபோல உறுப்பினரின் (பால், சாதிக்கு அப்பால்) அரசியல் முதிர்ச்சியும், அரசியல்மயப்படுத்தப்பட்ட நிலை என்பது முக்கியமானதாகும். இங்கு ஒரு தோழர் போதிய அரசியல்அறிவைப் பெருக்கும் வகையில் கட்சி துணை நிற்க வேண்டும். ஒவ்வொரு தோழர்களையும் உயர்ந்த சிந்தனைதளத்திற்கு வளர்த்து விடுவதான் கட்சியின் கடமையாகும்.  அரசியல்மயப்படுத்தல் ஊடாக கட்சியில் பொறுப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. இங்கு அரசியல் உள்ளடக்கத்தை மறுத்த அராஜகப் போக்கே அடையாள அரசியல் ஊடாக தாராளவாத முதலாளித்துவக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

இந்த மேலான்மை கருத்தியல் கொண்ட சமூகமே தன்னை சுற்றியும் வரலாற்றை எழுதியுள்ளது.  சமூக ஒழுங்கு ஆதிக்க வர்க்கதின் சமூக ஒழுங்காக பேணப்பட்டு வந்துள்ளது. தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தோட்டம் கொடுப்பவர்கள் யார்? இந்தியப் பத்திரிகை இந்துவில் பாடல்வேறு-ராகம் ஒன்றுதான் என்ற தலைப்பில் “மாமன்னர் மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், மாமன்னர் பூலித்தேவன், மாவீரன் சுந்தரலிங்கம், மாவீரன் வௌ்ளையத் தேவன், தீரன் சின்னமலை, மாவீரன் கோபால் நாயக்கர், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த வீரநங்கை குயிலி, மாவீரன் ஊமத்துரை உள்ளிட்டவர்கள் அப்படித்தான் அழித்தொழிக்கப் பட்டனர்.”
http://tamil.thehindu.com/opinion/columns/பாடல்-வேறு-%25E ( பாடல் வேறு - ராகம் ஒன்றுதான்!)

இவர்களில் குயிலியின் பெயரை மாத்திரம் எழுதுகின்ற போது சாதியை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இந்த சமூகம் இருக்கின்றது. சாதியச் சிந்தனை மறுவுற்பத்தி செய்யும் இடமாக பொருளாதார அமைப்பும் அதுசார்ந்த நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, கலாசாலையும் முக்கிய பாத்திரத்தினை வகிக்கின்றது. அனைத்து சமூகத்தளத்தில் உள்ளது போலவே கலாசாலை ஆய்வுமுறை, அது கற்பிக்கும் வரலாறு பற்றியும் ஒரு மாறுதலைக் கொண்டு வரவேண்டும். 

மேலாதிக்கத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்ற போது அடையாளங்கள் புதுப்பிக்கப்படுகின்றதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இன்னுமொரு செய்தி ‘‘பகத்சிங் உடன் தூக்கிலிடப்பட்ட அஸ்வகுல்லா கானை எத்தனை பேருக்கு தெரியும்...?
இசுலாமியர்களின் தியாகங்கள் மறைக்கப்படுவதையும், மறக்கடிக்கப்படுவதையும் நினைவுகூர்வோம்‘‘ இங்கு வரலாறுகள் என்பது  பொது இலட்சியத்தின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பின்னால் உருவாகின்ற பிரித்துப் பார்க்கின்ற சிந்தனை என்பது தத்தம் அடையாளங்களுடன் இணைத்துக் கொள்வதாகும்.  மனிதர்களின் சிந்தனைகளை வரலாற்றோட்டத்துடன் இணைத்துப் பார்க்காத விளைவுகளின் வெளிப்பாடாவும் கொள்ள முடியும்.


கருப்பொருள் பற்றி
இந்த சமூக அமைப்பில் உழைக்கும் மக்களை தீண்டத்தகாதவர்கள் என்ற ரீதியில் நொடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். உழைக்கும் வர்க்கம் ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாது பல துன்பங்களை அனுபவித்து வந்திருக்கின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புகள் காட்டப்பட்டாலும் அவை மிருகத்தனமாக அடக்கப்பட்டன. அவர்கள் எதிர்ப்புக் காட்டுவதை தவிர்த்து பணிந்து சென்றிருக்கின்றனர். உழைக்கும் மக்களைச் சுரண்டுவதற்குரிய தத்துவத்தையும், அவர்களை அடக்கிக் கொள்ள படை பலத்தைக் கொண்ட அதிகாரத்தையும் கொண்டு வந்திருக்கின்றனர். ஒடுக்குமுறைச் சமுதாயத்தில் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தாம் ஏன் ஒடுக்கப்படுகின்றோம் என்பதற்கு முழுமையான விளக்கம் அவர்களுக்கே தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிவதெல்லாம் அவர் பெற்றோர் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர், பாட்டன், முப்பாட்டன்களும் அவ்வாறே இருந்திருக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக ஐதீகத்தின் அடிப்படையில் என விளக்கம் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.
பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், ஒடுக்கப்பட்டவர்களும் கோயில்களுக்குச் செல்வது தடை செய்யப்பட்டு இருக்கின்றது. ஒடுக்கப்பட்டோர் என்போர் முற்பிறப்பில் செய்த பாவத்திற்காக உயர் சாதியினருக்கு ஊழியம் செய்து முற்பிறப்பின் பாவங்களை போக்க வேண்டும் என்கின்றனர். குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள் சமூக நடவடிக்கைகளில் இருந்து அகற்றப்பட்டனர். ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டவர்களை  ஒதுக்கி வைப்பதற்கு பல தந்திரங்கள் கையாளப்பட்டன. தீட்டு என்பது பல சமூக அம்சங்களில் பார்க்கப்படுகின்றது எனினும் இதில் பாதிக்கப்படுவது ஒடுக்கப்பட்ட மக்களே. இந்த விடயத்தில் ஒடுக்கப்பட்டவர்களும் (சூத்திரரும்),  பெண்களும் ஒரே வகையென பகவத் கீதை போதிக்கின்றது.
தவிர்த்தல் (taboo) என்பது துடக்காக சமூக வளக்கத்தில் சமூகத்தில் இருந்து வந்திருக்கின்றது. தவிர்த்தல் என்பது இயற்கையை ஒட்டிய நிலையில் இருந்த பொழுது அவை இயற்கை விதிகளுக்குள் அடங்கியிருந்தது வரைக்கும் அவை அடக்குமுறைக்கு உரியதாக இருக்கவில்லை. தவித்தலுக்கு பொருளாதார நலன், பொருளாதார நலனுக்காக தெய்வத்தன்மை கொடுக்கின்ற போது ஒடுக்கு முறைக்குரிய ஒன்றான மாற்றம் பெறுகின்றது.
இந்த ஒடுக்கப்பட்ட சாதிகள் நாளாந்த வாழ்வில் இருந்து ஒதுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அரைமுதலாளித்துவ வளர்ச்சிக் காலகட்டத்தில் அமைந்து கொண்ட உணவு விடுதிகளில் உணவு உண்ண, கோவில்களுக்குச் செல்வது, பொதுபாதையை பயன்படுத்துவது, கிணறுகளை பயன்படுத்துவன தடைசெய்யப்பட்டு இருந்தது. இலங்கை நிலவரத்தைப் பொறுத்தவரை ஒப்பிட்ட ரீதியில் தீண்டாமை கறுமையான இறுக்கமானதாக இருந்திருக்கவில்லை. இலங்கையில் பார்ப்பனிய ஆதிக்கம் இல்லை, ஆனால் வடக்கில் வேளாளர் ஆதிக்கமும் கிழக்கில் முக்குவர்களின் ஆதிக்கமும் இருந்திருக்கின்றது. நிலப்பிரபுத்துவச் (முதலாளித்துவ ஜனநாயகமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதனை அரைநிலமானியம் எனலாம்) சிந்தனையான பார்ப்பணியம், சைவவேளாளம் (சைவம்- தமிழ்- வேளாளம்)  என நிலமானியச் சிந்தனை அழைக்கப்படுகின்றது.
பிராமணர்- பிராமணியம் இரண்டும் வேறானவை. ஒன்று மக்கள் கூட்டத்தை குறிப்பதுடன் தம்மை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்ளும் மேலான்மை குடிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொள்பவர்கள். இங்கு பிராமணியம் என்பது சிந்தனை தன்னை உயர் குடியாக வைத்திருப்பது மாத்திரம் அல்ல சமூகத்தை வர்ணங்களாக பிரித்து வைத்து தாழ்ந்த உற்பத்தி சக்தியாக தொடர்ந்து வைத்திருப்பதன் ஊடாக தன்இருப்பை நிலைகொள்ள வைக்கின்றது. இவ்வாறான சிந்தனையை அனைத்து சமூகத்தின் படிமுறை எங்கும் விதைத்துள்ளது. சைவவேளாளம் (சைவம்- தமிழ்- வேளாளம்). பிராமணியம் என்ற சிந்தனை நிலப்பிரபுத்துத்தின் கடுமையானது வக்கிரத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது . மற்றைய நாடுகளில் இருந்த நிலப்பிரபுத்துவம் உழைப்பை வழங்குவதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருந்தது. இது வக்கிர சிந்தனையை தொடர்ந்து வைத்து  தனிமனிதர்களின் தெரிவை மறுத்துள்ளது. இந்தச் சிந்தனையின் உதவியுடன் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தினர் திட்டமிட்டவகையில் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் காலங்காலமாக வதைபட்டு வந்துள்ளனர்.
வரலாற்றில் பார்ப்பான் என்பது பிராமணர்களை குறித்து நிற்கவில்லை.  சங்க காலத்தில் சங்கறுக்கும் பார்ப்பான் என்று வருகின்றது. ஆக பார்ப்பான் என்பது Shaman- Shamanism - பேயாட்டி, வள்ளுவர், பரியாரி, வைத்தியர், குரு என்ற குலத் தலைவனுடன் சம்பந்தப்பட்டது. இங்கு பார்பணியத்தினையும் சாதியைக் கட்டமைப்பையும் தொன்மையாக்க புனையப்பட்டவைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.
இங்கு சைவவேளாளம் என்பதற்குப் பதிலாக அரைநிலமானியம் என்பதுதான் பொருத்தமானதாக இருக்கின்றது. காரணம் பிறப்பின் அடிப்படையில் இருந்து  மனிதர்களின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை. அது சமூகத்தின் வெளிப்பாடுகளில் இருந்துதான் சிந்தனைகள் தீர்மானிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு இலங்கையில் வேளாளர்கள் மட்டும் அங்கு ஆதிக்கச் சாதியாக இல்லை. அங்கு முக்குவர் சமூகமும் இருக்கின்றது. ஆகவே முக்குவ சமூகத்தின் சிந்தனையை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது? ஆக சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு என்பது அரைநிலமானிய  சிந்தனைக் கட்டமைப்பினுள் இருக்கின்ற போதும் வலிந்தெடுத்த முதலாளித்துவ உற்பத்தி கூறுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்றைக்கு ஆதிக்கச் சாதிகளாக இருந்தவர்கள் வரலாற்று ஓட்டத்தில் பொருளாதார வளர்ச்சின் ஊடாக ஆதிக்கத்தில் வந்தவர்கள். ஆதிக்கச் சக்திகளிடம் உழைப்பை விற்றவர்கள் அரைமுதலாளித்துவ பொருளாதார அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் உரிமை கொண்ட போதும் சாதியச் சிந்தனை சமூகத்தின் அனைத்து தளத்திலும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. சாதிய ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற தலித்தியம் என்ற கோட்பாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்த முனைகின்றனர். தலித்தியவாதிகள் சமூக பொருளாதார அமைப்பினை விளங்கிக் கொண்டுள்ளார்களா என்று கீழே பார்க்கப்பட இருக்கின்றது.
சமூகத்தின் உற்பத்தியான பிற்போக்குத் கருத்தியலே மக்களை அடிமை கொள்கின்றது. சாதியக் கருத்தியல் தொடர்ச்சியாக உயிர்வாழ்வது மதம், சாதி, குடும்ப உறவுகள் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. முதலாளித்துவ பொருளுற்பத்திக்கான பாதுகாப்புக் கருத்தியல் பாதுகாக்கப்பட்டுக் கொண்டு வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறை உற்பத்தி செய்யும் ஊழியர்களும் தேவையான வகையில் மறுவுற்பத்தி செய்யப்படுகின்றனர்.

ஆளும் அதிகார, உயர்வர்க்கத்தின் எப்பவும் குறிப்பிட்டளவு விகிதத்தினரே இருப்பார்கள். இன்று ஐரோப்பிய நாடுகளில் அரசபரம்பரைகள் இருக்கின்றன. அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களில் ஒரு பெரும் பகுதியினர் தம்மை அரசவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என வரையறுத்துக் கொள்வதில்லை. அரச வம்சத்தில் இருப்பவர்கள் (பிரித்தானியா உதாரணமாக) பிரபுவம்சத்தில் திருமண உறவு ஏற்படுகின்றது. ஆனாலும் அவர்கள் தாம் அரசவம்சம் என்று கருதிக் கொள்வதில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசவம்சத்தினர் இரத்த உறவினராக  இருக்கின்றனர். மரபுமாறாது இருப்பதற்காக அரச வம்சத்தில் திருமணவுறவுகள் நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கின்றது.  அரச, அல்லது குலச்சமுதாய காலத்து தேவராளர், வேலன்,  கோடாங்கி, வள்ளுவர் (shaman) விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே. இது பெரும் தொகையாக இருக்க மாட்டாது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும் மன்னர்களான சேர, சோழ,  பாண்டியர்கள் என்போரின் கொடிகளில் உள்ள சின்னங்களை தங்கள் சாதிக்குரியவர்களின் சின்னங்கள்  என்று உரிமை கொண்டாடும் நிலை இருக்கின்றது. ஆளும் அரசவர்க்கமும்  இலட்சக்கணக்கான வெகுசனங்களும் ஒன்றல்ல.  வரலாறு எங்கும் ஆளும் ஆட்சியாளர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே.
இதே போல இலக்கியத்திற்குள் தமது குலத்தினைக் குறிக்கின்ற சொல்லாடால் இருக்கின்றதா என்பதையும் முன்வைத்து தமது பின்னணியைப் பற்றிய கருத்துக்களை புனைகின்றனர். இவ்வாறான புனைதல்கள் சாதியப்பிளவற்ற தமிழ் (nation) தேசத்தின் உருவாக்கத்திற்கு தடையாக இருக்கின்றார்கள். இங்கு வகுப்புவாதம் என்பது தேசத்தின் உருவாக்கத்திற்கு தடையானதே. ஆனால் இலங்கையில் தேசத்தின் உருவாக்கம் பெற்றிருக்கின்ற போதிலும், அதில் இருந்து பின்னோக்கிய வளர்ச்சி கொண்ட கோட்பாடான தலித்தியமும், இரட்டைத் தேசியம் என்று சாதியவாதமும் முன்வைக்கப்படுகின்றது.  இனக்குழுமங்கள் தேசிய இனமாக பரிணமிக்கின்றது இது சமூக வளர்ச்சிப் போக்கில் கருத்தியல்வாதம் என்பது இருக்க முடியாது. இனக்குழுமங்கள் வர்ணாசிரமச் சிந்தனைக்கு அப்பாற்பட்டவையாகும். ஆனால் வளர்ச்சிப் போக்கில் அவர்களும் பலியாவது  நடைபெற்றிருக்கின்றது. 
தமிழகத்தில் தூய தமிழ் சாதிகளில் இருந்து தமிழ் தேசியம் உருவாக்க முடியும் என்று கற்பனாவாத, பிற்போக்குச் சிந்தனை முன்னிறுத்தப்படுகின்றது. ஒரு எல்லைகளில் ஒன்றுக்கு மேற்கட்ட தேசிய இனங்கள், இனக்குழுமங்கள் இருக்க முடியும். அந்த எல்லைப் பிரதேசத்தில் உள்ளவர்கள்  ஒன்றுகலக்க முடியும். பல நூற்றாண்டுகளாக வாழும் மக்கள் தமிழ் நாட்டில் தமிழ் தேசிய இனத்துடன் பின்னிப் பிணைந்துள்ளார்கள். ஆனால் அவர்களின் சாதிய அடையாளத்தை தோண்டியெடுத்து அவர்களை  நீங்கள் மற்றவர்கள் தாம் தான் தூய தமிழர் என்று பிரிவினை உண்டாக்கப்படுகின்றது. அதேவேளை ஒன்று கலக்க முடியாதவர்கள் தொடர்ச்சியாக தமது தாய்மொழியை பின்பற்றுபவர்களா இருக்கின்றார்கள். அவர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் மொழிச் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள். இது புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினருக்கான உரிமையை பெற்று வாழ்கின்றது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறே தமிழகத்தில் தமிழ் தேசிய இனத்தினுள் உள்ளவாங்க முடியாதவர்கள் மொழிச் சிறுபான்மையினராக இருக்க முடிகின்ற என்ற ஜனநாயகப் போக்கை சாதிய- தேசியம் பேசுபவர்கள் அறிந்து கொள்ளாத நிலை ஒரு ஆபத்தான போக்காகும்.