Thursday, 25 August 2016

தேசிய- சாதிய- இனவெறிகள்!!!





தேசிய- சாதிய- இனவெறிகள்!!!
முகவுரை

இந்த ஆக்கம் என்பது குறிப்பாக நமது வாழ்வின் காலத்தின் வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளில் இருந்து வெளிப்படுத்துவதாகும். இலங்கையில் பல போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றது. இலங்கையில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் வெற்றிபெற முடியவில்லை.  ஆனால் இலங்கையில் பலமாற்றங்களை ஏற்படுத்தித் தான் இருக்கின்றது.    இலங்கையில் நடைபெற்ற போராட்டங்களின் தோல்வி என்பது இன்னொரு போராட்டம் நடைபெறக் கூடாது என்பதல்ல. அது ஆயுதப் போராட்டமாகவோ அல்லது வேறொரு வடிவத்திலோ அமையத் தான் போகின்றது. மனித குலமானது வர்க்கங்களிடையே போராட்டங்கள் நடத்தியே ஒவ்வொரு கட்டத்தையும் நகர்த்தி வந்துள்ளது.  1970களில் இருந்து 2009 வரையில் மூன்று ஆயுதப்போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றது.  இந்தப் போராட்டங்களின் தோல்விகளில் இருந்து பாடம் கற்பதுதான் புரட்சியின் வெற்றிக்கான முதல்படியாகும்.  இந்தப் போராட்டங்களின் தோல்வி மனப்பான்மையை வர்க்கப் போராட்டத்தினை முதலாளித்துவ வர்க்கக் கூறுகளுக்கு ஏற்ப வழிநடத்துவது, பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்ப வழிநடத்துவது என்ற இரண்டு கூறுகளுக்கிடையே தான் மாறுபாடுகள் இருக்கின்றது. இன்று புரட்சி பேசிக் கொண்டே உழைக்கும் மக்களின் நலனின் என்பதற்கு அப்பால் முதலாளிய நலனின் அடிப்படையில் விலாங்கு மீன்களாகச் செயற்படும்  சக்திகளின் செயல்கள் தான் உழைக்கும் வர்க்கத்தின் முற்போக்குச் சக்திகள் எதிர்க்கொள்ளும் பெரும் சவாலாக இருக்கின்றது.
இன்றையச் சமூகக்கட்டமைப்பு சமச்சீரற்ற சமூக விஞ்ஞான ஆய்வும், அறிவியல் ஆய்வு இல்லாத நிலையில் சில குறிப்பிட்ட நபர்களின் கருத்துருவாக்கம் சமூகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்த முடிகின்றது. இதனை எதிர்க் கொள்வது என்பது இலகுவாக காரியம் இல்லைத் தான். ஆனால் இதனை எதிர்க்கொள்வதற்கான ஒரு அமைப்பு என்பது அவசியமாகும். புரட்சியை நடத்துவதற்கு மாத்திரம் அல்ல. புரட்சிகர செய்தியை அறிவிப்பதற்கும் ஒரு அமைப்பு அவசியமானதாகும். அமைப்புக்களே கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முடிகின்ற வேளை அவர்களை அணிதிரட்டவும் முடியும். தனிமனிதர்களின் செயற்பாடுகள், கருத்துக்கள் தனிமனிதர்களுடன் முடிந்து விடுகின்றவையாகும். ஆனால் ஒரு அமைப்பே கருத்தை தொடர்ந்தும் சுமந்து கொண்டு செல்கின்ற ஊடகமாகவும், செயற்பாட்டுக் காரியவாதியாகவும் இருக்க முடியும்.
தனிமனிதர்களின் செயற்பாடுகள் யார் உயர்ந்த கோட்பாட்டுவாதிகள் என்பதற்கு அப்பால் முன்செல்ல முடியாது. இந்தச் சமூக அவலம் என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. மேற்கண்ட கருத்தை எனது முதல் புத்தகத்தில் முன்னுரையாக குறிப்பிட்டிருந்தது. இதுவே 15 வருடங்களின் பின்னரும் தொடர் நிலையாக இருக்கின்றது.  இந்த அவலம் என்பது தொடர்ச்சியாகவே இருக்கின்றது. இது மார்க்சியத்தின் மூன்று தத்துவக் கூறுகளில் ஏதாவது ஒன்றை மாத்திரம் முன்னிறுத்தி அரைகுறை மார்க்சிய அணுகுமுறையை முன்னிறுத்தப்படுகின்றது. மார்க்சியப் பார்வை என்பது மூன்று தத்துவக் கூறுகளையும் ஒன்றுகூடி இணைத்து ஆராய்வதுதான் மார்க்சியப் பார்வையாகும்.
இங்கு தேசியஇனப்பிரச்சனையை மையமாகக் கொண்ட ஆக்கம் என்பது சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கின்ற பிரச்சனையாகும். இதில் குறிப்பாக வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் அமைந்தாகும். இது மற்றையவைகள் போல் அல்லாது புதிய நிறுவனக் கட்டமைப்பை கோரி இருப்பதாகும். எனவே இது ஒன்றும் இனவாதம் மாத்திரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல என்பது அவசியமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். மார்க்சியத்தினை  அரைகுறையாக புரிந்து கொண்ட தற்குறிகளை மார்க்சிய மேதைகளாக  கற்பிதம் செய்கின்ற நிலையை சமூகத்தின் அனைத்து தளங்களிலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். 
இவ்வாறு சவால்களை எதிர்க்கொள்ள வேண்டுமென்றால் எதனையும் கேள்விக்குட்படுத்தி சிந்திக்கும் புதிய சமூக உறுப்பினர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
சுயாதீனமான சமூக உறுப்பினர்களை சமூக விஞ்ஞான ரீதியாக சிந்திக்கும் சூழலையும் சமூகக் கட்டமைப்பையும் உருவாக்க என்னாலான சிறு பங்களிப்பு இதுவாகும்.
இந்த ஆய்வுக் கட்டுரை என்பது எனது சொந்தப்படைப்பு அல்ல. எமது முன்னோர்கள் கற்பித்தவற்றை ஒன்றாக இணைத்து உங்கள் முன்வைப்பதைத் தான் செய்திருக்கின்றேன். இதில் தவறு இருக்குமானால் முழுப்பொறுப்பும் என்னுடையதே. இதற்கான விமர்சனத்தை தாராளமாக முன்வையுங்கள். விமர்சனங்கள்  கற்றல் கற்பித்தல் என்ற நிலையில் இருந்து அணுகும் போது சமூகத்திற்கு முன்னே ஒரு தெளிந்த பார்வையைக் கொடுக்க முடியும்.




 அறிமுகம்
எந்த ஆய்வும் முடிந்த முடிவில் இருந்து,   ஆய்வுகள் முடிவில் இருந்தும் தொடர்ந்துவிட  முடியாது. மனித வர்க்கத்தின் சுரண்டல் என்பது  சர்வம் தழுவியதாக இருப்பது என்பது ஒன்று சர்வதேசம் முழுவதும் நடைபெற புரட்சி ஒரே நேரத்தில் நடைபெறவேண்டும் என்பது வேவ்வேறானவையாகும்.
இங்கு வெவ்வேறான புரிதல்களை, நலன்களைக் கொண்ட அரசியல் புரிதலைக் கொண்டும், மற்றவர்களை முத்திரை குத்துவதும், திட்டித் தீர்ப்பதன் ஊடாக தம்மிடம் உள்ள அரசியலை திணிக்கும் தன்மையை தம்மையே புரட்சியாளர்களாக பிரகடனப்படுத்திய சிங்களதமிழ் அன்பர்களிடம் இருக்கின்றது. இவர்கள்  இனமையவாதமாகவும் (ethnocentrism)  - மற்றொன்று  நாம் பெருந்தேசியவாதியில்லை எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற பச்சாத்தாப அணுகுமுறை என்றும் முடிந்த முடிவான ரொட்கிய கோட்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கின்றது. இவற்றிற்கு மாற்றாக இயங்கியல்- பொருள்முதல்வாத- வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும். அதாவது இலங்கை அரசியல் வரலாற்றை மார்க்சிய அணுகுமுறை ஊடாக முறையான ஆய்வு முடிவை கொடுக்க முடியும்.
கடந்தகால பார்வைகள் குறைந்த பட்சம் ஜனநாயக விழுமியங்களை அங்கீகரித்த புரட்சிகர அணுகுமுறையை கொண்டவர்களாக இருக்கவில்லை என்பதைத் தான் வரலாறு மறுபடியும் நிரூபிக்கின்றது.  முள்ளிவாய்காலில் நடந்து முடிந்த யுத்தம் என்பது ஒரு தேச (nation) த்தினை வெற்றி கொண்டு தான் முடிவிற்கு வந்துள்ளதை ஏற்க மறுக்கும் அரசியல் சிந்தனையாளர்கள் பலர் இருக்கின்றார்கள். நேசன்- தேசத்திற்கான உரிமை என்பதற்கும் சைவ- வேளாள – தமிழ் சிந்தனைக்கும்  தொடர்புபடுத்த முடியாது. இவை இரண்டும் ஒன்றல்ல மாறாக தேசம் என்பது முதலாளித்துவ ஜனநாயகம் சார்ந்ததாகும். சாதியத்தினையும்,  தேசத்தினையும் இணைத்து செய்யும் நுண்ணரசியல் என்பது எப்பவும் உழைக்கும் மக்களின் நலனுக்கு ஆதரவாக இருக்கமுடியாது. இது அகமுரண்பாட்டை முன்னிறுத்தும் அடையாள அரசியலின் எச்சமே.
முதலாளித்துவத்தினை பாதுகாக்கும் பொருட்டு உலக வலையத்தினால் கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs) நிகழ்ச்சிக்கு ஒப்ப வேலைப்பிரிவினையில் செயற்படுகின்றது. அதாவது முதலாளித்துவ பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு பற்பல நிறுவனங்கள் பல்வேறு வகையான வேலைப்பிரிவினையை கொண்டு செயற்படுகின்றார்கள்.

பின்னவீனத்துவ சிந்தனைப் போக்கில் அமைந்த செயற்பாடுகளைக் கொண்ட அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த அணுகுமுறைப் போக்கை இடதுசாரியமாக நமக்கு முன்னிறுத்தப்படுகின்றது. இந்தப் போக்கிற்கு எதிரான அரசியல் விவாதத்திற்கான வெற்றிடம் கொண்டே உள்ளது. கடந்த 30 வருட கால வரலாற்றுக் காலத்தில் மார்க்சிய அணுகுமுறைபற்றிய தேடல்கள் என்பது (ஒருவர் கக்குதை மற்றவர்கள் எடுத்து துப்புவது போலவே இருந்துள்ளது) கிளிப்பிள்ளைகள் போல ஒப்பிக்கப்பட்டதாகவே இருந்துள்ளது. மார்க்சிய லெனினிய அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளும் வகையாக சமூக ஆய்வுகள் நலமடிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது.
வெவ்வேறு மனிதர்கள் தமது வல்லமைக்குள்ளாக ஆய்வுமுறைகளை முன்வைத்து கொள்கின்ற வேளையில் இயங்கியல் ரீதியாக அணுகப்படாமல் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுள்ளது. மார்க்சிய அணுகுமுறைக்கு அப்பால் தன்னார்வ அணுகுமுறை, சிந்தனை முறை முன்னிறுத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தே கலாசாலை மார்க்சிய அணுகுமுறை வடிவமும் முன்னிறுத்தப்பட்டு அதுவே புரட்சிகரமார்க்சியமாக முன்னிறுத்தப்பட்டும் வருகின்றது.
மார்க்சிய அணுகுமுறையை நிராகரித்துக் கொள்வதினால் தனிமனித புரிதல்களே மார்க்சியமாக முன்னிறுத்தப்படுகின்றது. இந்த சமூக அமைப்பு தனிமனிதர்களை தனித்தீவுகளாகக் கொண்ட சிந்தனை மையங்களை உருவாக்கிக் கொள்கின்றது. இங்கு தனிமனித புரிதல்களை முன்னிறுத்துகின்றது. தனிமனித புரிதல்களை முன்னிறுத்தும் போக்கும் தனிமனித மையப்போக்கும் ஆழுமை செலுத்துகின்ற சமூக அமைப்பில் தொடர்ச்சியாக ஒப்புறவு கொண்ட சமூக மனிதர்களின் கூட்டை உடைக்கின்றது.
பொருளாதாரத்தை மாற்றியமைக்கக் கூடிய புரட்சிகள் வெடிப்பதை தவிர்ப்பதும் அதன் நிபந்தனையில் இருந்து பல வழிகளிலும் செயற்பட்டுக் கொண்டுள்ளனர். இவர்களும் பாட்டாளி வர்க்கப் புரட்சியென்று கூறிக்கொண்டு சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவும் இல்லாமல் அடையாள அரசியலை முன்னிறுத்துகின்றனர்.  ஆகவே சமூகமாற்றத்தையும், வர்க்க விடுதலையையும் வேண்டி நிற்பவர்கள் வெகுநிதானமாக கற்பதும் கற்பித்தலிலும் ஈடுபடுதல் அவசியமானதாகும்.

மனிதர்களின் வாழ்நிலை சிந்தனையை நிர்ணயிக்கின்றது அவர்களின் சமூக வாழ்நிலையே உணர்வுகளை நிர்ணயிக்கின்றதினால் அதில் அமைந்த அரசியலும் உழைக்கும் மக்களின் அசைவியத்தத்தை தீர்மானிப்பதாக  இருக்கின்றது. இங்கு முள்ளிவாய்க்கால் தேசியஇனவழிப்பில் அகப்பட்ட மக்களின் சிந்தனை வடிவம் என்பது இலகுவில் மாறக் கூடியது அல்ல.
கடந்த கால அரசியல் தவறுகள் பல மோசமான விழைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்று “இனத்துவேச“த்திற்கு எதிரான சட்டவாக்கம் என்பது சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை பயங்கரவாதமாக அடக்கியது போல “இனத்துவேசத்தின்“ பெயரில் ஒடுக்குமுறை தொட வழிவகுக்கும். இங்கு வெறுப்பு அரசியல் கட்டுப்பாடு என்பது ஒன்று ஆனால் ஒடுக்கப்படுபவர்களின் குரல் என்பது ஒடுக்குமுறைக்கு எதிரானதாகும். இவை இரண்டு வித்தியாசமான எதிர்வினைகளை ஒன்றாக்கிவிடும் நுண்ணரசியல் ஆபத்தானதாகும்.  இவைகள் அடையாள அரசியல், இணக்க அரசியல், கனவான் அரசியல், அரசியல் நீங்கம் என பல முனைகளின் வெளிப்படுகின்ற போது சேடம் இழுக்கின்ற சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தினை சிதைப்பதை தந்திரோபாயமாகக் கொண்டுள்ளது.

சிந்தனைப் பள்ளி-
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ வழிவந்த சிந்னைப் பள்ளிகளின் வழிவந்தவர்களே கொலம்பியா, பிலிப்பீன், நேபாளம், இந்தியா என்று தொடராக வீரியத்துடன் போராடுகின்றார்கள்.  சமதர்ம நாடுகளாக இருந்தவைகள் பல தவறாக போயிருப்பது பற்றி வரலாற்று ரீதியாக ஆராயவேண்டுமெனினும் இது இங்கே பார்க்கப்படவில்லை. இங்கு புரட்சிகர அரசியல் என்பது புரட்சிக்கு அவசியமானது என்பதை முள்ளிவாய்க்காலில் இருந்து பட்டறிவாக கொள்ள முடியும்.  ஈழப் போராட்டத் தலைமைக்கு புரட்சிகர அரசியல் இருந்திருக்குமானால் போராடிய நாட்டில் வேரோடு பிடிங்கியெறியப்பட்டிருக்கமாட்டார்கள். பலநாடுகளின் போராடுகின்ற மார்க்சிய அமைப்புக்கள் தோல்விக்கு உள்ளாகின்ற போதும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெறுகின்றார்கள். இதன் படிப்பினையையும், புரட்சிகர அரசியலையும்,  சிந்தனைப் பள்ளிகளின் அவசியத்தை வெகுசனத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளது.
முதலாளித்துவ (வலது) தேசியவாதிகள் இடையில் சரணடைவர் ஆனால் புதிய சனநாயகப் புரட்சி இடையில் நின்றுவிடக் கூடாது. வலது தேசிய முதலாளித்துவாதிகளின் சூழ்ச்சிக்கு இரையாகாது புதிய சனநாயகப் புரட்சியைப் பாதுகாப்பதும் முக்கியமானதாகும். இவ்வா;று சரணடையும் அபாயம் இருக்கின்ற போது தேசிய ஒடுக்குமுறைக்கான போராட்டமானது தொடர வேண்டும் என்றால் உழைப்பாளி வர்க்கத்தின் தலைமையில் போராட்டம் தொடரப்பட வேண்டும்.  புதிய சனநாயக் புரட்சியில் தேசிய முதலாளி வர்க்கம் என்பது முதன்மை எதிரியாக இருக்கப் போவதில்லை.  ஆனால் தரகும் வலதுசாரிய முதலாளி வர்க்கம் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் இதற்கு விழிப்பாக இருப்பது  உழைப்பாளி வர்க்கத்தின் தேவையாகின்றது. இங்கு தேசியவாதிகளின்  மூலதனத்தின் பலம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பவே இருக்கும். மூலதனத்தின் பருமன் மாற்றமடையும்.  ஆனால் சந்தைக்கான தேவை என்பதும் தேசத்தின் ஆதாரமான பண்புகளில் ஒன்றாக இருக்கின்றது. மூலதன இருப்பு ஒன்றே தேசியத்திற்கான ஆதாரமாக தவறாக கற்பிக்கப்படுகின்றது.

ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தலைமையானது இணக்க அரசியல், கனவான் (லொபி) அரசியல், அடையாள அரசியல், சட்டவாதம் என சமர அரசியல் முனைப்பில் ஈடுபட்டு ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டத்தினை கேள்விக்குறியாக்குகின்றது. தேசியத்தின் பெயரால் தரகு வர்க்கமே இன்றைய தலைமைக் கொண்டிருப்பதும் அவர்களின் போக்கு விதேசிமாக இருக்கின்றது. தரகு வர்க்கத்திடம் இறைமை பற்றிய கரிசனை இருக்கமாட்டாது. இன்று தலைமை வகுத்துள்ள தரகு வர்க்கம் தேசியமாக இருக்க முடியாது. இவர்களின் அரசியல் தவறுகளை தேசியவாதத்திற்கு உட்பட்டதாக வரையறுப்பது இயங்கியலாக முடியாது.
ஒடுக்கும் தேசமானது தன்னுடைய லங்கா தேசிய சிந்தனை எல்லைக்குள் தமது தேசிய இனமுதலாளி வர்க்கத்திற்கும், அதன் உயர்வர்க்கத்திற்கும் சலுகை கொடுத்து மற்றைய தேசிய இனத்தின் இருப்பை அழிக்கின்றது. தேசிய இனவழிப்பை நிலம், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, மொழி என்பற்றில் பௌதீக ரீதியாக மாற்றத்தை  ஏற்படுத்துகின்ற போது பாதிக்கப்படுவது அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுமே. இவ்வாறு பாதிக்கப்படும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உழைப்பாளர் வர்க்கத்தவரிடையே பேரினவாதம் சந்தேகத்தை ஊட்டிக் கொண்டே இருக்கின்றது. இவ்வாறு பெருந்தேசியவாதமும்  தேசிய இனப்பற்றின் ஊடாக ஒடுக்குமுறையை மற்றைய தேசிய இனங்களின் மீதி ஏற்படுத்துகின்றது. தேசிய இனப்பிரச்சனையை  முதலாளித்துவ ஜனநாயக உரிமை ஊடாக அணுகிடாது வெவ்வேறு மையப் போக்கில் இருந்து தேசிய இனப்பிரச்சனையை அணுகுகின்றார்கள். புதிய சனநாயகப் புரட்சிப் பாதை என்பது சிந்தனைப் பள்ளியில் அடிப்படையான மார்க்சிய- லெனினிய- மாவோ சிந்தனையாகும். இலங்கை போன்ற நாடுகளில் முதலாளித்துவம் என்பது தன்னியல்பாக வளர்ச்சியடையவில்லை. இங்கு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஊடாக செய்யவேண்டியதே புதிய ஜனநாயப் புரட்சியின் ஊடாக நிறைவேற்றப்படுகின்றது.
அகமுரண்பாடுகளை களைவதும், அதற்கு எதிரான  போராட்டம் என்பது அவசியமானதாகும். அவற்றை அலட்சியப்படுத்த முடியாது. ஆனால். அதனை முதன்மையானதாக் காட்டிக் கொண்டு அடையாள அரசியல் நிலைக்கும், அடையாள அரசியலை சென்றடையக் கூடிய வழிமுறைகளையும் கோசங்களையும் முன்னிறுத்துவது அல்ல. இங்கு அகமுரண்பாடுகளே முதன்மையானதாக ஊதிப்பெருக்கும் பின்னவீனத்துவச் சிந்தனை என்பது புறநிலையை பரிகசித்துக் கொண்டு அடையாள அரசியலை முன்னிறுத்துவதாகும்.

No comments:

Post a Comment