Thursday, 25 August 2016

தலித்தியம் கற்பிப்பது தான் என்ன?





தலித்தென்று வரையறுக்க இவர்கள் யார்?
ஆயிரம் காலம் அடிமையென்றாயே அரிசனன் என்று பெயரு வைக்க யாரடா நாயேஎன்று அருமையான பாடலை ... ஒலிப்பேழை வெளியிட்டார்கள். இந்த பாட்டிற்கு உள்ள அர்த்தம் மக்கள் தளத்தில் மாத்திரம் இல்லை. ஆய்வுத் தளத்தில் கூட சிந்தனையை தூண்டாத ஒரு அவலம் இன்றும் நீடிக்கின்றது. ஏனெனில் இந்தப் பாட்டு கூறும் மார்க்சீய அரசியலை முன்னிறுத்தும் போது தலித்தியம் என்ற வெற்றுக் கோசமும், பின்நவீனத்துவ குப்பை என்பன ஆய்வுலகில் இருந்து அகற்ற முடியும். 
தமிழர்களை வரலாற்றில் அசுரர்கள் என்று மனுதர்மம் போன்ற நூல்கள் இழிவாக கருதுகின்றது. ஆனால் வரலாற்றில் புத்தரின் சிந்தனை  பார்ப்பணியத்திற்கு எதிரானது என்றும் அறிந்து கொண்டது சரியானதாக இருப்பினும், இலங்கையில் சாதியம் பௌத்தத்தின் ஊடாகவே வந்ததாக கருத இடமுண்டு.  மனிதர்களில் ஏற்றத்தாழ்வான மனிதர்கள் என்று யக்சர், அனுமானிசர் என்றும் பழங்குடி வாழ்க்கை முறையை வரையறுத்தோ அல்லது விழித்து கூறும் செயற்பாட்டின் ஊடாகவே ஆரம்பமாகின்றது. பக்தி இலக்கியத்திற்கு முற்பட்ட சிங்கள மொழி இலக்கியத்தில் பௌத்த துறவிகள் பார்ப்பணியச் சிந்தனையின் தொற்றுநோக்கு உள்ளாகியிருந்துள்ளார்கள் என்பதை அறிமுடிகின்றது. இலங்கை வரலாற்றை பதியும்  நூல்களில் யக்சர், அனுமானுசர் என்று அழைத்துள்ளனர். தம்மை விட மாற்று வாழ்க்கை முறை என்பதை இங்கு மனிதர்களுக்கு ஒப்பாக கொள்ளவில்லை என்பதற்காக சிந்தனை கவனிக்கத்தக்கதாகும்.

மனித வர்க்கத்தினை உடலுழைப்பை விற்பவர்கள், வாங்குபவர்கள் என்ற இரண்டு வர்க்க முகாம் இருக்கின்றது. இதற்கு அப்பால் மனிதர்களை (வர்க்க உணர்வு பெறாத நிலையில் உள்ளனர்) பிரிப்பது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இங்கு தத்தம் தேவைக்காக மனிதர்களை தேசியயின, மத, சாதி, பிரதேசமென பிரிக்கின்றார்கள்.  இவையிருக்க குறிப்பாக தமிழ் அரசியல் உலகில் மனிதர்களுக்கு புதிய நாமம் சூட்டுவது ஒரு போக்காகவே இருக்கின்றது. ஒடுக்கப்படும் சமூகம் தன்னை விடுதலைக்காக போராட முற்படுகின்ற போது புதிய கோட்பாடுகளை முன்னிறுத்தி அவர்களை திசைதிருப்பும் காரியம் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. காந்தியின் காலத்தில் எழுந்த எழுச்சியை மதத்தினுள் அடக்கும் முகமாக காந்தி ஹரியின் புதல்வர் என்று அழைத்துக் கொண்டார். ஒடுக்கப்படும் மக்கள் தமது விடுதலைக்கான தத்துவத்தை தெரிவு செய்கின்ற போது ஒடுக்குமுறைக்கான பொருளாதார அமைப்பை சிதைக்காது சிந்திக்கும் முறையை அறிமுகப்படுத்துவது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. காந்தியின் காலத்தில் முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கைக்களை கறாராக முன்வைப்பது கூட அன்றைய நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு எதிரானது என்று காந்தி உணர்ந்த காரணத்தினால் ஒடுக்கப்படும் மக்களை மதத்தின் பெயரால் சமரசம் செய்ய முற்பட்டுள்ளார்.
முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான போராட்டம்
தாழ்ந்தவர்கள் என நிந்திக்கும் சமூகச் சிந்தனைக்கு எதிரான போராட்டம்             
இவை இரண்டும் நீண்ட நெடியது. இங்கு முதலாளித்துவ ஜனநாயகப்  போராட்டத்தினையும்,  சமூக நிந்தனைக்கு எதிரான போராட்டத்தினையும் சாதிய வட்டதினுள் இருந்து எடுக்கப்படும் போராட்ட வடிவங்களாகவே இருக்கின்றது.
முதலாளித்துவ ஜனநாயகத்தை வழங்குவதை தடுக்கும் போராட்டத்திற்கும், சரி நிந்தனைக்கு எதிரான போராட்டதிற்கும் பரந்துபட்ட மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். இவை இரண்டையும் ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் வழிநடத்த ஓரு பாட்டாளிவர்க்க அமைப்பினால் தான் முடியும்.  ஒரு பாட்டாளி வர்க்க அமைப்புத் தான் ஒடுக்கப்பட்டவர்கள் என்று நிந்திக்காது, தாழ்த்தப்பட்டவர்கள் என்று நிந்திக்கும் சமூகக் கட்டமைப்பை உடைக்கின்றது. சுரண்டப்படும்,  ஒடுக்கப்படும் மக்களை அனைவரையும் ஒரு பதாதையின் கீழ் இணைக்கின்றது.
உயர்சாதி என்று தம்மை விழித்துக் கொள்ளும் கருத்தியலை மாற்றத் துணைசெய்கின்றது. ஒடுக்கப்பட்ட  சாதிகளை நிந்தித்து அவர்களுக்கு ஆதிதிராவிடர், தலித், பஞ்சமர், விளிம்பு நிலை, ஹரியின் புதல்வர்கள் என்ற அடைமொழிகளில் அடைந்து நிந்திக்கும் முறையை மாற்றவல்லது. புதிய பெயர்களை இட்டு இம்சை செய்யும் சமூகப் போக்கை மறுதலிக்க முடியும். ஆனால் இன்றைய அரசியல் கட்சிகள், சாதிய அமைப்புக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சமூக உளவியலை இறுக்கமாக மீளவும் கட்டமைக்கின்றது. இந்த சமூக உளவியல் கட்டமைப்பிற்கு எதிராகவும் போராட வேண்டியிருக்கின்றது. 
ஆனாலும் இவ்வாறான சமூக உளவியல் திணிப்பிற்கு எதிராக சாதிய வட்டத்தினுள் இருந்து எதிர்ப்புக் குரல் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த எதிர்ப்புக் குரல் புதிய சிந்தனை வட்டத்தினை ஏற்படுத்துவதாக இல்லாதது குறிப்பிடவேண்டும்.
தமிழகத்தை ஒடுக்கப்படும் சாதிகளில் சில தங்களை அரசபரம்பரையுடன் தொடர்படுத்தி ஆய்வுகளை வெளிகொணர்கின்றன. அரச பரம்பரையுடன் தம்மை இணைத்து ஆய்வுகளை கொண்டு வந்து தம்மை தாழ்ந்தவர்கள் இல்லை என்று நிரூபிப்பதன் ஊடாக தம்மை தாழ்வு நிலையில் இருந்து விடுவிக்க முடிற்படுகின்றார்கள். பொருளாதார உற்பத்தி முறையில் மாற்றமும், சமூக சிந்தனை மாற்றமும் தான் சாதியச் சகதியை தூக்கியெறிய முடியும்.  ஆனால் அடையாள அரசியல் என்பது சாதியச் சகதிக்குள் இருந்து விடையைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையை ஒடுக்கப்படும் சாதிகளில் உள்ள உயர்வர்க்கத்தவர்கள் வழிகாட்டுகின்றார்கள்.
பள்ளர் என்கின்ற மள்ளர் சாதியினர் தம்மை தலித்துக்களாக வரையறுத்துக் கொள்வதை எதிர்க்கின்றார்கள். “”வரலாற்று பெருமையும், பண்பாட்டு சிறப்பும் கொண்ட மள்ளர்கள் மீது கடந்த ஒரு நூற்றாண்டாக அரிசனன், ஆதி திராவிடன், தாழ்த்தப்பட்டவன், தலித் என்ற இழிவுப் பெயர்களை வலியத் திணிக்கும் போக்கினை திராவிட கட்சிகளும், அதன் ஆட்சியாளர்களுமே செய்து வருகின்றனர். “  (http://devendrakulavelalar.wordpress.com/author/devendrakulavelalar/)  ஆனால் தலித்தியத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முயல்வோர் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை.

இதேபோலதான் இன்று இலங்கையில் சீவல் தொழிலை மேற்கொண்ட சாணார் பின்னர் அதனை விடுத்து எண்ணை வடிக்கும் தொழிலை மேற்கொண்டனர். இவர்கள் காலப் போக்கில் வேறு தொழில் செய்திருந்தாலும் தாம் பழைய சாதி என்கின்ற மனோபாவம் இருந்துள்ளதை இங்கு பார்க்கக் கூடியதாக உள்ளது. சீவல்தொழில் செய்கின்ற  மக்களை கேரளத்தில் ஈழவர் என்றும், தமிழ்நாட்டில் சாண்டார் -சாமுண்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இலங்கையில் கள்ளுச் சீவிய மக்கள் சாணார் என அழைக்கப்பட்டனர். அவர்கள் சிங்கள தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாக இருக்கலாம். ஏனெனில் கள்ளுச் சீவல் தொழில் தரக் குறைவானது என்பது தொழில் ரீதியான வேலைப்பிரிவினையில் அமைந்த பாகுபாடும் அவற்றின் காரணமாக நளவர் தாழ்ந்தவர் எனக் வரையறுத்தவர்கள் யார்?

இனக்குழுமங்கள் மற்றைய இனங்களுடன் இணைகின்ற போது இனக்குழுமத்தின் பெயர் நிலை 1000 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்டுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வர்ணாசிரமக் கோட்பாடு உயர் வர்க்கத்தவர்களிடம் இருந்திருக்கின்றது. ஆனால் மீளவும்  நிலப்பிரபுத்துவத்தின் உச்சத்தினை இராஜராஜசோழன் காலத்தில் உருவாகியது. சோழ இராச்சியத்தின் வளர்ச்சி பெரும் பொருளுற்பத்திக்கும், போர்வீரர்களின் தேவையையும் அதிகரித்திருந்தது. உற்பத்தியையும், போர்வீரர்களையும் தேவையென்றால் புதிய உற்பத்திச் சக்தி (மனிதவலு) அவசியமானதாகும். இந்த நிலையில் இராச்சியம் தனது மேலதிக வலுவை பயன்படுத்திக் கொள்ள வேலைப்பிரிவினையை மிகக்கடுமையாக அறிமுகப்படுத்துகின்றது.  இராஜராஜன் ஒரு ஆக்கிரமிப்பாளராகக் கொள்ளப்பட வேண்டும்.  நாடுகளைப் பிடிக்கும் நிலையில் தனக்குத்தேவையான வங்கியாக கோவிலையும், மூலப் பொருட்களின் சேமிப்பு இடமாக கோவிலும்,  பொருள் உற்பத்தி முறைக்குள் கொண்டு வந்து மூலதனத்திரட்சியை ஏற்படுத்தியபடியால் தான் வெற்றிகரமாக ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முடிந்தது.
மூலதனத் திட்சிக்கு தேவைக்காக சுதந்திரமாக கிடந்த மக்கள் ஒரு குறிப்பிட்ட வரைறயறைக்குள் கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம், அழுத்தம் ஏற்பட்டது. வேலைப்பிரிவினைக்கு வசதியாக இடங்கை வலங்கை என்ற பிரிவினை உருவாக்கி அதன் ஊடாக சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஊழியர்களையும், படையையும் உருவாக்கிக் கொண்டது. இதனை வேலைப்பிரிவினையாகப் பார்க்கின்ற போது இராச்சியம் உடைந்து சிறு ஆட்சிக்குழு உருவாகின்ற போது பொருளாதாரத்தில் நலிந்த பிரிவுகள் சாதியம் கட்டமைப்பிற்குள் அமிழ்ந்து விட்டனர். வேலைப்பிரிவினையை வகுத்த போது சிற்பிகள் தொழிற்நுட்பவியலாளர், வைத்தியர், கைவினைஞர்கள், விவசாயிகள், போர்வீரர்கள்,  உற்பத்தியாளர்கள் என பிரிவினை ஏற்பட்டது. வைத்தியர், சிற்பிகள் தொழிற்நுட்பவியலாளர் என்ற தகமையைக் கொண்டவர்களின் வாரிசுகள் அனைவரும் அதே தகமையைக் கொண்டிருப்பதில்லை.  ஆனால் சாதியச் சிந்தனை என்ற மேலாதிக்க கருத்தியல்சாதிஎன்ற அடைமொழிக்குள் சமூகத்தினை பிரிந்து விட்டது.

அதிகாரம் பலமுடையவர்களால் உழைக்கும் வர்க்கத்தின் அடையாளம் வரையறுக்கப்பட்ட நிலை இருந்திருக்கின்றது. இங்கு ஒரு மனித கூட்டத்தின் அடையாளத்தை யார் மூலம் வெளிப்படுகிறது என்பதில் அடங்கியிருக்கின்றது.  இது குறிப்பாக இலங்கை சாதிய அமைப்பையும், வரலாற்றையும் எழுதுகின்ற போது ஏற்படுகின்ற குறைபாடுகள் பாரிய மோதல்களை ஏற்படுத்துகின்றது.
அரசிறை உத்தியோகங்களும் நீதிபரிபாலன உத்தியோகங்களும் சுதேசிகளுள் உயர்ந்த சாதியினருக்கே கொடுக்கப்பட வேண்டுமென, 1658ம் ஆண்டு ஒக்டோபர் மாசம் 31 ந் தேதி வரைந்து வைத்த அறிக்கையிற் கண்டபடியே, வேளாளருக்கு அதிகமாகவும் மடப்பளியாருக்குக் குறைவாகவுமளிக்கப் பட்டுவந்தது. பட்டங் கட்டியென்னுமுத்தியோகம் கரையாருக்கும்,  முக்குவருக்குமெயுரியன. கி.பி 1694ம் ஆண்டில் மற்றைய சாதியாருக்கும் உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டபடியால், இதையிட்டு அவ்வருடத்து ஜூலை மாதத்தில் வேளாளரும் வன்னியருஞ் சேர்ந்து பெருங்கலகம் விளைவித்தனர். (175 யாழ்பாணச் சரித்திரம், மு. செ. இராசநாயகம்.) சுதேசிகள் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது மடப்பள்ளியர் என்ற புதிய ஆதிக்க வர்க்கம் உருவாகியிருந்தது. அது எவ்வாறு புதிய நிலை உருவாகியது என்பது ஆராயப்பட வேண்டும்.

கருத்தியல் மேலான்மை என்பது ஒரு வர்க்கம் சார்ந்ததாக இருக்கின்றது. பொருளாதார நலன்பால் அமைக்கப்படும் சிந்தனைகள் அந்த பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்கின்றது. சிந்தனை என்பது தனித்தே இயங்குவதில்லை. அவை ஒரு தீர்க்கமான பொருளாதரா அமைப்பால் தீர்மானிக்கின்றது. இந்தப் நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பை பாதுகாத்தக் கொள்ள அதன் வர்க்கம் சார்ந்தவர்கள் எதிர்வினையாற்றுகின்றார்கள். 
ஒரு சமூகத்தின் உறுப்பினர்களைப் போல் ஒப்பனை, பார்த்தொழுவது என்பதினை சமஸ்கிருதமயமாதல் என்று அழைக்கின்றனர். இது கூட சமூகத்தின் உறுப்பினர்கள் இந்தச் சமூகத்துடன் ஒத்துழைத்துச் செல்லப்பட வேண்டும் என்ற கருத்தியலே காரணமாகின்றது.
சமூகத்தில் பார்த்தொழுதல் புலால் உண்ணாமை என்பனவும், சண்டை சச்சரவிற்கு செல்லாமை என்பது போன்றவைகள் எல்லாம் உயர்ந்த குலத்தவர் கலாச்சாரம் என யாரால் வரைவிலக்கணம் மேற்கொள்ளப்பட்டிருக்கும்? அதுவே உயர்ந்த கலாச்சாரம் என கொள்ளக் காரணமாக இருந்த அம்சம் என்பது இந்த இனக்குழுக்கள் போட்டி போட்டுக் கொண்டு தம்மை மேன்மக்கள் எனக் கொள்ள வைக்கவும், மற்றவர்கள் தமது அந்தஸ்தை உயர்வாக கருதிக் கொள்ளவும் வழிவகுக்கப்பட்டிருக்கும். இதன் காரணத்தால் ஒவ்வொருவரும் தம்மை இன்னார் என சுயபிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம். அத்துடன் முன்னர் கூறியது போல் புதிய சிந்தாந்தத்தை உள்வாங்கி தமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவற்றை தமது புரிதலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியிருக்கலாம். இங்கு சர்வதேசத்தில் நடைபெற்ற ஒரு இயக்கத்தை இங்கு உதாரணம் காட்டுவது மிகப்பொருத்தாமாக இருக்கும்.
65-70 களில் வியட்னாம் யுத்த எதிர்ப்பு, தத்தமது நாட்டு பழைமைப் போக்கிற்கு எதிர்ப்பு, ஆட்சி முறைக்கு எதிர்ப்பு போன்ற வற்றை மையமாக வைத்து எதிர்ப்பு அலையுடன்  உபகலாச்சாரம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. போதைவஸ்து (ஆட்சியாளர்களே இதனை வளங்கிருக்கின்றனர்), துள் (பொப்) இசை, கலாசாலைகளில் பகடிவதை (ராங்கிங்), கிழிந்த உடைகளை அணிவது, கிருஸ்ணா பக்தி அலை போன்றவற்றுடன் சமாதான இயக்கங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்தப் துள் (பொப்) இசையோ  பாரம்பரியத்திற்கு எதிராக கொள்ளப்பட்டது. இந்தப் போக்கானது எமது நாடுகளும் உள்வாங்கிக் கொண்டன. ஆதனால் எம்மவர்கள் அவற்றை வாங்கிக் கொண்ட பிற்பாடு அவற்றிற்கு கொடுக்கப்பட்ட கருத்துருவம் என்பது மேலைநாட்டவர் கொடுத்த கருத்துருவத்திலும் பார்க்க வித்தியாசமாக இருந்தது எனலாம். துள் (பொப்) இசையை மக்கள் ரசித்தனர், தலைமுடி வளர்ப்பதை ஒரு போக்காகவும் (trend, Fashion) நாகரீகமென  கொண்டனர். ஒரு நாட்டுக் கலாச்சாரம், அல்லது சிந்தனைப் போக்கு என்பது என்ன நிலையை உணர்த்தி நிற்கின்றது என்ற சாpயான பார்வை என்பது எல்லாக் காலத்திலும் எல்லாச் சமூகத்திலும் விளங்கப்பட்டிருக்கும் எனக் கொள்ள முடியாது.
இந்த நிலையைப் பார்க்கின்ற போது ஏகாதிபத்திய வளர்ச்சிக் கட்டத்தில் வாழ்கின்ற எம்மவரால் இந்த இயக்கப் போக்கை பகுத்தாய்வு செய்து நடக்க முடியவில்லை. ஆனால் எத்தனையோ றூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த மக்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வர்ணாசிரமக் கோட்பாட்டை முறையாக ஆய்வு செய்து அதனைப் புரிந்து பின்பற்றியிருப்பர் என்பதில் சந்தேகமே. 


மொழிக் குறியீடுகள்
சாதியச் சிந்தனைக்குள் சமூகமயப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் அன்றாடச் சீவியத்தில் சாதிய உணர்வு- சிந்தனை வெளிப்படவே செய்கின்றது. சாதியம் என்பது எமது சமுதாயத்தில்  பலவிடயங்களை தீPர்மானிக்கும் சக்தியாக உள்ளது. சாதி பற்றி வரலாற்று அறிவின்மை காரணமாக பல சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பது சிரமமாக உள்ளது. சாதீயச் சிந்தனையில் வாழ்ந்து வருகின்ற சமூக உறுப்பினர்கள் தமது செயற்பாட்டை சாதியத்தை பாதுகாக்கும் நோக்கிலும், வரட்டுக் கௌரவத்தை தொடர்ந்து நிலைநிறுத்த முனைகின்றனர். சாதியத்தில் இருந்து வெளியே வேண்டும் என எண்ணுபவர்கள் சாதியச் சக்திக்குள்ளேயே மீளவும் சமாதியாவதும் வரலாற்றில் இடம் பெற்று வந்துள்ளது. பொருளாதார நிலையில் ஏற்படுகின்ற நிச்சயமின்மையை காரணம் காட்டி சாதிய அமைப்பை பாதுகாத்து வந்துள்ளனர்.
புலிகளின் பின்னான காலத்தில் சமூகத்தை  பலகோணங்களில் பார்க்க வேண்டிய நிலை இருக்கின்றது. புலிகளின் காலத்தில் கணிசமானளவு கலப்புத் திருமணங்கள், பாரம்பரிய கிராம வாழ்க்கை முறையின் சிதைவு, பண்பாட்டு தளத்திலும் சமூக உறவிலும் மாற்றம் ஊற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. ஏனெனில் ஒடுக்கும் சக்தியாக வேளாளர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களின் பெரும்பான்மையானவர்கள் இன்று தமிழ் பிரதேசங்களில்  ஆதிக்கத்தில் இல்லை. மாறாக இடைநிலைச் சமூகம், ஒடுக்கப்பட்ட சமூகமே இன்று அதிகார வர்க்கமாக இருக்கின்றது என்பது தொடர்பாக தனியான களஆய்வு என்பது அவசியமானதாகும். புலிகளின் பின்னான காலத்தின் சமூக உறவு தனியே ஆராயப்படவேண்டும்.
இன்றைய காலத்தில் தொடர் சாதனத்தின் வளர்ச்சி காரணமாக தமிழகத்தில் இருக்கின்ற சொல்லாடல்கள் கலந்திருக்கின்றது. முன்னர் இலங்கை தமிழ் மொழியாடல்கள் ஒரளவிற்கு சாதியக் குறியீடுகள் அற்ற மொழி வழக்கு இருந்துள்ளது. சாதிய குறியீடு அற்ற மொழிவழமையை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றுது.  முன்னர் மொழியாடலில் விவசாயிகளை - கமத்தொழில் என்றும் மீனவர்களை- கடல்தொழிலாளர்கள் என்றும் அழைத்திருந்தோம். மீனவர்கள் என்பதே சாதியை அடையாளப்படுத்தியே தமிழகத்தில் இருந்திருக்கின்றது. இவ்வாறான பல சொற்பதங்கள் பயன்பாட்டினுள் வந்து இருந்த சாதிய சார்பற்ற மொழியாடல்களை சிதைத்துள்ளது.

இவ்வாறாக மொழியில் சமத்துவமின்மையால் பொதுவிடத்தில் சாதியை விழித்து இன்னொரு மனிதனை தாழ்த்திப் பேசும் பொருட்டு சாதியின் பயன்படுத்தப்படுகின்றது. அன்றாட வாழ்க்கையில் சமூக, குடும்ப உறவுகளிலும் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகார வர்க்கத்தவர்களிடமும் சாதியம் தொடர்ந்து உயிர்வாழ்கின்றது.
முன்னர் ஈழப்போராட்டம் சாதியை ஒழித்துவிடும் என்று கூறப்பட்ட வேளையிலும் இன்று தமிழ் அரசியல்வாதிகள் சாதியின் குறியீட்டைக் கொண்டு இன்னொரு எதிராளியை சொல்லாடலின் மூலம் தாக்குதவற்கு பலரால் பல கோணங்களில் கருத்தியல் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இங்கு அதிகார வர்க்க மனப்பான்மை
சாதிய வெறி அல்லது சாதிய மனப்பான்மை
தனிமனித வெறுப்பில் உழிழ்வது சாதிய குறியீடு
மொழிப் பயன்பாட்டில் சாதியமும் உள்ளுற படிந்துள்ளது.

சிறுவர் முதல் பெரியவர் வரை அன்றாடம் சாதிய பெயர்களை சொல்லி மற்றவர்களை விழிப்பது
அரச நிர்வாகத்தில்
மற்றைய பொதுத்தளம்
சாதியத்திமிர் அதிகார வர்க்கத்தவர்களிடையே காணப்படுகின்றது.
சாதியை குறித்து மற்றவர்களை தாழ்த்திப் பேசுவோர்; மனவுழைச்சளை ஏற்படுத்தும் நோக்குடனோ அல்லது பகையை தீர்த்துக் கொள்ளவோ பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றது.
சமூகத்தில் கருத்தியல் ரீதியாக ஆழுமை செலுத்தும் சொற்கள் பல இருக்கின்றன.  வடுச் சொற்கள் என்பது சாதியத்தைக் குறிக்கின்றது என மட்டுப்படுத்த தேவையில்லை.  சாதிக்குள் மட்டுப்படுத்தி அணுகும் பார்வை வண்ணாசிரம, சாதிய மையவாதி நிலையில் இருந்து அணுகுவதாகும்.  வடுச்சொற்கள், குறியீடுகள் சாதிக்குரியது அல்ல என்று குறிப்பாக சாதியச் சமூகத்தில் வாழும் ஆய்வாளர்களும், சமூக ஆவலர்களும் அறிந்திருப்பதில்லை. குறியீடு,  வடுச் சொற்கள் சர்வம் தழுவியது என்பதை மானிடவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
பிரதேசவாதத்தை குறிப்பதற்கோ அல்லது சாதியை குறிப்பதற்கோ பயன்படுத்தப்படுவது நாம் வாழ்கின்ற சமூகத்தின் உற்பத்திப் பொருள்கள் தாம். மற்றவர்களை உளரீதியாக நோகடிக்கப் பயன்படும் சொற்களாக
“.... கிணறு காவியது
 .. திண்னையிலே தூங்கிடுவான் தின்ற கோப்பையிலே பேண்டுவிடுவான்
 .. தொப்பி பிரட்டி
 .. மஞ்சல் கயிற்றுக்கு கழுத்து அறுத்தவன்
 .. பனம்கொட்டை சூப்பி
 .. தோட்டக்காட்டான்
 பிரதேசங்களை குறித்து நிற்கும் சொற்களும் இருக்கின்றன இவைகள் சில
 --யாழ்ப்பாணத்தான்
 --தீவான்
 --மட்டக்களப்பான்
 --வடக்கத்தையான்
இவ்வாறு ஊர்பெயர் சொல்லி அழைப்பது வெவ்வேறு பரிணாமங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான சொற்கள் மூலம் மற்றவர்களை தரம் தாழ்த்திக் கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றது. இவைகள் இன்றைக்கும் எமது சமுதாயத்தில் இருந்து கொண்டு வருபவை. ஆனால் இவைகள் நிலப்பிரபுத்துவச் சிந்தனையில் இருந்து வெளியானவைகளாகும். இவைகள் சந்தர்ப்பவாதம் கொண்ட வசைமொழிகளாக இருந்திருக்கின்றன. மற்றவர்களை நோகடிக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டவையாகும்.
மொழியின் பயன்பாட்டில் சாதியம் வெளிப்படுகின்ற சமூக அமைப்பில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். மொழிப் பயன்பாட்டின் போது சாதிய வெளிப்பாட்டை தவிர்த்து பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் மனிதர்கள் தம்மை அறியாமலே பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இங்கு மனிதர்களே எல்லோரும் மாறுங்கள் என்று கோரிக்கை விட்டுவிட்டுச் செல்வதோ அல்லது தனிமனிதர்கள் மாறினால் அதுவே மாற்றத்திற்;கு அறிகுறி என்று கரும் கருதுகோள் ஒரு வகை சமய போதனைக்கு உட்பட்டவையாகும்.
விண்ணகத்தில் கடவுளிடம் இடம் கிடைக்கும்படியாக சமயபோதனையானது தனிமனித தூய்மையை வலியுறுத்துகின்றது. ஆனால் அன்றாடவாழ்வில் மனிதர்கள் மேல் தொடுக்கப்படும் புறநிலை அழுத்தம் இருந்து கொண்டே இருக்கின்றது. சமூகத்தின் தனிமனிதர் சமூகத்தில் இருந்து தனித்திருக்க முடியாது. மனிதர்களைச் சுற்றி குடும்பம், சமூகம், கிராமம் என்று அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கின்றது. இவ்வாறான சமூக அழுத்தங்களும்,  பொருளாதாரத்திற்கு ஏற்ப புதிய சிந்தனையை படைக்கமுடியாத காரணத்தினாலும் குறைவிருத்தி முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கிலும் சாதியம் தொடர்கின்றது.
நிலபிரபுத்துவச் சிந்தனையானயாழ் சைவ வேளாள, பார்ப்பனியம்  என எல்லோராலும் உபயோகத்தில் இருந்திருக்கின்றன. இவைகள் இந்தச் சமுதாயத்தை எவ்வாறு அடக்கியாள்வது என்பது பற்றிப் புடம் போட்ட சிந்தனை வடிவங்களாகும். ஆணவம், அகம்பாவம், ஆதிக்கத்திமிர்,  ஆண்டான் அடிமைச் சிந்தனையானது ஒடுக்கப்பட்டவர்கள் தம்மிலும் விட மற்றவர்கள் கீழானவர்கள் என்ற மனப் போக்கு உள்ளடக்கிய இருந்திருக்கின்றது.  வர்ணாசிரமச் சிந்தனை என்பது  மக்களைப் பிரித்துவிடும் வக்கிரம் கொண்டதாகும்.
இவைகள் மூலமாக ஒரு சமூகத்தை மாத்திரம் அல்ல, உற்பத்திச் சாதனங்களை தமதாக்கிக் கொள்ளும் தந்திரங்களை கொண்டதாக இருந்து வந்துள்ளது. மூளையுழைப்பை கொண்டு சுரண்டும் வர்க்கத்தின் பரிமாணங்கள் இன்றைய சமூக அமைப்பில் கவனிக்கப்பட வேண்டும். நிலப்பிரபுத்துவச் சிந்தனை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு அல்லது சாதிக்கு மாத்திரம் உரித்தானதல்ல. அனைத்து பெரும் மதப்பிரிவுகளிலும் இதன் எச்சங்களை அதிகமாகவோ குறைந்தளவிலோ உள்ளது. உற்பத்தி (உழைப்பாளர்களை)யை தாழ்ந்த நிலையில் தொடர்ச்சியாக வைத்திருப்பதன் ஊடாக மலிந்த கூலிகயைப் பெறும் நோக்குக் கொண்டதாக நிலப்பிரபுத்துவத்திற்கும் ஏகாதிபத்திய கட்டத்திலும் இது தொடர்கின்றது.
குறைவளர்ச்சி கொண்ட முதலாளித்துவ சமூகத்தில் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் மற்றைய மனிதர்களை மற்றவர்களிலும் கீழாக நடத்துவதை காணமுடிகின்றது. மூளை உழைப்பை கொண்டு சமூக பொது நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். மற்றவர்களை தாழ்த்துகின்றனர். இவர்கள் உயர்ந்த சாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  இவ்வாறான வேளையில் இரண்டை பாகுபாட்டை மனிதர்கள் எதிர்க்கொள்கின்றார்கள்.
இதில் தலித்துக்கள் என்று (இது இந்திய பின்புலத்தில் இலங்கையில் திணிக்கப்பட்ட ஒரு சொல்லாடல். ஏனெனில் 1960 களில் சாதிய எதிர்ப்புப் போராட்டத்தில் வர்க்க ரீதியாக அணிதிரட்டியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.) சொல்பவர்கள் அதிகாரத்தில் இருக்கின்ற போது அங்கு மற்றைய மனிதர்களை கீழாகப் பார்க்கும் செயற்பாடுகள் இருக்கின்றது. இதனை அன்றாட வாழ்க்கையில் காணமுடியும். மனிதரை கீழாக நடத்துவதற்கு குறிப்பிட்ட சாதியில் மாத்திரம் பிறந்திருக்க வேண்டியதில்லை.
முன்னர் குறிப்பிட்டது போன்று சமூகத்தின் உறுப்பினரை உளரீதியாக பலவீனப்படுத்துவது. ஏன் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளின் போது கணவன் அல்லது மனைவியே ஒரு சாதியை அல்லது ஒரு மிருகத்தின் பெயரை குறித்து அழைப்பது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இங்கு தனிநபர்களின் ஆத்திரம் இவ்வாறான சொற்தொடர்களை பயன்படுத்தும் போது அதற்கான தாக்கம்  ஒன்றே. அவ்வாறு தாழ்த்தும் நோக்கோடு அல்லது ஆத்திரத்தை காட்டும் நோக்கோடு பயன்படுத்தும் சொற்களினால் எதிர்ப்படும் விழைவுகள் விரும்பத்தற்கரியது அல்ல.
அன்றாடம் சிறுவர்கள் தம்மிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும் போது மற்றைய சக சிறுவனை அல்லது சக மாணவனை சாதி கூறி அழைப்பது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆக சாதிய அல்லது மற்றைய மனிதனை தாங்கும் நோக்கோடு மொழியில் சாதி பயன்படுத்தப்படுபவை எல்லா சமூக மட்டத்திலும் இருக்கின்றது.
இந்திய, இலங்கைச் சூழலில் சாதிய வெறியை குறிப்பிட்ட சாதிக்குரியதாகக் கொள்ள முடியாது. தம்மை உயர் சாதியாகவும், இடைநிலைச் சாதிகளாகவும் கொண்டவர்களிடையேயும் புரையோடிப்போய்யுள்ளது. ஆனால் நடைமுறையில்பார்ப்பணியம், சைவவேளாளச்என்ற நிலமானியச் சிந்தனை என்று சாதிகளின் ஆதிக்கத்தைக் குறித்த வசையாடல், குற்றச் சாட்டுகள் இன்றைய அரைநிலபிரபுத்துவ,  குறைவிருத்தி கொண்ட முதலாளித்துவ சமூக உறவில் மேற்கொள்ளப்படுகின்றது. இன்றையச் சமூக அமைப்பில் ஒரு பிரதேசத்தில் இருக்கின்ற ஆதிக்கச் சாதியின் தொகையினை இட்டு அதன் பரிமாணங்கள் மாற்றமடைகின்றது. இங்கு ஒரு சாதிக்கு கீழ் அல்லது படிமுறையில் இருக்கின்ற மேல்சாதிகள் இன்னொரு சாதியின் மீதான ஆதிக்கத்தை செலுத்துபவர்களாகவே இருக்கின்றார்கள். குறிப்பாக  இலங்கையை தமிழ்பகுதிகளை  எடுத்துக் கொண்டால் முழுமையாக கலப்புச் சாதிகளைக் கொண்ட குடியிருப்புக்கள் என்பது கிராமப் புறங்களில் இல்லை. இதே வேளை நகர்ப்புறத்தினை எடுத்துக் கொண்டாலும் குறிப்பிட்ட இடப்பெயர் குறிப்பிடும் போது சாதியின் பெயரை அறிந்து கொள்ள முடியும். 
இவ்வாறான வேளைகளில் சாதிய மோதல்கள் தாராளமாக நடைபெற்றுவந்துள்ளது. ஆனாலும் இது யுத்தம் தொடங்கிய பின்னால் அதன் வேகம் தளர்த்தப்பட்டது. ஆனாலும் சாதிய மோதல்கள் முள்ளிவாய்க்காலுக்கு முந்திய ஆண்டுகளின் நடைபெற்றுவந்துள்ளது. குறிப்பாக யுத்த நிறுத்த காலத்தில் சாதி மோதல்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னர் குறிப்பிட்டதைப் போன்று சாதியம் தேசியப் போராட்டத்தின் போது உறக்கநிலையில் இருந்துள்ளது. எத்தனையோ இழப்புக்களையும், அன்பானவர்களின் உதிரத்தையும் சந்தித்த சமூகம் அதன் சாதிய உணர்வை  மறைத்துக் கொண்டுதான் இழப்புக்களையும் சந்தித்திருக்கின்றது.  அங்கு மரண அவலம் என்பது ஒற்றுமையைக் உணர வைத்திருந்தாலும் மனிதர்களின் அகவுணர்வின் தாக்கம் அமைதியின் பின்னால் வெளிப்படுகின்றது. ஓரு உயர்ந்த இலட்சியம் இருந்தால் மாத்திரம் போதாது உயர்ந்த சிந்தாந்தமும் இருந்திருக்க வேண்டும். ஆனால் உயர்ந்த சிந்தாந்த வழிநடத்தில் என்பதும், இந்தச் சமூகத்தை கறாராக கேள்விக்கு உட்படுத்தும் சித்தாந்த வழிகாட்டில் இல்லாமை சாதிய விழுமியங்களை தொடர்ந்தும் உயிர்வாழ வைக்கின்றது.   இவ்வாறான குறைபாடுகளைக் கொண்ட போதிலும் சாதியக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படவேயில்லை என்பது தவறான பார்வையாகும். பல தவறுகள், குறைபாடுகள் என்பது மாற்றத்திற்கு உள்ளாகிவில்லை என்ற அர்த்தத்தில் இருக்க முடியாது.
மனிதர்களின் அகவுணர்வில் மாற்றங்களை புறநிலை யதார்த்தங்களை மாற்றுவதன் ஊடாகவே சாத்தியமாகும். புறநிலை யதார்த்தம் கல்வி, புதிய பண்பாட்டுத் தேடல், பொருளாதார நிலைகளில் சமமான வேலைவாய்ப்புக்களை நவீன மயப்படுத்தலின் ஊடாக செயற்படுத்தல் வேண்டும். இவற்றை நிவர்த்தி செய்வது இந்த பொருளாதார அமைப்பில் சாத்தியம் இல்லை.  இந்தப் பொருளாதார அமைப்பு முழுமையாக மாற்றத்தினை செய்து கொள்ள அனுமதிக்கப் போவதில்லை. மாற்றங்களை தடுப்பதற்கு நிறுவனமயப்பட்ட சட்டம், குடும்பம், தொழிற்துறை அமைப்புக்கள் துணைநிற்கின்றது.
மொழியாடல்கள் என்பது அரசியல் சிந்தனை வடிவத்தில் எற்படுகின்ற முதிர்ச்சியைக் கொள்கின்ற போது அரசியல் தளத்திலும் தாக்கத்தைக் கொடுக்க முடியும்.  தமிழகத்தில் நடைபெற்ற ஆணவக் கொலை தொடர்பான எதிர்வினையை செய்கின்ற போது ஒரு அரசியல் முதிர்ச்சியற்ற கோசத்தை முன்வைக்கப்பட்டது. அதாவது ‘‘நான் உயர்சாதியைச் சேர்ந்தவர்- நான் ஆதிக்கச் சாதி; ஆணவக் கொலைகளை எதிர்ப்பவள்  அல்லது எதிர்ப்பவன்‘‘
 இது தறவான முன்மாதிரியான கோசம் என பலர் சுட்டிக் காட்டினார்கள். அவர் வைத்த கோசம் அடையாள அரசியலின் வெளிப்பாட்டில் அமைந்தது. அது கூட அவரின் தனிமனிதப் பிரச்சனை அல்ல. மாறாக அவ்வாறு சமூகமயப்படுத்தப்பட்ட நிலையில் எழுத்ததாகும். 
முகப்புத்தகத்தோழர் பின்வருமாறு எழுதியிருந்தார்.----- நான் சாதி அற்றவர்- அனைத்து சாதிக் - வன்முறை- ஆணவக்கொலைகளை எதிர்க்கின்றேன். - இதுதான் ஒரு ஜனநாயக வடிவமான கோசமாக இருக்க முடியும் மாறாக நான் உயர் (?? ) இங்கு உயர் என்பதே அபர்த்தமானதுதான். ஏனெனில் சாதியப் படிமுறையில் ஒன்றின் கீழ் ஒன்றாக உள்ளாக கீழானவர்களாக அல்லது மேல் என்ற கருத்தியல் தளம் தான் இருக்கின்றது.   நான் உயர்ந்த சாதி என்பது அடிப்படையில் தலித்தியவாதத்தின் அடையாள அரசியலின் தோல்வியை சுட்டிக் காட்டுகின்றது.

குறிப்பாக 1990 பின்னரான காலத்தில் கோட்பாட்டுப் பிரச்சனைகள், சமூகம் பற்றிய ஆய்வுகள் என் இன்றுவரை அறிவார்ந்த விவாதத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது இல்லை. ஆனால் சில நபர்கள் செய்த போது அவர்கள் சமூக விஞ்ஞானப் பார்வையை வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு மற்றவர்களை தமது புலமையை வைத்து முத்திரை குத்திவிட்டுச் சென்றார்கள். ஆனால் சமூகத்தை அறிவார்ந்த ரீதியாக ஆராய ஊக்குவிக்கப்பட வில்லை அல்லது திருப்தி கொள்ளும் படியாக இருந்தது இல்லை. இன்றும் கூட வெவ்வேறு பிரிவுகளாக பிரிந்திருக்கும் இடதுசாரிய அமைப்புகள் அது அறிவியல் ரீதியாக சிந்திக்கும் முன்னணி சக்திகளை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையில் செயற்படவில்லை. ஒரு கோட்பாட்டுத் தளத்திற்கு நகர்த்தி விவாதித்தால் நிறைய படிப்பினைகள் பெற முடியும். 
சாதிய- மத அமைப்பில் பிறக்கின்ற போதே அந்தச் சாதியின் அங்கமாகத் தான் பிறக்க முடியும் அதற்கு அப்பால் அதற்கு அப்பால் இருக்க முடியாது. அறிவார்ந்த ரீதியாக சிந்திக்கின்ற போது அதில் இருந்து குறிப்பிட்ட அளவுதான் வெளிவர முடியும். அந்த வட்டத்தில் இருந்து வெளிவர நாளாகும். ஆனால் அதனை விரைவு படுத்துவது புரட்சிகர தத்துவம் மாத்திரமே. ஆனால் சமூகமயப்படுத்தப்பட்ட விழுமியங்களில் இருந்து இலகுவாக வெளிவர முடியாது. அவ்வாறு உடனடியாகவே வெளிவர முடியும் என்பதே கற்பனை வாதமாகும். சமூகத்தில் இருந்து வெளிப்படும் அனைத்தும் சமூகத்தின் உற்பத்தியாகும். இது தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கப்பால் நிகழ்வதாகும்.

No comments:

Post a Comment